<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

வெல்வெட் பூச்சி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
பாளையங்கோட்டை அந்தோனியார் ஸ்கூலில் 4-ம் வகுப்பு E பிரிவு வகுப்பைறையில் மூன்றாவது பெஞ்சில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீனி என் கவனத்தை கவர்ந்துக் கொண்டிருந்தான். படைப்பக்குறிச்சியிலிருந்து வரும் சீனிக்கு பக்கத்திலேயே வயலும் வயலை சார்ந்து ஒரு தோட்டமும் உண்டு. முந்தா நாள் மழை பெய்தால் எதாவது பூச்சியை பிடித்து வருவது அவன் வழக்கம். கொஞ்ச நாள் முன்னாடி பட்டுப்புழு கூடு கொண்டு வந்தான். அப்புறம் ஒரு நாள் பொன்வண்டிகளை ஒரு டப்பாவில் அடைத்துக் கொண்டு வந்திருந்தான். இன்றும் ஏதோ ஒன்றை தீப்பெட்டி டப்பாவில் அடைத்துக் கொண்டு வந்திருந்தான்.

அடுத்த ப்ரீயட் ஆரம்பிப்பதற்கு முன் கிடைத்த இடைவெளியில் அந்த தீப்பெட்டி டப்பாவை திறந்தான். நாலு ஐந்து வெல்வெட் பூச்சி பிலு பிலுவென்றிருந்தது. அந்த பூச்சி பார்க்க செக்க செவலென்று கச்சிதமாக வெல்வெட் சட்டையை போட்ட மாதிரி ரொம்ப அழகாக இருந்தது. பார்க்க பார்க்க ரொம்ப ஏக்கமாக இருந்தது. எனக்கும் ஒன்று வேண்டும் வேண்டுமென்றது என் மனது. நான் மெதுவாக அவன் கிட்ட கேட்டேன்.

"சீனி எனக்கு ஒரு பூச்சி தாடா, நான் ஒன்னும் வளர்க்கிறேண்டா"

"தூரப்போ, நானே எவ்வளவு கஷ்டப்பட்டு பிடிச்சிட்டு வந்திருக்கேன். ஒன்னும் தரமுடியாது போ"

"சீனி சீனி ரொம்ப ஆசையா இருக்கு. இந்த வாட்டி மட்டும் ஒன்னே ஒன்னு தாடா"

சராலென்று திரும்பிக் கொண்டான்.

பூகோள ஆசிரியர் உள்ளே வந்து ஏதோ பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார். நான் திரும்பவும் சீனியை அரிக்க ஆரம்பித்தேன். மெதுவாக அவன் தொடையை தோண்ட ஆரம்பித்தேன். "ஒன்னே ஒன்னு தாடா, நான் அப்புறம் கேட்கவே மாட்டேன்".

"அடி வாங்க போறே! போடா பன்னி. வெல்வெட் பூச்சி வேணுமா? போடா பூ* ". கெட்டவார்த்தை போட்டு மெதுவாக மெல்லிய குரலில் வாத்தியாருக்கு கேட்காத மாதிரி திட்டினான்.வகுப்பில் பாடத்தில் மனம் லயிக்கவில்லை. கீழே குனிந்து என்னுடைய பாக்ஸில் பென்சில் சீவ வைத்திருந்த அந்த மொட்டை பிளேடு எடுத்து என்னுடைய டெஸ்கில் 100க்கனக்காகில் செதுக்கி வைத்திருந்த பெயர் கூட்டத்தில் என் பெயரையும் செதுக்கிக் கொண்டிருந்தேன். Vijay 4E என்று E-யை செதுக்கி முடித்து பேனா மையை அதில் தடவ வேண்டுமென நினைத்திருந்த போது ஒரு முரட்டுக்கை என் காதை திருகியது.

