<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஷூ

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
என் தங்கையிடம் இருந்த ஒரே செட் ஷூ நேற்று கொஞ்சம் பிய்ந்து விட்டது. அந்த ஷூவை தான் அவள் பள்ளிக்கு அணிந்துச் சென்றுக் கொண்டிருந்தாள். என் தங்கையை விட நான் இரண்டு வயது தான் மூத்தவன். ஒரு நல்ல ஷூ வாங்க கூட எங்கள் குடும்பத்தின் வறுமை அனுமதிக்கவில்லை. என் தந்தை வீட்டுக்கு கொண்டு வரும் பணம் பத்துவதில்லை. இந்த நிலையில் புது ஷூவை பற்றி எண்ணிக் கூட பார்க்க முடியாது. எப்படியாவது என் தங்கையின் ஷூவை செருப்பு தைப்பவரிடம் கொடுத்து தைத்து விட வேண்டும். ஷூவை எடுத்துக் கொண்டு தைக்க கிளம்புகிறேன்.

"வரும் போது அந்த முக்கு கடையிலே உருளைக்கிழங்கு ஒரு அரைக்கிலோ வாங்கிட்டு வாடா" என்றது என் தாயாரின் குரல். என் தாய் இப்போது தான் மூன்றாவதாக என் தம்பியை ஈன்றெடுத்திருந்தாள். ஷூவை செருப்பு தைப்பவரிடம் கொடுத்து தைத்த பிறகு 2 ரூபாய் கொடுத்து விட்டு கிளம்பினேன். நேராக முக்கு பலசரக்கு கடைக்கு போய் உருளைக் கிழங்கு வாங்க போனேன். கையில் இருந்த ஷூவை ஒரு பாலிதீன் பையில் சுருட்டி கடைக்கு முன்னாடி அந்த பழைய டப்பா பக்கத்தில் வைத்து விட்டு உள்ளே சென்று உருளைக்கிழங்கை பொறுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது பழைய சாமான் வாங்குகிறவன் கடைக்கு முன் வந்து கடைக்காரனிடம் அங்கிருக்கும் பழைய சாமான்களை எடுத்துக் கொள்வதாக சொன்னது என் காதில் விழுந்தது.

உருளைகிழங்கை நிறுத்தி விட்டு கடைக்காரனிடம் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளும்படி சொன்னேன். கடைக்காரன் கடுப்பில் என்னை முறைத்துக் கொண்டே "ஏற்கனவே பழைய பாக்கி நிறைய இருக்கு சீக்கிரம் எல்லாத்தையும் வீட்டுல அடைக்கச் சொல்லு" என்று சொன்னார். வீட்டில் சொல்கிறேன் என்று கடைக்காரனுக்கு பதில் சொல்லிவிட்டு என் தங்கையின் ஷூ வைத்த கவரை எடுக்கச் சென்றேன். அதிர்ச்சி. நான் வைத்த இடத்தில் அந்த ஷூ உள்ள பாலிதீன் பை இல்லை. முக்கு கடையில் காய்கறி வைத்திருந்த பெட்டிகளுக்கு இடையில் தேடுகிறேன். என் இதயம் படபடவென்று அடிக்கிறது. ஷூவை காணோம். தக்காளி வைத்திருந்த பெட்டியை கொஞ்சம் முன்னாடி இழுத்து இடைவெளியை பெரிதாக்கி கையை நுழைத்து தேடுகிறேன். எதிர்பாராமல் தக்காளி பெட்டி முன்னிருந்த மற்ற பெட்டிகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சரிய, கடைக்காரன் அலறி கொண்டு ஓடி வந்தான். வாயில் சொல்லக் கூடாத கெட்டவார்த்தையால் என்னை துஷித்தான். நான் என் ஷூவை தேடுவதாக சொன்னேன். அங்கிருந்த ஒரு கட்டையைக் எடுத்துக் கொண்டு என்னை அடிக்க ஓடிவந்தான்.

