<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தாயாகி.... தந்தையாகி...

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
வளர்வது, படிப்பது, வேலையில் அமர்வது, காதலிப்பது, திருமணம் செய்துக் கொள்வது, பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது,அவர்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருவது, ஓய்வு பெறுவது, உலகத்தை விட்டு செல்வது என்று சாதரணமாகச் சொல்வது அல்ல வாழ்க்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் பெரிய பெரிய சந்தோசங்கள்,இழப்புகள்,துன்பங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யம் மிகுந்ததாகவும் ஆக்குகிறது.

திருமண வயதில் "கல்யாணம் பண்ணிக் கொள்" என பெற்றோர்கள் கேட்கும் போது உள்ளுக்குள் ஆசையிருந்தாலும் "இப்போ என்ன அவசரம்?". திருமணம் ஆன பின் "குழந்தைப் பெற்றுக் கொள்" என்று அதே பெற்றோர்கள் கேட்ட போது "இப்போ என்ன அவசரம்?" என்று அவர்கள் வாயை அடைக்க முடிந்ததே தவிர, சமூகத்தின் வாய்களுக்கு அவல் ஆகி எங்களை மென்றுக் கொண்டிருந்ததால் சமூகத்தின் வாயை அடைக்க முடியவில்லை. அது என்ன சாபக் கேடோ சமூகத்தின் எல்லா பழிச் சொற்களும் பெண்ணைத் தான் சேருகிறது. சமூகத்தை தூக்கி எறிந்து தன் வழிச் செல்லும் புரட்சி தம்பதிகளல்ல நாங்கள். சமூகத்திலிருந்து பாயும் ஈட்டி ஒரு மனைவியை நோக்கியிருந்தாலும், இரணமாகிப் போவது இருவருமே. ஒவ்வொரு இயற்கைச் சுழற்சியிலும் ஏமாந்து வானம் பார்த்து கண்ணீர் விடும் பூ.

என் மனையின் வயிற்றிலும் ஜனித்தது ஓர் உயிர். எதிர்பார்த்தது கிடைத்ததில் மகிழ்ந்த உள்ளம், நிலைக்க வேண்டி வருந்தியது. எங்கோ தூர தேசத்தில் உறவுகளை பிறிந்து வந்த நிலையில் நான் மட்டுமே ஒரே உறவு என வரப்போகும் உறவுக்காக என்னிடம் அவளை முழுமையாக ஒப்படைத்தாள். என் சிந்தையெல்லாம் அவள் மீது குவிந்த நிலையில் பல நிகழ்ச்சிகள் என்னை பரவசப்படுத்தின.

மசக்கை காரணமாக பல்லில் தண்ணீர் பட்டாலும் சிறுகுடலையும் வெளியில் தள்ளி விடும் அளவிற்கு வாந்தி என் மனைவிக்கு. உண்ண பிடிக்காமல் சுருண்டு படுத்திருக்கும் என் மனைவிக்கு அவளின் மனம் புயல் ஆட்டு வித்த ஊஞ்சல் போல முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தன. பெண்களின் ஆரம்ப கர்பகாலங்களில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ற மாதிரி மனமும் பேய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்குமென முன்னமே தெரிந்திருந்ததால் மனைவியின் கோபமும், அழுகையும், சிரிப்பும் வரப்போகும் குடும்பத்தின் புதிய வரவுக்காக ஒன்றுமில்லாமல் போய் விட்டது. சில அழுகைகள் தவமிருந்தாலும் கிடைக்காத ஞானத்தை அள்ளி வழங்கிவிட்டுப் போனது.

அடங்காத பசி, நிற்காத வாந்தி. வாந்தி எடுக்க ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல் பாத்ரூமுக்கு ஓடி ஓடி தொண்டையும் வயிறு வலிக்க வந்து அமர்ந்த என் மனைவியின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர். அவள் தாயை நினைத்து அழுதுக் கொண்டிருந்தாள். வீட்டில் ஒரே பெண் ஆகையால் பிடிவாதத்தால் நிறைய தடவை தாயின் மனம் நோகப் பேசியிருக்கிறாள். "இவ்வளவு கஷ்டத்தையும் என் தாயும் அடைந்திருப்பாளே, இதையும் மீறி நான் வேறு கொடுத்த கஷ்டங்கள்..."-இது தான் அழுகையின் காரணம். என் தாயும் இதே கஷ்டத்தை தானே என்னை பெற்றெடுக்கும் வேளையில் அடைந்திருப்பாள்.

