<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

The 400 Blows

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
பதின்ம வயதில் வீணாக போனவனின் கதை. விமர்சனத்துக்கு இறங்கும் முன் படத்தை பற்றிய சில விவரங்கள்.

படம் : தி 400 ப்ளோஸ்
ஆண்டு : 1959
மொழி : பிரெஞ்சு
ஓடும் நேரம்: 1:39
இயக்குநர் Vs தயாரிப்பாளர் : பிரான்சிஸ் த்ரூஃபா (François Truffaut)
திரைக்கதை : பிரான்சிஸ் த்ரூஃபா, மார்செல் மௌச்சே
விருது : 1959 கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது

அண்டொனி டாய்னல் (நடிகன் பெயர் Jean-Pierre Léaud) 14 வயது நிரம்பிய பதின்ம வயதினன். பதின்ம வயதினனின் வேதனையும், புறக்கணிப்பும் காட்சிகளாக விரிவது தான் 'தி 400 ப்ளோஸ்'.

அண்டொனி டாய்னல் அதீத கற்பனைவளமும், மிகுந்த விளையாட்டு புத்தியும் மிகுந்தவன். வரி பிசகாமல் ஒப்பிவிக்கும் பள்ளி உலகத்தை விரும்பவில்லை. விளையாட்டு தனம் மிகுதியால் ஆசிரியர்களிடம் தண்டனைகளை பெற்று பள்ளியில் தன் பெயரை சுத்தமாக கெடுத்துக் கொண்டவன்.அதனால் பள்ளியில் எப்போதுமே நிராகரிக்கப்படுகிறான். வீட்டிலும் அதே கதை தான். டாய்னலின் தாய் திருமணம் ஆவதற்கு முன்பே வேண்டா வெறுப்பாக டாய்னலை பெற்றுக் கொண்டவள். குடும்பத்தை விட்டு எவ்வளவு நேரம் வெளியே செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரத்தையும் செலவழிப்பவள். அவள் வீட்டிற்கு வந்தால் எப்போதுமே டாய்னாலின் மேல் 'சள்' என்று விழுபவள்.

டாய்னலின் தந்தையும் அவனிம் மீது அதிக அக்கறை காட்டுவதில்லை. சில நேரம் ஜாலியாக பேசும் அவர் சில நேரம் டாய்னலின் மீது எரிந்து விழுவார்.அந்த மாதிரியான உலகத்திலிருந்து மீள அவனுக்கு மாற்று உலகம் தேவைப்படுகிறது. தந்தையிடம் நைசாக பேசி காசு வாங்கிக் கொண்டு அவனையொத்த நண்பனுடன் விளையாட்டு அரங்கினில் காசு கொடுத்து விளையாடுவதும், சினிமா பார்ப்பதுமாக தனக்கென தனி உலகம் அமைத்துக் கொள்ள விழைகிறான். இந்த லட்சணத்தில் தாய் வேறு ஒருவனுக்கு முத்தம் கொடுப்பதை பார்த்து விடுகிறான்.தான் தோன்றித் தனமாக பள்ளிக்கூடம் செல்லாமல் காலம் கழிக்கும் டாய்னல், பள்ளிக்கு திரும்பும் போது, ஏன் விடுப்பு எடுத்தாய் என காரணம் கேட்பார்களே என்று 'தன் தாய் இறந்து விட்டாள்' என ஆசிரியரிடம் பொய் சொல்கிறான்.

பொய் எப்படியோ தெரிந்து கடுமையாக தண்டிக்கப்படுகிறான். இனி வீட்டில் தன்னால் வாழ முடியாது என்று அந்த இரவில் வீட்டுக்கு வரமால் ஓடி விடுகிறான்.பசிக்கு அந்த இரவில் பால் புட்டியை திருடி திருட கற்றுக் கொள்கிறான். மறுநாள் தாய் அவனை கண்டுபிடித்து முதல் முறையாக பரிவாக பேசி படிக்க ஊக்கப்படுத்துகிறாள். டாய்னலோ எனக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை, நான் வேலை செய்ய கற்றுக் கொள்கிறேன் என்பதையும் அந்த தாய் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இருந்தாலும் திருந்த நினைக்கும் டாய்னலுக்கு பள்ளியில் தான் எழுதிய நேர்மையான கட்டுரைக்கும், அவன் மீது இருக்கும் கெட்ட அபிப்ராயத்தால், டாய்னல் யாருடைய கட்டுரையோ திருடி விட்டதாக குற்றம் சாட்டி தண்டிக்க முயற்சிக்கிறார்கள்.