நான் ஓடினேன். என் அழுகை கண்ணில் முட்டிக் கொண்டு வந்தது. பாவம் என் தங்கை. ரொம்ப சின்ன பெண். நாளைக்கு பள்ளிக்கு எந்த ஷூவை போட்டுச் செல்வாளோ. நான் எப்படி அவளுக்கு சமதானம் சொல்லப் போகிறேன். என் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே வீட்டுக்கு ஓடுகிறேன். வீட்டில் நுழைந்ததும் வீட்டுக்காரர் பல மாதங்களாக கொடுக்க வேண்டிய வாடகையை கேட்டு என் தாயாரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். "உம் புருஷனுக்க்கு வருமானம் சரியில்லைன்னா நீ வேலை செய்ய வேண்டியது தானே. இப்படியே சொகுசா இருக்கனும்னு நினைச்ச எனக்கு வீட்டு வாடகையே வராது" என்று கத்திக் கொண்டிருந்தார். என் தாயார் பக்கத்து மச்சி வீட்டு துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்ததால் மிகவும் பலவீனமாகயிருந்தால் என் தாய். அதே பலவீனத்துடன் ஒரு பெரிய போர்வையை நீரில் நனைத்து துவைத்துக் கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் "உள்ளே உன் தங்கச்சி குழந்தைய தூங்க வச்சிட்டிருக்கா. நீயும் அவளும் உருளை கிழங்கை உரிச்சி வைங்க" என்றாள். மெள்ள தயங்கியபடியே வீட்டினுள் காலடி எடுத்து வைத்தேன்.என் தங்கையை எதிர்கொள்ள எனக்கு தைரியமில்லை. என் தலையைப் பார்த்ததும் என் தங்கையின் முகம் மலர்ந்தது. என்னை பார்த்து கேட்டாள் "ஷூ ரிப்பேர் பண்ணீட்டியா அண்ணா". என் கண்ணில் நீர் துளி லேசாக எட்டிப்பார்த்ததைக் கண்டு அவள் முகம் சுருங்கியது. மெதுவாக தயங்கியபடியே ஷூ தொலைத்துப் போனதைச் சொன்னேன். உணர்ச்சிகள் கொப்பளிக்க "நாளைக்கு எதை போட்டு ஸ்கூலுக்கு போவேன். நல்ல அந்த கடையில் தேடிப்பார்த்தியா?" என்றாள்.

திரும்ப அந்த கடைக்கு சென்று பார்த்துவிடுவது என்ற உறுதியுடன் வீட்டை விட்டு கிளம்பினேன். என் தாயார் நான் ஒடுவதைப் பார்த்து "உருளைகிழங்கு சரி பண்ணாமா எங்க ஓடுறான் எல்லாம் ஒரே மனுசியா பார்க்கனும்னா முடியுதா?" என்று கத்தினாள். அந்த கடை பக்கம் போனதும் திரும்ப கடைக்காரன் என் தலையைப் பார்த்ததும் விரட்டினான். என் தந்தை வேலையிலிருந்து திரும்பியிருந்தார். அம்மா என்னைப் பற்றி அப்பாவிடம் சொன்னதும் என்னை திட்டினார். "நான் உன் வயதில் இருந்த போது வீட்டுக்கு எத்தனை வேலை செஞ்சிருக்கேன் தெரியுமா? சாப்பிடுறது, விளையாடுறது, படிக்கிறது, தூங்கிறது மட்டும் உன் வேலையில்லை. அம்மாக்கு உடம்பு சரியில்லை. நீயும் தான் வீட்டு வேலையை பார்க்கனும்" என்றார். என் அம்மாவை பார்த்து பக்கத்து வீட்டு துணி துவைத்ததை கண்டித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். "நீ இந்த நிலமையில ரெஸ்ட் தான் எடுக்கனும். இப்படி எல்லாம் வேலை செஞ்சா பிடிக்காது" என்றார்.