திடீரென அடிக்கடி நள்ளிரவில் கர்ப்பம் காரணமாக கால் நரம்புகள் சுண்டியிழுக்க, வலியால் காலை அசைக்க முடியாமல் துவண்டுப் போனாள்.என் தாயும் இதே கஷ்டத்தை தானே என்னை பெற்றெடுக்கும் வேளையில் அடைந்திருப்பாள்.

வயிற்றின் பாரம் தாங்காமல் முதுகு வலியால் துடிக்கும் அந்த கணங்கள் என் தாயும் தானே என்னை பெற்றெடுக்கும் வேளையில் அடைந்திருப்பாள். படைப்பதை மட்டுமே செய்கிறவனை விட படைத்துக் காக்கிறவள் எவ்வளவு மேன்மையானவள்.

வீட்டில் பெரியவர்கள் இருந்திருந்தால் எல்லா நேரமும் எதாவது அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்ற குறையை www.babycenter.com -ம், "what to expect" என்ற புத்தகமும், டாக்டரின் அருமையான அறிவுரைகளும் தீர்த்து வைத்தன.

7வது மாத முடிவில் மனைவியை இந்தியா அனுப்பிவிட முடிவுச் செய்த போது என் மனைவி பிள்ளையை கருவில் சுமக்க மனதில் என்னை சுமக்க, நான் மனதில் இருவரையும் சுமக்க எங்கள் மனதும் கனத்தது.

ஒன்பதாவது மாதம் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்த நிலையில் காலையில் நீர்குடம் கசிய ஆரம்பிக்க, என் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலையில் நான் அவர்களை தொலைப்பேசியில் அழைத்தப் போது, இன்னும் பிரசவ வலி ஆரம்பிக்கவில்லை என்றார்கள். வலியில்லாத நிலையில் குழந்தையின் எடை அதிகமாயிருந்த அந்த வேளையில்,நீர்குடம் கசிய ஆரம்பித்த நிலையில் 90 விழுக்காடு சிசேரியன் தான் என்று முடிவுச் செய்யப்பட்டிருந்தது. முதல் மாதம் முதல் அந்த மாதம் வரை அடிக்கடி மனைவி சொல்லுவது "செத்துப் போயிருவோமோன்னு எனக்கு பயமா இருக்குங்க?", சில நேரங்களில் மனைவிக்கு தைரியம் சொல்ல திரணியில்லாத போதும் அதட்டலாக "இங்க பாரு இப்படியே பிரசவிக்கும் எல்லா அம்மாக்களும் செத்துப் போயிருந்த நீயும் நானும் வந்திருக்கவே மாட்டோம்".

மதியத்திற்கு பிறகு பிரசவவலி ஆரம்பிக்க இயற்கை பிரசவித்திற்கு தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். 12 பெப்ரவரி இரவு 8:30 மணிக்கு ஆண் குழந்தையை இயற்கையாகப் பெற்றெடுத்தாள். பிறகு பேசும் போது கேட்டேன் "என்னவோ பயந்துட்டிருந்தே?" அதற்கு என் மனைவி "எங்கிருந்து தான் எனக்கு அந்த தைரியம் வந்ததோ தெரியலைங்க. வலியை விட புள்ளைய பார்க்கனுங்கிற ஆவல் தான் என் கிட்ட இருந்திச்சி அந்த நேரத்தில". அற்புதம் இங்கே தான்.

பிரசவம் முடிந்த சில மணித்துளிகளில் குழந்தையை தாயின் பக்கத்தில் படுக்க வைத்திருக்க "உங்க உங்க"-வென என்று பையன் அழுதுக் கொண்டிருக்க, என் மனைவி அவன் கன்னத்தில் கை வைத்தவுடன் அழுகையை நிப்பாட்டவும், கையை கன்னத்திலிருந்து எடுக்கவும் திரும்ப "உங்க உங்க" தான்.