"கொமாரு, விசய கொமாரு என்னடா பண்ணிக்கிட்டுயிருக்கே" என்று சொல்லிக் கொண்டே அந்த வாத்தியார் என் இடது காதை நமுட்டிக் கொண்டேயிருந்தார். நான் "சார் சார் சார்" என்று வலியால் முனங்கிக் கொண்டே அவர் காதை பிடித்து நமுட்டிய இடைவெளியை குறைக்க முற்பட்டேன். பிடித்து இழுத்தால் காது ரொம்ப வலித்தது. "ஆ ஆ ஆ" என்று கத்திக் கொண்டே இருந்தேன். அவர் அப்படியே காதை பிடித்து இழுத்துக் கொண்டே போனார். நானும் ஈடுக்கொடுக்க முடியாமல் பெஞ்சிலிருந்து எழுந்து அவர் பின்னாடியே சென்றேன். காதுக்குள் இருந்த ஜவ்வு எல்லாம் வலித்தது. அவர் மேஜைக்கு முன் என்னை நிற்க வைத்து, அடிஸ்கேலை எடுத்தார். கூடப் படிக்கிற எல்லா பயலுவ எல்லாம் என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளங்கைய காமிக்க அவர் ஸ்கேலாலேயே கைய திருப்பச் சொன்னார். கைமொளியை பார்த்து 'நட்டுங்' என்று ஸ்கேலை பக்கவாட்டில் திருப்பி ஒன்று போட்டார். என் கை சிறிது நேரம் செயல் இழந்ததைப் போன்ற உணர்வு.

க்ளாஸ் முடியிற வரை முட்டிக்கால் போட்டு நிற்க சொன்னார். சொர சொர தரையில் நிற்க முடியாமல் காலுக்கு போட்டிருந்த செருப்பை முட்டிக்கு இடையில் வைத்துக் கொண்டேன். பூகோள வகுப்பு முடிந்ததும் "போடா" என்றார் அந்த வாத்தியார். கூனி குறுகி போய் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். எல்லா கண்களும் என்னை பார்த்து ஏளனப்படுத்தியது. திரும்ப அந்த வெல்வெட் பூச்சியின் தீப்பெட்டி மேல் என் நினைவு சென்றது.

என் நிலையை கண்டு கொஞ்சம் இரக்கப்பட்டு சீனி சொன்னான் "நான் வெல்வெட் பூச்சியை தார்றேன். ஒரு பூச்சி நாலண. காசு கொடு நான் பூச்சி தர்றேன்".

"நாளைக்கு எடுத்து வர்றேன். கட்டாயம் எனக்கு பூச்சி தரனும்"

எப்படி நாலணவை தேத்துவது. எப்பவாச்சிம் அதிசயமா அம்மா 10 பைசா தருவாங்க. நாலணா எப்படி கிடைக்கும் என்ற யோசனை தான் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போகும் வரையில்.

அம்மா சமயலறை பக்கம் போயிருந்த சமயம் பார்த்து ரேடியோ இருந்த அலமாரியைத் தேடிபார்த்தேன். ஒரு பைசாவும் தேறவில்லை. யோசனையாய் பக்கத்து வீட்டுக்கு சென்றேன். சும்மா பேப்பர் படிக்கிற சாக்கில் நோட்டம் விட்டேன். சின்ன யானை உருவம் இருந்தது. கிச்சனில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்த அந்த அக்காவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, யானை உருவத்தை பிடித்து இழுத்தால் நடுவில் ஒரு அழகான அழி ரப்பர். முகர்ந்துப் பார்த்தேன். நல்ல வாசமாக இருந்தது. சுத்தும் முத்தும் பார்த்தேன். யாருமில்லை. அப்படியே அந்த அக்காவிடம் விடைப்பெற்றுக் கொண்டு அந்த யானை உருவ அழிரப்பரை ஜேப்பில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டினேன். எப்படியாவது இத கொடுத்து நாலு அஞ்சி பூச்சி வாங்கிறனும். ஏன்னா இந்த ரப்பர் எப்படியும் ஒரு ரூபாய்க்கு மேல இருக்கும் என்ற யோசனையில் வீட்டில் இருந்த சுவற்று பொந்தில் ஒளித்து வைத்தேன்.