நானும் என் தங்கையும் படிக்க உட்கார்ந்தோம். என் அப்பாவின் ரத்தக் கொதிப்பு அடங்காமல் இன்னும் எதை எதையோ சொல்லி கத்திக்கொண்டிருந்தார். என் தங்கை ஒரு பேப்பரில் "நான் ஷூவுக்கு என்ன செய்வேன். நான் அப்பாவிடம் நீ ஷூ தொலைத்ததைச் சொல்லப் போகிறேன்" என்று எழுதி என் அப்பாவுக்கு தெரியாமல் மெதுவாக அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் அனுப்பினாள். நான் "நீ அப்பாவிடம் சொன்னால் இருவருக்கும் தான் அடி விழும். மேலும் அப்பாக்கு ரொம்ப பண கஷ்டம். நாம கஷ்டம் கொடுக்கக் கூடாது" என்று அதே பேப்பரில் பதில் எழுதி என் தங்கையிடம் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் எதையோ எழுதி திரும்ப என்னிடம் கொடுத்தாள். "அப்போ நாளைக்கு பள்ளிக்கு எப்படி போவேன்?" என்று எழுதியிருந்தாள்."நீ என் ஷூவை போட்டுச் செல்" என்று மறுபடியும் எழுது அனுப்பினேன். அவளுக்கு அதிகாலை பள்ளி ஆரம்பித்து மதியம் வரை தான். எனக்கு மதியம் ஆரம்பித்து மாலை வரை பள்ளியிருந்ததால் எப்படியாவது என் ஷூவை வைத்து சமாளித்து விடலாம் என்ற தைரியத்தில் சொல்லியிருந்தேன். என் தங்கை முகத்தில் லேசான நிம்மதி புன்னகை.

மறுநாள் காலை என் தங்கை எங்கள் பெற்றொருக்கு தெரியாமல் என் ஷூவை அணிய முயற்சி பண்ணினாள். அவள் பாவம். என் ஷூ மிகவும் அழுக்காகயிருந்தது.வெறுப்புடனே அவள் அதை அணிந்ததை உணர முடிந்தது. அந்த ஷூ வேறு அவளுக்கு ரொம்ப லூசாகயிருந்தது. நடப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டாள். பள்ளிக்கு அந்த அழுக்கான ஷூவை அணிந்து செல்வதற்கு அவளுக்கு மிக அவமானமாகயிருந்தது. அசெம்பிளி வேளையில் அவள் குனிந்து மற்ற மாணவர்கள் அணிந்திருந்த ஷூவை தான் ஏக்கமுடம் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் ஷூ யாருக்கு தெரிந்து விடக்கூடாது என காலை உள்ளுக்கு இழுத்து அந்த அவமான சின்னத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் பள்ளிகூட பையை எடுத்துக் கொண்டு தெரு முனையில் என் தங்கையின் வரவுக்காக காத்திருந்தேன். பள்ளி தொடங்க இன்னும் சற்று நேரம் தான் இருந்தது. என் தங்கையை காணவில்லை. பல நிமிடங்கள் கழித்து வேகமாக ஓடி வந்தாள். எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என் தங்கை பள்ளி முடிந்த கையோடு எங்கும் நிற்காமல் ஓடி வந்ததாகச் சொன்னாள். நான் காலில் போட்டிருந்த அந்த செருப்பை அவளுக்கு கழற்றி கொடுத்து விட்டு, தெருமுனையிலேயே, அவள் கழற்றிய ஷூவை போட்டுக் கொண்டு பள்ளியை நோக்கி ஓடினேன். நேரம் ஆகிவிட்டது. மணி அடித்து பள்ளி ஆரம்பித்து வெகு நேரம் ஆகிவிட்ட உணர்வு. யாருமே மைதானத்தில் இல்லை. பள்ளிக்குள் நுழையும் போது தலைமையாசிரியர் என்னை பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. நான் வகுப்புக்குள் ஓடினேன்.

சயாங்காலம் திரும்பி வந்த என்னை பார்த்து என் தங்கை "அண்ணா! ஷூ ரொம்ப அழுக்காயிருக்கு. போட்டு போகவே வெட்காமயிருக்கு" என்றாள். உடனே ஷூவை சோப்பு போட்டு கழுவ ஆரம்பித்தேன். என் தங்கை என்னை பார்த்து மகிழ்ச்சியாய் சிரித்தாள். எனக்கும் மிகச் சந்தோஷமாகயிருந்தது. ஷூவை கழுவி ஒரு திண்டின் மேல் காயவைத்தேன். அன்று இரவு சரியான மழை. என் தங்கைக்கு அந்த ஷூவின் மேல் தான் நினைவு. என்னை எழுப்பி "மழை பெய்து. ஷூ நனைஞ்சா நாளைக்கு ஸ்கூலுக்கு போட்டுப் போக முடியாது" என்றாள். அந்த மழையில் வெளியில் சென்று ஷூவை பத்திரப்படுத்தினேன்.

