<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

நானுக் ஆப் தி நார்த்-உலகின் முதல் ஆவணப்படம் (1922)

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
குளிர், கடுங்குளிர் இரண்டே பருவங்களைக் கொண்டது பூமியின் துருவங்கள். நமக்கெல்லாம் நெற்றிக்கண்ணை திறந்து நெருப்பை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் சூரியன் ஏனோ துருவத்தை கண்டு தூரத்திலேயே அஞ்சி நின்று விட்டது. பூமியின் துருவங்கள் ஒரு போலி கோடைக்காலத்தையும், உக்கிரமான குளிர்காலத்தை மட்டுமே கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் சூரியன் செத்து செத்து ஒளியை உமிழ்ந்துக் கொண்டிருப்பான். சில நாட்களில் இரவானாலும் சூரியன் மறைய மாட்டான். கோடைக்காலத்தில் தொடர்ந்து சில நாட்கள் பகலில் கொஞ்சம் அதிக சூரிய ஒளி, இரவில் கொஞ்சூண்டு சூரிய ஒளி என்ற அளவில் துருவத்தை சூரியன் பல நாட்கள் பார்த்துக் கொண்டேயிருப்பான்.

ஆனால் குளிர்காலத்திலோ சூரியன் துருவங்களின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டான். எப்போதுமே இருட்டு தான். இரவில் நார்தர்ன் லைட் (northern light) எனப்படும் வர்ணஜாலத்தை வானம் ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும்.நார்தர்ன் லைட் என்பது வெள்ளை, மஞ்சள், பச்சை, சிகப்பு போன்ற வர்ணங்களால் வானத்தின் ஓரிடத்தில் பூசி இயற்கை நர்தனம் ஆடிக் கொண்டிருக்கும்.(அறிவியலர்கள் யாராவது அதன் பின் உள்ள அறிவியலை விளக்குவார்களா?)

Northern Light
Image hosted by PicsPlace.to

குளிரையே பிரதானமாக இருக்கும் வடதுருவத்தில் வாழும் ஒரே இனத்து மக்கள் இனூயிட்(Inuit) எனப்படும் எஸ்கிமோக்கள் மக்களே. எப்படி கருப்பர்களை நிகர் அல்லது நீக்ரோ என்று அழைத்தால் கோபம் வருமோ அதைப் போல வடத்துருவ மக்களை எஸ்கிமோக்கள் என்றழைத்தால் கோபம் வரும். அமெரிக்காவின் சில பழங்குடிகளால் எஸ்கிமோக்கள் என்று பெயரிடப்பட்டது. எஸ்கிமோக்கள் என்றால் 'மாமிசத்தை சமைக்காமல் சாப்பிடுபவர்கள்' என்று பெயர். துருவ மக்கள் தங்களை இனூயிட் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள். இனூயிட் என்றால் 'மக்கள்' என்று பொருள்படும்.

இந்த இனூயிட்கள் எப்படி சமூகமாக வாழ்கிறார்கள் என்பதையும், ஏறக்குறைய வெளிஉலகத்தொடர்பு இல்லாமலேயே குடும்பத்தில் அன்பு மற்றும் கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள் என்பதையும், அசூர இயற்கை முன்பு இனூயிட்கள் வலுவிழந்து தங்களை எப்படி காத்துக் கொள்கிறார்கள் என்பதையும் முதல் முதலில் 'நானுக் ஆப் தி நார்த்' என்ற ஆவணப்படமாக தயாரித்த பெருமை ராபர்ட் ஃப்ளஹர்டியை(Robert Flaherty) தான் சேரும். இவர் தான் டாகுமெண்டரி படங்களின் தந்தை என்றழைக்கபடுகிறார். இந்த முதல் ஆவணப் (டாகுமெண்டரி) படம் வெளிவந்த ஆண்டு 1922. இந்த படத்தை பற்றிய பார்வைக்கு முன் இனூயிட்களைப் பற்றி கொஞ்சம் அலசலாம்.

இனூயிட்கள் யார்?