சிறிது நேரத்தில் கிஷோர் தேடிவந்தான். அவன் அந்த பக்கத்து வீட்டு அக்காவின் தம்பி. வந்தவன் என்னை பார்த்தான். நேராக அந்த பொந்து பக்கம் போனான். அப்போது தான் ஞாபகம் வந்து தொலைத்தது எதாவது நானும் அவனும் சுட்டால் அங்கு தான் வைப்போம் என்று. அந்த யானை அழிரப்பரை எடுத்து ஓடிவிட்டான்.

நேராக அந்த அக்காவுடன் கிஷோர் வந்தான். "தொங்கன கொடுக்கா!!" என்று தெலுங்கில் எதோ சொல்லிவிட்டு நேராக பின்கட்டில் இருந்த என் அம்மாவிடம் சென்றார்.காளியாக அவதாரம் எடுத்திருந்த என் அம்மா முட்டை கண்ணுடன் என்னை முறைத்துக் கொண்டே வந்தார். இப்போது மாட்டியது என் வலது காது "எடுப்பியா? எடுப்பியா? என்ன பழக்கம் இது திருட்டுபயலே" என்று முதுகில் நாலு தோசை சுட்டார்.

மூலையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன். ஹாலுக்கு வந்து அந்த தூணுக்கு கீழ் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். பின்கட்டில் என் அம்மாவின் புலம்பல் இன்னும் கேட்டது. தற்செயலாக தூணில் கண்ணை ஓட்டிய போது என் அப்பாவின் சட்டை கண்ணில் பட்டது. மெதுவாக சட்டைப்பையில் கையை விட்ட போது நிறைய சில்லறைகள் தட்டுப்பட்டது.

"வெளியே கைய வச்சா அடி வாங்கி கொடுத்துட்டு போறாங்க. வீட்டுக்குள்ளே கைய வச்சா யாருக்கு தெரிய போது?. அப்பாவுக்கு எவ்வளவு சில்லறை பாக்கெட்டுல இருந்தாச்சுன்னு தெரியுமா... என்ன? பெரிய அழிரப்பர்... எங்க அப்பா பாக்கெட்டுல நிறைய சில்லறையிருக்கு. குதிரை யானை சிங்கமுன்னு விதவிதமா அழிரப்பர் வாங்குவேன்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், நாலணாவும், பத்து பைசாவும் தான் கையில் மாட்டியது. வேகமாக ஒரு டவுசர் பாக்கெட்டில் 10 பைசாவையும் இன்னொரு பாக்கெட்டில் நாலணாவையும் போட்டுக் கொண்டு, 'ஒன்னும் தெரியாத பாப்பா, போட்டாலாம் தாழ்ப்பா" மாதிரி உட்கார்ந்துக் கொண்டேன்.

என்ன சத்தமே காணொமென்று என் அம்மா மெல்ல எட்டிப்பார்த்தார். நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஒரு திருப்தி அவர் முகத்தில். மறுநாள் பள்ளிக்கு போகும் போது 10 பைசாவுக்கு ஒரு "ஏர் உழவன்" தீப்பெட்டியை வாங்கிக் கொண்டு போகிற வழியில் உள்ளேயிருந்த தீக்குச்சிகளையெல்லாம் சக்கடையில் தூர எறிந்து விட்டுச் சென்றேன்.

சீனி வந்திருந்தான். அவனிடம் நாலணாவைக் கொடுத்து ஒர் வெல்வெட் பூச்சியை வாங்கி தீப்பெட்டிக்குள் விட்டுக் கொண்டேன். வெல்வெட் பூச்சிக்கு பசிச்சா??? "சீனி, எனக்கும் கொஞ்சம் புல்லு கொடுடா. பூச்சிக்கு பசிச்சா சாப்பிடட்டும்" என்று புல்லை வாங்கி, தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்தேன்.