மறுநாளும் அதே கதை தான். மதியம் பள்ளியை விட்டு ஓடி வந்துக் கொண்டிருந்த என் தங்கையின் காலிலிருந்த என் ஷூ லூசாகயிருந்ததால் ஒரு ஷூ கழண்டு சாக்கடைக்குள் விழுந்தது. சாக்கடைக்குள் தண்ணீர் வேகமாக ஓடி கொண்டிருந்ததாள் ஷூவும் வேகமாக மிதந்து ஓடுகிறது.அவளும் அதைப் பிடிக்க ஓடுகிறாள். சாக்கடை உயரமாகயிருந்ததால் எட்ட வில்லை. ஒரு சிறிய பாலத்தின் கீழ் இருந்த குப்பையில் ஷூ சிக்கியது. கவலையோடு உட்கார்ந்திருந்த என் தங்கைக்கு ஒரு வயதானவர் உதவி பண்ணி ஷூவை எடுத்துக் கொடுத்தார். எனக்கு இங்கே இருப்புக் கொள்ளவில்லை. என் தங்கையை இவ்வளவு நேரமாகியும் காணவில்லை. ஒடி வந்தவள் ஷூவை கழற்றினாள். ஈரமாகயிருப்பதை கேட்டு கடிந்துக் கொண்டேன். அது சாக்கடையில் விழுந்ததாக சொன்னாள். நான் கோபப்பட்டத்தை எதிர்த்து "நான் அப்பாகிட்ட சொல்ல போறேன். நீ தான் என் ஷூவை தொலைச்சே" என்றாள். அவளை ஒரு வழியாக சமாதானப்படுத்தி விட்டு திரும்ப பள்ளிக்கு ஓட, இன்றைக்கும் லேட். இன்று தலைமையாசிரியர் என்னைப் பிடித்துக் கொண்டார். ஏன் லேட் என்று கேட்டதற்கு பல காரணங்களை சொல்லி தப்பித்தேன். வகுப்பில் நுழைந்ததும் ஆசிரியர் என்னை மிகவும் பாராட்டினார். ஏனென்றால் போன பரீட்சையில் தேறிய மூன்று பேரில் நான் தான் முதலாவது.

அன்று மாலை என் தங்கையிடம் ஆசிரியர் பாராட்டிக் கொடுத்த பேனாவை அவளிடம் ஆசையாய் வைத்துக் கொள்ளும் படிச் சொன்னேன். அவள் முகத்தில் திரும்ப ஒரு மகிழ்ச்சி. அவளின் முகத்தில் என் வாழ்நாள் பூராவும் மகிழ்ச்சி ஒன்றையே காண வேண்டும். என் தந்தை அன்று இரவு தனக்கு தோட்டக்கருவிகள் இலவசமாக கிடைத்ததாகவும், லீவு நாளில் வீடு வீடாக தோட்டவேலை செய்து காசு சம்பாதிக்கப் போவதாகச் சொன்னார். நாளை விடுமுறையாகையால் என்னையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்க்கு தோட்ட வேலைக்கு போகலாம் என்றார்.

பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நகரத்துக்கு என்னை உட்காரவைத்து, தோட்டக்கருவிகளுடன் என் அப்பா சைக்கிளில் புறப்பட்டார். நீண்ட நெடிய களைப்பான பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்தோம். வீடுவீடாக அலைந்து தோட்ட வேலையை கேட்க, யாரும் தோட்ட வேலை கொடுக்க ரெடியாயில்லை.கடைசியில் ஒரு வயதானவர் அவர் பங்களாவில் தோட்ட வேலையும் கொடுத்து, முடிந்தவுடன் செழிப்பாக பணமும் கொடுத்தார். என் தந்தைக்கு மிகுந்த சந்தோஷம். என்னை சைக்கிளில் வைத்துக் கொண்டு திரும்பும் போது "நாம நல்ல வீட்டுக்கு போயிரலாம்.உங்களையெல்லாம் நல்ல படிக்க வச்சிரலாம். அம்மாவை உட்கார வச்சி சோறு போடுவேன்" என்று சொல்லிக் கொண்டு வந்தவரை குறுக்கிட்டு "அப்பா! தங்கச்சிக்கு ஒரு ஷூ வாங்கனும்பா. பாவம் அவ பிஞ்சு போன ஷூ போட்டு ஸ்கூலுக்கு போறா" என்றேன். அப்பா "அதுக்கு என்னடா உனக்கும் சேர்த்து புது ஷூ வாங்கிரலாம்" என்றவர் சைக்கிளில் ப்ரேக் பிடிக்காமல் மரத்தில் முட்டி இருவரும் கீழே விழுந்தோம். சைக்கிளை ஒட்ட முடியாத நிலமை. ஒரு வண்டியை பிடித்து அன்று சம்பாதித்த காசை அதற்கு அழுது விட்டு வீட்டுக்கு திரும்பினோம். திரும்ப புது ஷூ என்பது எட்டாக்கனி தான்.