போன வாரம் ஒரு தற்செயல் நிகழ்ச்சி நடந்தது. முந்திய நாள் இரவில் 'நானுக் ஆப் தி நார்த்' பார்த்து விட்டு இந்த வாரத்தில் இனூயிட்களைப் பற்றி எழுதலாம் என நினைத்திருக்கும் போது பாலாஜி-பாரியின் பதிவு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இனூயிட்களைப் பற்றி சொல்லும் அவர் பதிவு சுருக்கென மிக அழகாகயிருந்தது.

ஒரு இனூயிட் (நானுக்காக நடித்தவரும் இவரே)
Image hosted by PicsPlace.to

இனூயிட்கள் வட அமெரிக்கா ஆர்டிக் பகுதியிலிருந்து கிழக்கு கிரீன்லேண்டு வரையிலான ஏறக்குறைய 6000 கிலோமீட்டர் வரை உள்ள பனி பிரதேசங்களிலும், ஆர்டிக் கனடா, வடக்கு அலாஸ்காவையும் உள்ளடக்கிய பகுதிகளில் வசிக்கும் உலகின் சிறுபான்மை மக்கள். அவர்களின் தோற்றத்தை(origin) பின்னோக்கி பார்த்தோமானால் அலஸ்காவில் பெரும்பான்மையாக வாழ்ந்து caribau எனப்படும் பனிகலைமான்கள், பனிக்கரடி, திமிங்கலம், சீல், வால்ரஸ் போன்ற மிருகங்களை நம்பியும், உணவுக்காவும் வேட்டையாடி வாழ்ந்தவர்கள். பனிப்பிரதேசங்களில் உணவுக்காக நாடோடிகளாக திரிந்தவர்கள். அலாஸ்காவிலிருந்து வட கிரீன்லேண்டு, ஆர்டிக் கனடா போன்ற இடங்களில் பரவிய இனூயிட்கள் ஆச்சரியப்படக் கூடிய வகையில் ஒரே பண்பாடு, கலாச்சாரம், மொழி என்று வாழ்கிறார்கள்.

இனூயிட்ஸ்களின் வாழ்க்கையை ஐரோப்பியர்களின் முன், பின் என இரண்டாக பிரிக்கிறார்கள். ஐரோப்பியர்களின் முன் என்ற பிரிவினையில் இனூயிட்ஸ்கள் பனி பிரதேசத்தை தவிர மற்ற உலகை அறியாதவர்கள். வேட்டையாடி உணவுக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள். வால்ரஸின் தந்தம், திமிங்கலத்தின் எலும்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடி பொதுவில் உண்டு வாழ்ந்தவர்கள்.செடி,கொடி,மரங்களை வடதுருவத்தில் பார்க்க முடியாதாகையால் கடலில் மிதந்து வரும் கட்டைகளை கொண்டு தற்காலிக இருப்பிடத்தை அமைத்துக் கொள்வார்கள். குளிர்காலத்தில் இடம் பெயரும் போது இக்ளூ (igloo) எனப்படும் பனிவீடுகளில் வசிப்பார்கள். இந்த பனிவீடுகளைப் பற்றி பின்னால் விளக்குகிறேன்.

18-ம் நூற்றாண்டு பக்கத்தில் ஐரோப்பியர்கள் அண்ட்லாண்டிக்கிலிருந்து பசிபிக் செல்ல வடமேற்கு கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க ஆர்டிக் வழியாக பயணிக்க வேண்டியிருந்தது. பனிக்கண்டத்தை தடையாக கண்டவர்கள், அங்கு இனூயிட்ஸ்களை கண்டுக் கொண்டார்கள். ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும் இனூயிட்ஸ் வாழ்க்கையில் குறுக்கிட்ட பிறகு அவர்களுடைய வாழ்க்கை வெகு வேகமாக மாறத் தொடங்கியது. சீல் வால்ரஸ், பனிக்கரடி தோலுக்காக ஐரோப்பியர்கள் இரும்பு போன்ற பயனுள்ள பொருட்களை பண்டமாற்றினார்கள். துப்பாக்கி கொண்டு வேட்டையாட தொடங்கினார்கள். இனூயிட்ஸ்கள் திமிங்கல வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டனர். கிறிஸ்துவ மிஷன்கள் உள்ளே நுழைய அவர்கள் பின்பற்றிய கலாச்சாரமும் பண்பாடும் மிக வேகமாக மாறுதல் அடைந்தது. கனேடிய அரசாங்கத்தின் பெருமுயற்சியல் அவர்களின் நாடோடி வாழ்க்கையை விடவைத்து இனூயிட்ஸ்களுக்கு குடியரசை அமைத்துக் கொடுத்தது.