அன்று மாலை என் தம்பிகளுடனும் நண்பர்களுடனும் சேர்ந்துக்கொண்டு வெல்வெட் பூச்சியை தொட்டு தொட்டு விளையாண்டுக் கொண்டிருந்தோம். தலைகுப்புற அந்த பூச்சியை படுக்கப்போட்டு எப்படி வெளிக்கு போகும்? எப்படி ஒன்னுக்கு போகுமென? அனடாமி படித்துக் கொண்டிருந்தோம்."இந்தா பார்ரா கால் கூட வெல்வெட்டு மாதிரியிருக்குன்னு" வியந்தோம். அப்படியே ஆளாளுக்கு வெல்வெட் பூச்சியை எடுத்து கையில் ஓட விட்டோம். மெத்து மெத்தென்று பூப்போல நடப்பதை ஆளாளுக்கு வியந்து ரசித்தோம். "டேய் இதப்புடிச்சா கையில குஷ்டம் தான் வரும்" என்ற சோமேஸை "குஷ்டம்னா உங்கவீட்டுக்கு ஒன்னும் பிச்சை எடுக்க வரமாட்டோம்" என்று அவனை ஓட ஒட விரட்டினோம். 'உங்க புத்தியையும் பாத்துக்கிட்டேம்ல" என்று கத்திக் கொண்டே சென்றான் சோமேஸ்.

அன்று இரவு உணவு இறங்கவில்லை. வெல்வெட் பூச்சி வெல்வெட் பூச்சி தான் என்னுடைய நினைவில். கொஞ்சம் சோத்துப் பருக்கையையும் எடுத்து தீப்பெட்டிக்குள் போட்டேன்.

மறுநாள் காலை ஆசையோடு தீப்பெட்டியை திறந்த போது கால்கள் சுருண்டு போய் வெல்வெட் பூச்சி கிடந்தது. அதை எடுத்துப் போட்டு விரலால் அங்குமிங்கும் தட்டிப்பார்த்தேன். எதிர்வினை எதுவுமில்லை பூச்சியிடம். வெல்வெட் மேல்புறமும் நிறமிழக்க ஆரம்பித்திருந்தது. வெல்வெட் பூச்சி செத்துப் போயிருந்தது மெதுவாக விளங்கியது. குற்ற உணர்வு ஆட்டிப்படைத்தது.

"சோறு போட்டதனாலே செத்துப் போச்சோ? இல்லென்னா புல்லு இப்படி தீப்பெட்டிக்குள்ள அடைச்சி வச்சிருந்ததாலே செத்துப் போச்சோ? சீனிக்கு மட்டும் எப்படி இந்த வெல்வெட் பூச்சி பலநாள் உயிரோட இருக்கு? என்னோடது ஏன் செத்துப் போச்சி?" அழுகை அழுகையாக வந்தது. சோகம் பல நாள் கவ்விக்கொண்டிருந்தது.

சில நாளில் அதே அந்தோனியார் ஸ்கூலில் 4ம் வகுப்பு E பிரிவில் மூன்றாம் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சீனி மெல்ல பாடபுத்தகத்தை திறந்தான். உள்ளே அழகான மயிலிறகு இருந்தது. மயிலிறகு இருந்த பக்கத்திலேயே இரண்டு அரிசி வைத்திருந்தான்.

"சீனி மயிலிறகு நல்ல இருக்குதுடா. அரிசி ஏன்?" என்றேன்.

"இப்படி மயில் றெக்கைக்கு பக்கத்துல அரிசி போட்டா மயில் றெக்கை குட்டிப் போடும். இப்படி தான் என்கிட்ட குட்டிப்போட்ட மயில் றெக்கை நிறைய இருக்கு" என்று என்னிடம் இறக்கையில் இருந்து இரண்டு துணுக்குகளை பிய்த்து கொடுத்தான்.

நானும் பாடபுத்தகத்துக்கு இடையில் இறக்கையை வைத்துக் கொண்டு "றெக்கைக்கு பசிக்கும். போய் அரிசி போடனும். கொஞ்ச நாள்ல குட்டி போடும் பார்க்கனும்" என்ற புதிய நம்பிக்கையோடு வீட்டிற்கு நடைப்போட்டேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அன்புள்ள விஜய்,

'கொசுவர்த்திச் சுருள்'( அதாம்பா நினைவலைகள் ஃப்ளாஷ் பேக் வர்றதுக்கு முன்னாலே வட்டவட்டமாய்
சுத்துமே) ஏத்திட்டீங்களே!