எதிர்பாரவிதமாக சீக்கிரமே மனைவி பிரசவம் ஆகிவிட்டதால் உடனே ஊருக்கு கிளம்ப முடியாமல் போனும் கையுமாக இருந்த அன்றைய நாள் "சுகப்பிரசவம், தாயும் சேயும் நலம்" என்ற என் தந்தையின் செய்தியுடன் சிறப்பாகியது. பிறந்த ஒரு மணி நேரத்தில் என் தாயின் மடியில் என் மகன் அழுதுக் கொண்டிருக்க, நான் தொலைப்பேசியில் அழைத்த போது என் தாயர் "உன் மகனின் குரலைக் கேள்" என செல் போனை அவன் வாயின் அருகில் வைக்க, அவன் அழுகை சத்தத்தால் சொல்ல முடியாத இதுவரை அடையாத ஓர் உணர்ச்சி என்னை ஆட்டுவித்தது. என் கண்களில் என்னையுமறியாமல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
வாழ்த்துக்கள் விஜய். என்ன மகளிர் தின சிறப்பு பதிவா?
 
நன்றி அனானிமஸ். ஊரிலிருந்து வந்ததால் போட்ட டைரி குறிப்பு பதிவு. சிறப்பு பதிவு ஆகிவிட்டதா?
 
விஜய் அருமையான எண்ணங்கள். படிக்கும் போது நெஞ்சை தொட்டு விட்டது.
 
ஒரு புதுத்தந்தையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் விஜய் ! ஒப்பனையில்லாத எளிய வார்த்தைகள் உங்கள் உணர்வுகளை அப்படியே எங்கள் மனதுக்க்ள் கொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறது....
 
நன்றி கங்கா, பாலு மணிமாறன்
 
வாழ்த்துக்கள் விஜய்!

வாழ்வின் மற்றுமொரு முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறீர்கள்.
 
வாழ்த்துக்கள் விஜய்.

மிகவும் அருமையான நடையில் எழுதி இருக்கிறீர். நெஞ்சைத்தொடும் பதிவு.

இப்போதும் தாயும் சேயும் நலம்தானே? குழந்தை - entertainment unlimited ஆக இருக்க வாழ்த்துக்கள்.
 
welcome to the club :)
 
நன்றி சுரேஷ், கோபி, இளவஞ்சி.
 
வாழ்த்து.
 
This comment has been removed by a blog administrator.
 
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி...
 
யதார்த்தமான பதிவு விஜய். ஒரு ஆணாய் குழந்தையைப் பெறுவதைப் பார்க்க இவ்வளவு நெகிழ்வாயிருக்கிறது என்றால், ஒரு பெண் இந்த அனுபவத்தை எழுதினால் இன்னும் எவ்வளவு நெகிழ்வாய் இருக்கும்.
//படைப்பதை மட்டுமே செய்கிறவனை விட படைத்துக் காக்கிறவள் எவ்வளவு மேன்மையானவள்.//
உண்மையான வார்த்தைகள்.
தாயும், சேயும் நலமாக இருக்கவும், விரைவில் நீங்கள் எல்லோரும் ஒரிடத்தில் சேரவும் வாழ்த்துக்கள்.
ம்... இனி Bloggersன் Kiddiesயிற்கு ஒரு கூட்டுப்பதிவொன்று விரைவில் தொடங்கவேண்டும் போலத்தான் தோன்றுகிறது :-).
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
வாழ்த்துக்கள் அல்வாசிட்டி அண்ணாச்சி. குழந்தைக்குப் பெயர் வைத்தாகிட்டா?
டி.சே "ஒரு பெண் இந்த அனுபவத்தை எழுதினால் இன்னும் எவ்வளவு நெகிழ்வாய் இருக்கும்.
//படைப்பதை மட்டுமே செய்கிறவனை விட படைத்துக் காக்கிறவள் எவ்வளவு மேன்மையானவள்.//"
“ரச்” பண்ணிட்டீங்க
 
வாழ்த்துகள் விஜய்! உங்களைப் போட்டுத்தாக்கறதுக்கு ஆள் வந்தாச்சா! :))
 
// உங்களைப் போட்டுத்தாக்கறதுக்கு ஆள் வந்தாச்சா! :))//

அப்படிப்போடு:-))
 
வாழ்த்துக்கள் விஜய்!
 