'நானுக் ஆப் தி நார்த்'(Nanook of the north)

Image hosted by PicsPlace.toராபர்ட் ஃப்ளஹர்டி தாதுப் பொருட்கள் சுரங்களை தேடி அலையும் வேலையில் சர்.வில்லியம்ஸ் மெக்கன்சி என்பவரால் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். ஆர்டிக் கனடாவை ஒட்டிய ஹட்சன் வளைக்குடாவின் கிழக்கு கடற்கரை ஒட்டிய தீவுகளில் இரும்பு தாதுக்களை தேடி 1910 முதல் 1916 வரை பயணத்தை மேற்கொண்டார். அவருக்கு கொடுக்கப்பட்டது படம் எடுக்கும் ஒரு கேமிரா, ஒரு டைரி, பனிப்பாறையை உடைத்துச் செல்லும் படகு. அவருடைய துணிகர பயணத்தில் ஒரு சில இனூயிட்களின் உதவியுடன் அந்த பகுதியை ஆராய்ந்து வந்தார். அது அவருக்கு இனூயிட்களின் வாழ்க்கை முறையில் ஆழமான பார்வை ஏற்படுத்தியது. தாதுக்கள் அவ்வளவாக கிடைக்காததால் இனூயிட்களை பற்றி நீளமான படத்தை எடுத்துச் சென்றார். அவற்றை எடிட் செய்யும் போது ஏற்பட்ட சின்ன தவறால் முழுவதும் எரிந்து சாம்பலானது.

மறுபடியும் இனூயிட்களின் வாழ்க்கையை படமாக்க ஒரு செல்வந்தரின் பெரும் உதவியுடன் கேமிரா மற்றும் எடுத்த படத்தை இனூயிட்களுக்கு காட்ட தேவையான கருவிகளுடன் சென்றார்.இந்த தடவை பல இனூயிட்களை குறி வைக்காமல் ஒரே ஒரு இனூயிட்டின் கேரக்டரை முன்னிலைப்படுத்தி எடுக்க எண்ணம் கொண்டு சென்றார். அந்த கேரக்டரில் நடிக்க கிடைத்தவர் 'நானுக்' என்றழைக்கப்பட்ட அல்லாக்கரியல்லாக். அவருடைய மனைவி நைலா மற்றும் அவர் குடும்பத்தை சுற்றியே இந்த படம் ஆவணப்படுத்துவதாக அமைத்தார். நானுக்கின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருப்பதையும், இயற்கையின் பல பரிணாமங்களையும் எதிர்க்கொள்ளுமாறு அமைந்த வாழ்க்கையினையும், உணவு தேடி வேட்டைக்கு அலையும் முறையில் அவர்கள் திறமை பலவீனப்படுத்தும் தன்மையினையும் ஃப்ளஹர்டி அருமையாக இந்த ஆவணப்படத்தில் கோர்த்திருப்பார்.இதற்காக ஃப்ளஹர்டி பல ஆண்டுகள் இனூயிட்கள் கூடவே கழித்தார்.

ஃப்ளாஹர்டி இந்த படம் எடுக்கும் போது உண்மையான சினிமா இயக்குநராக இல்லாததால் சில கேமிரா கோணங்கள் மோசமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.ஆனால் இந்த அரிய ஆவணப்படத்தின் முன் இந்த குறைகளெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. ஊமைப்படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் 1990 வாக்கில் இசை மட்டும் சேர்க்கப்பட்டது.