பள்ளியில் அன்று பள்ளி கூடத்துக்கு இடையேயிலான நெடுந்தூர ஓட்டப்பந்தயம் என்று அறிவித்திருந்தனர். விளையாட்டில் எனக்கு விருப்பம் இருந்தாலும் நான் அணிந்திருந்த ஷூவைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை என்னை கொஞ்ச கொஞ்சமாக அரித்துக் கொண்டிருந்தல் ஓட்டப்பந்தயத்திற்கான செலக்ஷனிலும் கலந்துக் கொள்ளவில்லை. மறுநாள் செலக்ஷன் லிஸ்டுடன் ஓட்டபந்தயத்தில் ஜெயித்தால் கிடைக்கப் போகும் பரிசுகளையும் அறிவித்திருந்தார்கள். முதல் பரிசை விடவும், இரண்டாம் பரிசை விடவும் மூன்றாம் பரிசு என்னை கவர்ந்தது. மூன்றாம் பரிசு ஒரு அழகான ஷூ என்றிருந்தது. செலக்ஷன் முடிந்து விட்டதால் நான் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பில்லை.

என்னுடைய PT மாஸ்டர் அறைக்கு சென்று என்னையும் போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினேன். அவர் செலக்ஷன் முடிந்து விட்டது, இனிமேல் சேர்க்க முடியாது என்று சொன்னார். அவரிடம் அழுதேன். நான் ஜெயித்துக் காட்டுவேனென சபதம் போட்டேன். என்னை மைதானத்திற்கு கூட்டிச் சென்று ஓடச் சொன்னார். என்னுடைய ஓட்டம் அவருக்கு பிடித்திருந்தது. போட்டியில் சேர்ந்து விட்டேன்.

மாலை என் தங்கையிடம் சொன்னேன் "இந்த ஓட்டப்பந்தியத்தில நான் மூணாவது பரிசு எப்படியாவது வாங்கிரனும்" என்றேன். என் தங்கை கேட்டாள் "ஏன் அண்ணா மூன்றாவது பரிசு. முதல் பரிசு வாங்கினால் என்ன?" என்று கேட்டாள். "மூன்றாவது பரிசு வாங்கினால் தான் ஷூ கொடுப்பார்கள். முதல் இரண்டாம் பரிசில் ஷூ இல்லை அதனால் அது வேஸ்ட். ஷூ கிடச்ச உனக்கு கொடுத்திருவேன்" என்றேன். "அய்யோ அம்பளை ஷூ தானே கொடுப்பாங்க. நான் எப்படி யூஸ் பண்ணுவேன்" என்றாள். "நான் பொண்ணுங்க போடுகிற ஷூ கொடுங்கன்னு கேட்டு வாங்கிகிடுவேன்" என்றேன்.

ஓட்டப்பந்தய போட்டி நாளும் வந்தது. பல பள்ளிகளிலிருந்து ஏறக்குறைய 40 பேருக்கு மேல் கலந்துக் கொள்ள போகிறார்கள். அவர்களை பார்க்க பார்க்க எனக்கு பயமாகயிருந்தது. எல்லாரும் பணக்கார வீட்டு புள்ளைங்க மாதிரியிருந்தாங்க. எல்லாருடைய அம்மா அப்பாவும் பையனுக்கு ஒட்டபந்தியத்தில கலந்துகிறதுக்குன்னே புது ஷூ வாங்கிக் கொடுத்திருந்தாங்க. என்னுடைய பழைய ஷூவைப் பார்க்க பார்க்க அவமானம் பிடுங்கி தின்றது. என் ஆசிரியர் பள்ளிக்குரிய டீ சார்ட் போடச் சொல்லிக் கொடுத்தார். அது ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியின் மறுமுனையில் யார் முதல், இரண்டாவது, மூன்றாவது சென்றடைகிறார்களோ அவர்களுக்கு தான் பரிசு.