அன்று ஓட்டம் பிடித்த டாய்னல் தன் நண்பனுடம் சேர்ந்து காசுக்காக அவன் தந்தை அலுவலகத்திலிருந்து ஒரு டைப்ரைட்டரை திருடுகிறான். தவறு செய்கிறோமோ என்ற எண்ணத்தில் டைப்ரைட்டரை திருப்பி தன் தந்தை அலுவலகத்தில் வைக்க செல்லும் போது மாட்டிக் கொள்கிறான். வெறுப்பை உமிழும் தந்தை அவனை சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பதற்காக போலீஸிடம் ஓப்படைக்கிறார்.அங்கு அவனுக்கு மேலும் பல கெட்ட அனுபவங்கள். சிறைக்கு வரும் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் தான் நிராகரிக்கப்படுவது தான் எல்லா குற்றங்களுக்கும் காரணம் என்ற அடிப்படையில் பேசுகிறான். சீர்திருத்தப்பள்ளியிலும் அவன் தன் உலகத்தை கண்டுக் கொள்ளவில்லை. அங்கிருந்து தப்பி ஓடுகிறான் ஓடுகிறான் ஓடுகிறான். கடைசியில் ஒரு கடற்கரை அடைந்த மாதிரி காண்பித்து இயக்குநர் பார்வையாளர்களுக்கே டாய்னலின் முடிவை விட்டுவிடுகிறார்.

1959-ம் ஆண்டு பிரெஞ்சு சினிமாவில் எழுந்த புதிய அலை சினிமாவில் த்ரூஃபாவின் இந்த படமும் முக்கியமானது. உலகத்து முதல் முக்கிய 100 திரைப்படங்கள் வரிசையில் இதுவும் முக்கியமானதொரு சினிமா. அந்த காலக்கட்டம் வரை எந்த சினிமாவும் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சினிமாவில் எடுத்துக் கையாளவில்லை. சிறுவர்களும், குழந்தைகளும் ஒரு விளையாட்டு/சந்தோச குறியீடாகவே சினிமா பயன்படுத்தி வந்தது.

பதின்ம வயதில் ஏற்படும் மனமாற்றங்களையும்,ஏமாற்றாங்களையும்,அவர்களின் குரல்கள் நிராகரிக்கப்படுவதையும் 'தி 400 ப்ளோஸ்' என்ற சினிமாவின் மூலம் த்ரூஃபா முதல் முறையாக வெளிச்சம் போட்டு காட்டினார்.

ப்ளாக்கர்களில் அவ்வவ்ப்போது கற்பனை மிக்க சினிமாவுக்கு ஆதரவு குரல்கள் இருக்கும் எப்படியென்றால் 'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று. சில யதார்த்தங்களை வாழ்க்கையில் தவற விட்டுவிடுவதால் சில சமயம் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.அப்போது இந்த மாதிரி யதார்த்த சினிமாக்கள் போகிற போக்கில் போகும் நம் பார்வையை திசை திருப்பி கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

பதின்ம வயது பிரச்சனைகள் என்பது மிக விரிவாக விவாதிக்கப்படவேண்டிய தலைப்பு. தமிழ் சினிமாவில் 'துள்ளுவதோ இளமை, சில பாலுமகேந்திரா (பெயர் ஞாபகமில்லை) படங்களும் முன் வைத்தன. மொத்தத்தில் பதின்ம வயதினருக்கு நிராகரிப்பில்லாத தனி கவனமென்பது கட்டாயம் தேவை. அதை கடந்து வந்த நமக்கும் தெரியுமே.

இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
400 blowsஐத் தொடர்ந்து அதே Antoine Doinel பாத்திரத்தை வைத்து Antoine & Collette / Stolen Kisses / Bed & Board / Love on the Run என்று பிற படங்களையும் எடுத்திருக்கிறார் த்ரூஃபோ.
 
நன்றி மாண்ட்ரீஸர். அய்யோ, இதை சேர்க்க வேண்டுமென நினைத்திருந்தேன். எழுத்துப்போக்கில் இதை மறந்தும் விட்டேன். இன்றைக்குள் அந்த வரியையும் சேர்த்து விடுகிறேன்.
 
அன்புள்ள விஜய்,

இந்தப் படம் பார்க்கலை. ஆனாலும் உங்க பதிவைப் படிச்சபிறகு பார்க்கணுமுன்னு இருக்கு!
அது இருக்கட்டும். நீங்க தான் இந்த வாரத்து 'ஸ்டாரா?' தூள் கிளப்புங்க!
வாழ்த்துக்கள்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
அல்வா,

400ப்ளோஸ் மிக மிக அற்புதமான படங்களில் ஒன்று. ஏற்கனவே மாண்ட்ரீஸருடன் இந்த படம் குறித்து பொடிச்சியின் பதிவின் பின்னூட்டத்தில் பேசியுள்ளேன்.

//ளாக்கர்களில் அவ்வவ்ப்போது கற்பனை மிக்க சினிமாவுக்கு ஆதரவு குரல்கள் இருக்கும் எப்படியென்றால் 'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று. //

என்னை பற்றி சொல்லும்போது பெயர் குறிப்பிட்டு எழுதுங்கள், தயவு செய்து.