படத்தில் முக்கிய காட்சிகளாக சொல்ல வேண்டுமானால் கோடைக்காலத்தில் நானுக் அவருடைய துணை நண்பர்களுடன் வால்ரஸ் வேட்டையாடும் காட்சியும், உறைந்த பனிகளை உடைத்து மீன் பிடிக்கும் காட்சியும், க்ளூ எனப்படும் பனிவீடு கட்டும் காட்சியும், பனிக்காற்றிலிருந்து தப்பிக்க போராடும் போராட்டங்களையும் நம் நகவிரலை கடிக்க வைக்கும் விறுவிறுப்புடன் நகர்கிறது.

கோடைகாலத்தில் தூரத்தில் உள்ள வால்ரஸ் தீவில் வால்ரஸ் இருக்கிறது என்பதை அறிந்து பனி விலங்குகள் தோலால் மூடப்பட்ட படகில் நானுக் ஆர்வமாக புறப்படுகிறார். தீவை அடைந்து தந்திரமாக தவழ்ந்து சென்று 4 டன் எடையுள்ள வால்ரஸை பிடிக்கும் காட்சிகள் படமெடுக்கும் போது 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக ஃப்ளாஹர்டி சொல்கிறார். கொன்ற வால்ரஸை அவருடைய இருப்பிடத்திற்கு கூட கொண்டு செல்லாமல் பசியால் பச்சைக்கறி சாப்பிடும் அந்த காட்சி மிக தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கும்.

இக்ளூ (igloo)

இக்ளூ கிராமம்
Image hosted by PicsPlace.to

வேட்டைக்காக செல்லும் இனூயிட்கள் இரவில் உறையும் பனியிலிருந்தும், பனிக்காற்றை எதிர்கொள்ளவும் பனியால் கோளவடிவில் கட்டும் வீடு இக்ளூ எனப்படுகிறது. நானுக் இக்ளூ கட்டும் காட்சி இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. கட்டியான பனிக்கட்டிகளை செங்கல் மாதிரி வால்ரஸ் தந்தத்தால் அறுத்து வட்டமாக பவுண்டேஷன் போட ஆரம்பிக்கிறார்கள். பனிக்கட்டி ப்ளாக்குகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி doom வடிவில் பனி வீட்டை கட்டுகிறார்கள். ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவே வாசல் விடப்படுகிறது. பனிவீட்டின் மேலே வெப்பக்காற்று வெளியேறுவதற்காக சிறு ஓட்டையும் விடப்படுகிறது. வெளிச்சம் உள்ளே நுழைய கூரையில் பளிங்காக உள்ள ஐஸ்கட்டியை எடுத்து பதிகிறார்கள். இந்த பணி சில மணித்துளிகளில் நிறைவடைகிறது. இரவில் பனி உறைய ஆரம்பிக்கும் போது க்ளூ பனி ப்ளாக்குகளில் உள்ள இடைவெளிகள் ஏதுவும் இல்லாமல் ஐஸ்ஸாக உறைகிறது. க்ளூவின் உள்ளே வால்ரஸ் கொழுப்பால் சிறிய விளக்கு ஒன்று எரிந்துக் கொண்டேயிருக்கும். இது க்ளூ உள்ளேயிருக்கும் ஐஸை லேசாக உருகவைத்து இடைவெளியில்லாமல் பாலிஸாகிறது. இரவின் கொடுரமான பனிக்காற்றிலிருந்து விடுதலைக் கிடைத்தாகி விட்டது.

அந்த ஐஸ் வீட்டினுள்ளேயே பனிக்கட்டிகளின் மேலேயே பனிமான், கரடி தோலை மேலே போட்டு வால்ரஸ் தோலை போர்த்தி படுக்க ஆரம்பிக்கின்றனர்.