பந்தயம் தொடங்கியது. எல்லோரும் ஓடினோம். ஓடினோம். ஓடிக் கொண்டிருக்கிறோம். ஓடிக் கொண்டிருப்போம். சோர்வு என்னை ஆட்கொண்டது. பல பேர் எனக்கு முன்னால் ஓடுகிறார்கள். என் தங்கையின் பாவப்பட்ட முகம் என் கண் முன் வருகிறது. ஷூவின்றி பள்ளிக்கு செல்லும் அவள் கால்கள் எனக்கு தெரிகிறது. ஓடுகிறேன். ஆக்ரோஷத்தில் ஓடுகிறேன். முன் செல்லும் பல பேரை முந்திக் கொண்டு ஓடுகிறேன். எல்லோருக்கும் முன்னிலையில் ஓடுகிறேன்.

ஓடும் ஓட்டத்தில் இதயம் வலிக்கிறது. மூச்சை அடைத்துக் கொண்டு வருகிறது. ஆ!!! முதலாவதாக ஓடுகிறேன். கூடாது.கூடாது. நான் மூன்றாவதாகத் தான் வரவேண்டும். ஓடும் கால்களை கொஞ்சம் மெதுவாக்குகிறேன். இருவர் முந்திச் செல்கின்றனர். மூன்றாவதாக என்னை தொடர்ந்து வந்த இன்னொருவன் என்னை தள்ளி விட்டு ஓடுகிறான். நிலைகுலைந்து கீழே விழுகிறேன். சமாளித்து எழுந்து ஓடுவதற்குள் பல பேர் என்னை முந்திவிட்டார்கள். எனக்கு ஷூ வேண்டும்... எனக்கு ஷூ வேண்டும்.... எனக்கு ஷூ வேண்டும்.... என் தங்கையின் பாவப்பட்ட மூகம்.....ஹ ஹ ஹ ஹ (மூச்சிரைப்பு) எனக்கு அந்த ஷூ வேண்டும்... எனக்கு ஷூ வேண்டும்... எனக்கே தெரியாது நான் எத்தனையாவது இடத்தில் ஓடி வருகிறேனென்று. ஓடுகிறேன். உலகம் மறந்த வெறியில் ஓடுகிறேன். ஷூவுக்காக ஓடுகிறேன். என் தங்கைக்கு புதிய ஷூவைப் பெற்றுக் கொடுத்து என்னுடைய மனதில் அரித்துக் கொண்டிருக்கும் நிலையை தூர எறிய ஓடுகிறேன். ஓடுகிறேன். கடைசி முனைக்கு வந்து ரிப்பனை தள்ளிக் கொண்டே சென்று நிலைக் குலைந்து விழுகிறேன்.

PT மாஸ்டர் என்னை எழுப்புகிறார். அவரிடம் கேட்கிறேன் "நான் மூன்றாம் பரிசு பெற்றேனா?". PT மாஸ்டர் சொல்கிறார் "நீ முதல் பரிசு பெற்றிருக்கும் போது உனக்கு எதுக்கு மூன்றாம் பரிசு". மாஸ்டருக்கு பெருமை தாங்க முடியவில்லை. ஆனால் எனக்கு தோல்வியே. எனக்கு பரிசாக ஷூ கிடைக்கவில்லை. என் தங்கைக்கு திரும்ப வெற்றுக்கால்கள் தான். பல பேர் என்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். என் குனிந்த தலையுடனேயே என் கண்ணில் ஒழுகிய கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறேன். என் தங்கைக்கு ஷூ.....

தொங்கிய தலையுடனே வீட்டிற்கு திரும்புகிறேன். ஆர்வமுடன் என்னை கண்ட என் தங்கை என் வாடிய முகத்தை கண்டு முகம் சுருங்கினாள். என் தாய் அவளை கூப்பிட ஓடி சென்று விட்டாள். மெதுவாக என் காலில் உள்ள ஷூவை கழற்றுகிறேன். ஷூவின் அடிப்பாகம் முழுவது தேய்ந்து ஓட்டை விழுந்திருந்தது. இன்னொரு ஷூவின் அடிப்பாகம் பிய்ந்து தொங்கியது. என் காலின் பெரு விரல், அடிப்பாகம்,குதிகால் என பல இடங்களில் தோல் உரிந்திருந்தது. என் காலில் தோல் உரிந்த இடத்திலிருந்த எரிச்சலை விட என் மனதில் எரிச்சல் ஜாஸ்தியாக இருந்தது. குளிர்ந்த நீர் உள்ள அந்த தொட்டியில் காலை வைத்தேன்.