எனக்கும் வத்தலகுண்டுலே இருந்தப்ப இந்த 'வெல்வெட் பூச்சி' மேலே ஒரே ஆசை! எங்க அண்ணந்தான்
எப்பவும் பொன்வண்டு,விதவிதமான பூச்சினங்க எல்லாம் கொண்டுவந்து தருவாரு!

நல்லா எழுதியிருக்கீங்க. நானும் கொஞ்சம் 'பின்னாடி' போய் பழைய வாழ்க்கையை ரசிச்சுட்டு வந்தேன்!

என்றும் அன்புடன்,
அக்கா
 
அட, நானும் உங்க சீனி போலத்தான். வளர்க்கறதா நினைச்சுட்டு வதம் பண்ணின உயிரினங்கள் சதம் இருக்கும். குறிப்பா அபலையா விடப்பட்ட பெண் நாய்க்குட்டிகளை எடுத்துட்டு வந்துருவேன். அதனால வீட்டில் ஒரே பிரச்சனைதான். ஆனா சீனி மாதிரி பூச்சியை வித்து காசு பார்த்ததில்லை. ஆமா, அவர் இப்ப எந்த ஊரில் எம்.பி / எம்.எல்.ஏ?
 
ஆகா! ரொம்ப பிஸியான லைப்பில் என் பதிவு உங்களையும் கொஞ்சம் பின்னாடி திருப்பி பார்க்க வைத்தது என்றால் இந்த பதிவு வெற்றி தான்.

நன்றி துளசியக்கா, சத்தியராஜ்குமார்.

சத்தியராஜ்! இப்போ சீனி எங்கேன்னு கூட தெரியாது. ஆனா அந்த பூச்சியும், நிகழ்வும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.நாய் குட்டி சம்பவமும் நடந்திருக்கிறது :-(
 
மனசை தொட்ட பதிவு விஜய். தொடர்ந்து கதை எழுதுங்கள். உங்களது சிங்கப்பூர் சிறுகதையை படிக்க காத்திருக்கிறேன்
 
அன்புள்ள விஜய், அழகாக எழுதியிருக்கீங்க. எனக்கு நினைவலையே வரல்ல : ( சாஅனாலும், சம்பவத்தை, எழுதியிருக்கிற விதத்தை ரசிச்சென். தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள். அன்புட, ஜெயந்தி
 
நன்றி பாலு,ஜெயந்தி அக்கா.

பாலு, பாளையங்கோட்டையும், வத்தலக்குண்டும் பாதித்த அளவு சிங்கப்பூர் இன்னும் என்னை பாதிக்கவில்லை. இன்று வரை ஒட்ட மறுக்கிறது. ஒரு வேளை நான் இந்தியா திரும்பிய பிறகு சிங்கப்பூர் நிழலாடுமோ என்னமோ?

//தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள். அன்புட, ஜெயந்தி //
தொடர்ந்து அவஸ்தை படனும்னு சொல்றீங்க. தலையெழுத்தை யாராலே மாத்த முடியும் :-))))))))))))))))
 
அன்பினிய விஜய்,

ம்ம்ம்ம்...இதான் உங்க ஆட்டோகிராப்பா?
"ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே..."
என்று எழுதினாலும் அந்தச் சின்னவயசில்
பூச்சி பிடிச்ச அனுபவம் ரெம்பப்பேருக்கு
பொது போல இருக்கு....:-)))
ஒங்க ஆட்டோ கிராப்புல கையெழுத்து போட்டுட்டேன்.
அன்புடன்,
ஆல்பர்ட்.
 
வாங்க ஆல்பர்ட். தொடர்புகள் இல்லாமல் 2 வருடங்கள் ஓடிவிட்டது. தங்களின் பின்னூட்டம் கண்டு வெகுமகிழ்ந்தேன்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->