ஸ்லெட்ஜ் வண்டியுடன்
Image hosted by PicsPlace.to

மறுநாள் சீலை தேடி வேட்டைக்கு நாய்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ் வண்டியுடன் கிளம்புகிறார்கள். உறைந்திருக்கும் கடலில் அங்காங்கே அபூர்வமாக ஓட்டைகள் தென்படும். சில நேரங்களில் சீல் ஓட்டை பக்கத்தில் வந்து வெளிக்காற்றை சுவாசிக்கும். இனூயிட்கள் பொறுமையாகக் காத்திருந்து அந்த பனி ஓட்டையின் வழியாக அந்த சீலை பிடிக்கும் காட்சியும் அற்புதமாக அமைந்திருக்கும்.

குளிர்காலத்தில் நீரை தேடி அலைய முடியாததாகையால் எச்சிலால் தன் குழந்தையை குளுப்பாட்டுவாள் நைலா. அது போல் இரவில் கழட்டி வைத்த நானுக்கின் வால்ரஸ் காலணி இறுகிவிட, காலையில் நைலா வாயாலே கடித்து காலணியை மென்படுத்தும் காட்சியும், பனியில் வழுக்கிப் போக ஸ்லெட்ஜ் வண்டியின் அடிப்பாகத்தை நானுக் நாக்கால் நக்கி எச்சில் படுத்தும் காட்சியும் இயற்கையாக எடுத்திருப்பார்கள்.

ஃப்ளஹர்டி படம் எடுத்த முடித்த பிறகு நானுக் மற்ற இனூயிட்ஸ்களுக்கு போட்டு காட்டியிருக்கிறார். அவருடைய மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தை இல்லை என்கிறார். ஃப்ளஹர்டியை சுற்றி சுற்றி வந்த நானுக் பிரியா விடை கொடுத்தான். படம் எடிட் செய்யப்பட்டு 1922-ல் வெளியிட அது வரை ஆவணப்படங்களை கண்டிராத மக்களின் முன்பு சூப்பர் ஹிட் ஆகியது, படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து ஃப்ளஹர்டிக்கு ஒரு செய்தி வருகிறது. அது நானுக் உணவு கிடைக்காமல் பட்டினியால் செத்து விட்டான் என்பது தான். பட்டினி சாவு அன்றைய காலக்கட்டத்தில் இனூயிட்களிடம் சர்வசாதரணம்.

ஒரு வயதான இனூயிட்
Image hosted by PicsPlace.to


இனூயிட்கள் உயிர் ஆவிகளின் மேல் பயங்கர நம்பிக்கையிருந்தது. இறந்தவனின் பெயரை புதிதாக பிறக்கும் குழந்தைக்கு வைக்கும் வரை அந்த பெயரை உச்சரிக்கமாட்டார்கள். இனூயிட்கள் சீல் அல்லது வால்ரஸை வேட்டையாடினால் முதலில் அதன் வாயில் பனிக்கட்டிகளை போட்டுவிட்டு பிறகு தான் உண்ண ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் செத்த உயிர் தண்ணீர் கேட்டு அவதியுறும் என்பது அவர்கள் நம்பிக்கை. அது போல் பெண்கள் மானின் தோலை சாப்பிடக்கூடாது என்ற தடையும் இருந்தது. வீட்டில் ஒரு முதியவர் இருந்தால் இனூயிட்கள் பெருமதிப்பு கொடுப்பார்கள்.அவர்களுக்கும் சேர்த்து உணவு சேகரிப்பார்கள். குடும்பமாக வாழும் இனூயிட்களின் கலாச்சார பண்பாடுகளை எண்ணி ஃபிளஹர்டி ஆச்சரியப்பட்டு போகிறார்.

'நானுக் ஆப் தி நார்த்' பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். இந்த படத்தின் ட்ரெய்லர் இங்கே கிடைக்கும். அந்த சுட்டி இல்லையென்றால் இந்த சுட்டி. ட்ரெய்லர் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளது. அது உங்கள் தனிப்பார்வைக்கு மட்டுமே. வணிக நோக்கத்திற்கு அல்லாமல் கொடுப்பதால் காப்பிரைட் பற்றியெல்லாம் தெரியாது. அதிகபட்சமாக, பார்த்து விட்டு அழித்து விடுங்கள்.




இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
போட்டுத்தாக்கு!! ;) இந்த படம் (நான் சொல்வது கீப் தெ ரிவர் ஆன் தெ ரைட்) பற்றி இன்ன்னுட் எழுதியவுடன் பாலாஜி-பாரியோடு பேசிக் கொண்டிருந்தேன்.ரொம்ப நாள் தேடி வேறு கிடைத்ததா, அதனால் பார்த்த சபலத்தில் எழுதி விட்டேன். இனிமேல் இது போல தவறுகள் நிகழாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதங்களும் தரமுடியாது ;)

மற்றப்படி, சூப்பர் பதிவு போங்கள்
 
//இனிமேல் இது போல தவறுகள் நிகழாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதங்களும் தரமுடியாது ;)
//

உத்திரவாதமே வேண்டாம் தலீவா. இந்த மாதிரியான செயின் ரியாக்ஷன் நல்லது தான். அப்போது தான் இந்த மாதிரி புதிய பகுதி மக்களை பற்றி றைய பேர் தெரிந்துக் கொள்ளலாம்.ஆக மொத்தம் பொறி கிளப்பிய பாலாஜி பாரிக்கு நன்றி. எப்படி என்ன ஓட்டங்கள் ஒருங்கிணைகிறது பாருங்கள்.
 
Good post Vijay.

naan munthi ezuthiyathu:

http://mathy.kandasamy.net/musings/?s=inuit

another movie you should see is 'Atanarjuat'. It's in 'Inuktitut' with english subtitles.

There's so much to learn about/from these people.

We should also write/think about how our lifestyle is affecting these people. The level of mercury in these places are quite high.

http://www.protectingourhealth.org/press/2003/2003-0305-TorontoStar-mercury.htm

http://www.oceanconservancy.org/site/PageServer?pagename=bpm_feature1_3
 
I would love to hear Thangamani's views and experiences(short as they might be).
 
சரியாக விவரங்கள் தெரியவில்லை. இன்ன்யூட்களை விட அஸ்ம்த்கள் மூத்தவர்களா அல்லது எதிர்மறையா? நான் படித்த அளவில் அஸ்மத்கள், கிமு 1200 லிருந்து வாழ்ந்து வருகிறார்கள். இன்ன்யூட்களுக்கும் அவ்வாறான வரலாறு இருக்கலாம். இங்கே தமிழகத்தில், தோடர்கள், இருளர்களுக்கு அவ்விதமான வரலாறு இருக்கலாம். மற்ற சாதிகள், வேண்டாம் நாராயணா, அரசியல் இங்கே. I am escape டா சாமி.
 
'Ice man' பற்றியும் அவனக் கண்டுபிடித்த (மற்றும்) அவனைப் பற்றிய ஆராச்சியில் இறங்கியவர்கள் கதி என்னவாயிற்று பற்றியும் எழுதுங்கள். சுவாரசியமாய் இருக்கும்.

-ஆத்மன்
 
/இன்ன்யூட்களை விட அஸ்ம்த்கள் மூத்தவர்களா அல்லது எதிர்மறையா? நான் படித்த அளவில் அஸ்மத்கள், கிமு 1200 லிருந்து வாழ்ந்து வருகிறார்கள்./

நரேன், அஸ்மத், இன்னுயிட் கிடக்கட்டும். இப்போது, அமெரிக்காவின் முதல் மனிதன் யார் என்பதுகூட, மிகவும் இழுபறியான அறிவியல்/ஆய்வு/அரசியல் ஆன சங்கதியாக இருக்கின்றது.
 
நாராயணன், விஜய்:
ஆஹா!! கிளம்பிட்டாங்கையா...கிளம்பிட்டாங்கையா....இந்த மாதிரி ஒரு செய்தி நமக்கு எவ்ளோ சந்தோசத்த தருது. இல்ல?.

அப்புறம் மறக்காம இன்னொன்னும் சொல்லனும். இந்த வரிசைல சுவாரசியமானது நம்ம தோடர்கள் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் வாழ்க்கை முறை. இந்த கதைகள ஒரு தொடராக யாராவது எழுத வந்தா சூப்பரா இருக்கும்.