வாழ்த்துக்கள் விஜய்!
அண்ணாச்சி! அக்காச்சிய (எதிரப்பால்) கவனமாப் பாத்துக்கோங்க.
 
This comment has been removed by a blog administrator.
 
வாழ்த்துக்கள் விஜய்!

//Radhakrishnan said...
வாழ்த்துகள் விஜய்! உங்களைப் போட்டுத்தாக்கறதுக்கு ஆள் வந்தாச்சா! :))
//

:))
 
அருமையான பதிவு விஜய்.
ஒரு தந்தையின் உணர்வைக் கொஞ்சமேனும் இதில் படிக்க முடிந்ததில் சந்தோசம்.
உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் புரிந்துணர்வோடும் நடந்துள்ளீர்கள் போலத் தெரிகிறது.
சந்தோசமான விடயம்.
வாழ்த்துக்கள்.

நட்புடன்
சந்திரவதனா
 
இன்னும் பதினைந்து பெற்றுப் பெருவாழ்வு வாழ்க நண்பா(எங்கே அல்வா)
 
ஊருக்குச் சென்று திரும்பிவிட்டீர்களா, தாயும் சேயும் நலம்தானே. அனுபவத்தை அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.

ஒவ்வொரு இயற்கைச் சுழற்சியிலும் ஏமாந்து வானம் பார்த்து கண்ணீர் விடும் பூ.இந்தவரி மிக அருமை.
 
வாழ்த்துக்கள் விஜய்!
 
congrats. all the best
arul
 
தனித்தனியாக தான் வாழ்த்துக்கு நன்றி சொல்லிக் கொண்டு வந்தேன். சக வலைப்பதிவாளர்களின் வாழ்த்து மழையில் நனைந்த போது திக்குமுக்காடி விட்டேன். வாழ்த்துக்கள் சொன்ன அன்பு சக வலைப்பதிவாளர்கள் + வாசகர்கள் அனைவருக்கும் மொத்தமான என் நன்றி.

தாயும் சேயும் நலம்.

என் மனைவி இந்த அனுபவத்தை எழுதுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அதற்காக வாய்ப்பு கிடைக்கும் போது எழுதப் போவதாக சொல்லியிருக்கிறார்.

மூர்த்தி! நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. இந்தியாவில் கடைசிபட்ச முயற்சி என்றில்லாமல் எல்லாருமே சிசேரியன் என்ற பெயரில் கத்தி தான் வைக்கிறார்கள். மருத்துவம் காசு ஒன்றே குறிக்கோள் என்பதே ஆச்சு. என் மனைவிக்கும் அதே நிலை தான் ஏற்பட்டிருக்கும். ஆனால் தெரிந்த டாக்டர் ஆகையாலும் 2 தலைமுறைகளாக அவர்கள் குடும்பத்திற்கு பிரசவர் பார்த்துவரும் வயதானவர் என்பதாலும் பொறுமை காத்தார்.

ஆஸ்பத்திரிகளை நினைத்தால் மனசு கஷ்டமாகத் தான் இருக்கு.
 
beautifully told!
wishes for the new member in your family!
 
ஒரு பொடிச்சனிடமிருந்து ஒரு பொடிச்சிக்கு நன்றி
 
நன்றி செல்வ நாயகி அக்கா, மன்னிக்கனும். "babytalk"-ன்ன என்னக்கா?

babycenter.com ஒரு அருமையான வலைத்தளம் குழந்தை பெற நினைக்கிறவர்கள்/ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தை உடையவர்கள்/ஒரு வயதுக்கும் மேற்பட்ட குழந்தை உடையவர்கள் சென்று பயன்பெற வேண்டிய ஒரு வலைத்தளம்.
 
தாமதமான மனம் நிறைந்த வாழ்துக்கள். (மகன் வந்த காரணத்தாலேயே பல பதிவுகள் படிக்க முடியாமல் இதை தவறவிட்டிருக்கிறேன். வருக! தூக்கமற்ற இரவுகளை பெருக!)
 
என்னிடம் சொன்ன மாதிரியே எழுதிட்டீங்களே! புது வரவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->