என் தந்தையாரின் கையில் கொஞ்சம் காசு சேர்ந்திருக்க அவள் சைக்கிளில் பல பொருள்களை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தார். அதில் எனக்கும் என் தங்கைக்குமாக இரண்டு செட் ஷூக்களும் இருந்தன.

இந்த கதையை என் கதையாக சொல்லி பதிவாக போட்டுவிடலாமென நினைத்திருக்கும் போது ஒலி 96.8 எப்.எம் ரேடியோ வழியாக "திருட்டு.. திருட்டு...திருட்டு ராஸ்கல் திருட வாயேண்டா" என்ற ஜீ பாடல் ஒலிக்க அந்த திருட்டு பட்டம் வேண்டாமென முடிவு செய்து, மேல் சொன்ன கதை Bacheha-Ye aseman என்று பார்சி மொழியிலும், "Children of Heaven" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் ஈரானிய திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதியது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன்.

Image hosted by PicsPlace.to

மேல் சொன்ன கதையில் 'நான்' என்று சொல்லிய இடத்தில் 'அலி மண்டேகர்' என்ற பள்ளிக்கு போகும் சிறுவனையும், ஜாஃரா என்ற அவனது தங்கையையும் உருவகப்படுத்துக் கொண்டு அந்த கதை படித்தால் அது தான் "Children of heaven" என்ற ஈரானிய படத்தின் கதையுமாகும். Montreal film festival, newport film festival, singapore film festival போன்றவற்றில் பல விருதுகளைப் பெற்ற படம். அருமையான படம். காட்சிகளில் காட்டப்படும் உணர்ச்சிகள் மேல் சொன்ன கதையின் வழியாக காட்ட முடியாது. இருந்தாலும் கொஞ்சம் மாறுபட்ட முயற்சியாக...

இந்த படத்தை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
விஜய், நீங்கள் சொன்ன அந்த ஈரானியப் படத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி வழியாகப் பார்த்தேன். அந்தக் கதையை அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அந்தச் சிறுவனாய் நடித்தவனின் கண்கள்!
 
அன்புள்ள விஜய்,

முழுப்படமும் பார்த்த உணர்வு வந்துச்சு!

அருமையா கதை சொல்லி இருக்கீங்க!

என்றும், அன்புடன்,
துளசி
 
vijay
you made me go down memory lane!!
beautiful translation
 
நன்றி செல்வராஜ், துளசியக்கா, தேன் துளி.
 
அருமையான கதை விஜய்
 
நன்றாக கதை சொல்லியிருக்கிறீர்கள். ஆக மொத்தம் இந்த வாரம் திருவாரமாக போனதற்கு நன்றிகள் பல. தொடர்ந்து எழுதுங்கள்.
 
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் விஜய், நன்றி!
 
நன்றி சந்திரவதனா, நரேன், இராதாகிருஷ்ணன்.

படம் பார்க்கும் போது அந்த பையன் கேரக்டரில் முழ்கியதாலும், பால்ய கஷ்டங்கள் என் கண் முன் வந்ததாலும் ஒரு கதையை போலவே என்ன சொல்ல வைத்தது.
 
விஜய்,

அருமையான கதை, மிக அருமையான மொழிபெயர்ப்பு. படத்தை எங்களால பொறுமையா பாக்க முடியுமான்னு தெரியல. பார்த்தாலும் புரியுமான்னும் தெரியல. ஆனா நீங்க எழுதினது புரியும்படியாவும், மனச தொடும்படியாவும் இருந்தது. நன்றி. உங்களுக்கு ஏதோ மனசாட்சி இருக்கப்போய் இது உங்க கதை இல்லேன்னு சொல்லிட்டீங்க. சில பேர் மாதிரி 'ஷூ' வ 'செருப்பு' ன்னு மாத்தி, என் சொந்தக்கதைன்னு சொல்லாம விட்டீங்க (தேவுடா... தேவுடா)!!
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->