அருணா அவர்கள் சொன்ன மாதிரி, இந்த சங்கதிகள் மூலம் ரிவர்ஸ் கியர்ல போய் இயல்பான விசயங்கள பார்க்கப் பழகுவோம்.

நன்றிகள் நண்பர்களே!!
 
விஜய், நல்ல பதிவு. இனுயிட் பற்றிய நிறைய விசயங்களை நான் மதி, பாலாஜி பதிவுகளின் வழியேதான் அறிந்துகொண்டேன். இப்பத்தான் சில புத்தகங்கள் வாங்கினேன். சில இனுயிட் மக்களை இங்கு பார்த்தேன். மற்றபடி எனக்குஒன்றும் தெரியாது மதி. ஆனால் இது போன்ற பழங்குடி மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமும், தேவையும் உண்டு.

//அலாஸ்காவிலிருந்து வட கிரீன்லேண்டு, ஆர்டிக் கனடா போன்ற இடங்களில் பரவிய இனூயிட்கள் ஆச்சரியப்படக் கூடிய வகையில் ஒரே பண்பாடு, கலாச்சாரம், மொழி என்று வாழ்கிறார்கள்.//

இது உண்மையிலேயே ஆச்சர்யப்படத் தக்கதுதான்.
நன்றிகள்.
 
அன்புள்ள விஜய்,

அருமையான பதிவு! நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது!
உங்க நட்சத்திர வாரத்தை அட்டகாசமா நடத்திக்கிட்டு இருக்கீங்க!!!

வாழ்த்துக்கள். நல்லா இருங்க!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
History After the Bering land bridge, the first People to inhabit Alaska were Inuit, Aleuts, Tlingit and Athabascan. In the mid 1700’s Russian sailors discovered the land of the Aleuts and called it Alyeska. The Russians laid claim to the lands that eventually stretched from the Aleutians to Sitka. In 1867 Alaska was purchased from Russia for a price of $7,200,000 or 2 cents per acre. In January 1959, Alaska became the 49th US State.

More Here: http://www.goingtoalaska.com/conditions.php
 
தங்கமணி, அலாஸ்கா வருவதற்கு எனக்கு இன்னுமொரு நல்ல காரணம் கிடைச்சுடுச்சு. எதாவது விசாரிச்சு வையுங்க.
 
history on inuit :

http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0865476381/qid=1114558919/sr=1-1/ref=sr_1_1/103-0726663-7506240?v=glance&s=books
 
விஜய், நல்லதொரு பதிவு. மிக விரிவாக எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இதற்கான உங்கள் உழைப்புத் தெரிகின்றது.
பாரி, நரேன், நீங்கள் என்று இன்னூட்ஸ் பற்றி தொடர்ச்சியாக எழுதுகையில் அதிக விசயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. கனடாவில் ஆதிக்குடிகள் (aboriginal people) இருக்கும் மூன்று முக்கிய பிரிவுகளில் Inuits ஒருவகையினர் (மற்றவர்கள் First nations & Metis). மேலதிக விபரத்திற்கு கனடா அரசாங்கப் பக்கத்திற்கு...
http://www.cic.gc.ca/english/citizen/look/look-06e.html
....
நரேன், இப்படியான பதிவுகளைப் பார்க்கும்போதுதான், வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் தொகுத்து ஒரு புத்தகமாய் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது. ஒரு பதிவை புத்தகம் ஆக்கும் திட்டம் குறித்து எழுதுங்களேன் நரேன்.
 
பெயரிலி, நானும் நீங்கள் கொடுத்த சுட்டியில் போய் பார்த்தேன். அவர்கள் மீளுருவாக்கம் செய்திருக்கும் முகம் பென் கிங்ஸ்லி போல இல்லை ;) இல்லையென்றால், ஸ்டார் ட்ரெக் சீரியலில் வரும் ஒரு கதாபாத்திரம் போல இருக்கிறது. அது சரி, மனிதர்கள் உடலெங்கும் முடியோடுதானே இருந்தார்கள் ஒரு காலத்தில், அமெரிக்கா நிறுவனம், ஜில்லெட்டிடம் ஸ்பான்ஸ்சர்ஷிப் வாங்கியிருக்கிறதா என்ன... மொத்தமாய் வழித்து விட்டு இருக்கிறார்கள் :)
 
நன்றி மதி,ஆத்மன்,-/பெயரிலி, மீண்டுன் நரேன்,
கார்த்திக், மூர்த்தி, டிசே & துளசியக்கா.

மதி,

உங்களின் சுட்டியை இப்போது தான் பார்த்தேன். நீங்கள் சொல்லும் மெர்குரி அளவு துருவ பகுதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பத்தைப் பற்றி பல இடங்களில் படித்திருக்கிறேன். ஆனால் கவனம் செலுத்தியதில்லை. நேரம் கிட்டும் போது மெதுவாக எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்.

//அமெரிக்கா நிறுவனம், ஜில்லெட்டிடம் ஸ்பான்ஸ்சர்ஷிப் வாங்கியிருக்கிறதா என்ன... மொத்தமாய் வழித்து விட்டு இருக்கிறார்கள் :)
//

:-))))))))))))

//டிசே: நரேன், இப்படியான பதிவுகளைப் பார்க்கும்போதுதான், வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் தொகுத்து ஒரு புத்தகமாய் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது.//

இதை கடுமையாக ஆதரிக்கிறேன் :-). கொஞ்ச நாள் முன்பு சிங்கை பாலுமணிமாறன் ஒரு நற்செய்தி சொன்னார். மலேசியா தென்றல் பத்திரிக்கை ஆசிரியரான அவருடைய நண்பர் ஒருவர் ப்ளாக்குகளிலிருந்து நல்ல கட்டுரைகளை பதிவு ஆசிரியரின் அனுமதி எடுத்து போடுவதற்கு விழைந்திருப்பதாகச் சொன்னார். உண்மையில் இது ஒரு நல்ல sign. பார்க்கலாம் பலரின் எண்ணம் ஒருங்கிணையும் போது ஏதாவது நடக்கும். முயல்வோம்.
 
என் பங்குக்கு நானும் சில சுட்டிகளை தருகிறேன்.

Aurora Borealis எனப்படும் northern lights-ஐ பற்றி அறிந்துக் கொள்ள

http://www.imv.uit.no/english/science/publicat/waynorth/wn1/contents.htm

இனூயிட்களை பற்றி பறவைகண் பார்வையில் பார்க்க...

http://www.civilization.ca/educat/oracle/modules/dmorrison/page01_e.html
 
டிசே, விஜய், வலைப்பதிவுகள் புத்தகமாக வெளி வரலாமா என்கிற விவாததினை என் பதிவில் எழுதியிருக்கிறேன். இது உங்களுக்கும், இனி இப்பதிவினை இந்த பின்னூட்டம் வரை படிப்பவர்களுக்கும்

பார்க்க:
வலைப்பதிவுகள் புத்தகமாகலாமா?

 
உள்ளூர்லதான் உலகத்திரைப்பட விழா நடக்குதுன்னு பார்த்தா - ஒங்க புண்ணியத்துல தமிழ்மணத்துலயுமா:)
 
நரேன் விவாதத்தை ஆரம்பித்து விட்டீர்களா? நல்லது. தூக்கம் கண்ணை சுழற்றுவதால் நாளை வந்து பார்க்கிறேன்.

அன்பு, சிங்கப்பூர் 17வது திரைப்பட விழாவை மிஸ் பண்ணுகிறேன். அதைப்பற்றிய பதிவை சிங்கை முரசில் போட எண்ணினேன். நேரம் என்னை கடிப்பதால் பதிவும் போடல, படமும் பார்க்கல. ஆறுதலுக்கு தமிழ்மணத்திலேயே திரைப்பட விழா நடத்திரலாம்னு தான் :-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->