மேலும் ஒருமைக்கு பண்மையை பயன்படுத்தாதீர்கள்.

அடுத்து நீங்கள் மேலே சொன்ன "'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று நான் சொல்லவில்லை. ஒரு போதும் சொல்லமாட்டேன். என் பார்வை வேறு.சந்திரமுகி விமர்சனத்தில் நான் கேட்ட கேள்வி வேறு. இங்கே திரிக்கப்பட்டிருப்பது முற்றிலும் வேறு. உங்களுக்கு நான் சொன்ன விஷயம் புரியாமல் இருக்கலாம் என்று சந்தேகத்தின் பலனை அளிக்கிறேன். இதை சுட்டி காட்டுவது மட்டுமே என் வேலை. நான் எழுதியதை நேர்மையாய் எதிர்கொள்பவருக்கு மட்டும் அது குறித்து பதில் சொல்ல முடியும்.

மற்றபடி இந்த விமர்சனம் பயனுள்ள பதிவு. நானும் இந்தபடம் குறித்து எழுத உள்ளேன். உலக சினிமாக்களில் மிக முக்கியமான படமாக இதை பார்க்கிறேன்.

அவர் பெயர் த்ரூஃபோ!
 
/சில பாலுமகேந்திரா (பெயர் ஞாபகமில்லை) படங்களும்/
அழியாதகோலங்களைச் சொல்கின்றீர்களா? அது Summer 42 இன் திருகிய தமிழ்ப்பதிப்பு. ஆனாலும், நன்றாகவே இருந்தது. (சலீல் சௌத்ரியும் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க)
 
நன்றி ரோசா, துளசியக்கா, பெயரிலி.

ரோசா,
//என்னை பற்றி சொல்லும்போது பெயர் குறிப்பிட்டு எழுதுங்கள், தயவு செய்து. //

அய்யோ! அம்மா இப்படி போட்டு உதைக்கிறீங்களே. செம டென்ஷன் பார்ட்டி. அது உங்களை அர்த்தப்படுகிறதா எனத் தெரியவில்லை. வேறு எங்கேயோ பின்னூட்டத்தில் படித்த ஞாபகம்.ஏன் என்றால் இன்னும் வீட்டில் டயல்-அப் இருப்பதால் நுனி புல் மாதிரி தேர்ந்தெடுத்து தான் பதிவுகளை மேய்வேன்.அது உங்கள் பதிவை பார்த்து தான் என் மனதில் வந்தது என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அடுத்த வாட்டி பெயரை போட்டே சொல்லிறலாம். விடுங்க.


//நானும் இந்தபடம் குறித்து எழுத உள்ளேன். உலக சினிமாக்களில் மிக முக்கியமான படமாக இதை பார்க்கிறேன்//

கட்டாயம் எழுதுங்கள். ஆழமான கருத்துக்களை உங்கள் பதிவில் எதிர்பார்க்கலாம்.
 
சென்ற பின்னூட்டம் படத்தை விட்டு வேறு ஒன்றை பேச நேர்ந்ததால் சொல்ல முடியவில்லை.

விஜய் சொல்வது போல் படம் இளம்வயது பிரச்சனைகளை பேசினாலும், படம் அது குறித்ததாக எனக்கு தோன்றவில்லை. படம் அந்த மைய பாத்திரமான சிறுவனின் தேடல் சார்ந்தது. விஜய் சொல்வது போல் குடும்ப சூழல் மட்டும் அந்த சிறுவனை திருட வைத்ததாக தெரியவில்லை. அதற்கு பின் ஒரு தேடலும் இருக்கிறது. சிறுவனுக்கும், அப்பாவுக்கும் நடக்கும் உரையாடலை கவனிக்கவும்.

'கடலை பார்க்க வேண்டும்' என்ற தேடலே படத்தில் முக்கியமானது என்று நினைக்கிறேன். கடைசியில் சிறையி(அல்லது பள்ளியி)லிருந்து தப்பித்து கடலை தேடி அடைந்து, அது வரை கருப்பு வெள்ளையில் சென்ற படம் நீலமாய் விரிகிறது. கடல் கதையின் மிக முக்கியமான -அற்புதம் அல்லது இலட்சியம், உன்னதம் (ஏதோ ஒன்று) குறித்த தேடலின் - உருவகம். ஞாபகமாய் கடைசி காட்சியின் படத்தை விஜய் போட்டிருக்கிறார்.
 
விஜய், நான் எழுதும் போது எழுதியிருக்கிறீர்கள். நான் உதைக்க வில்லை, டென்ஷனும் ஆகவில்லை. என் கருத்துப்படி இந்த தொனியில் (தொனிமட்டுமே) நான் மட்டுமே பேசியுள்ளேன். என் பெயர் குறிப்பிட சொல்வது என் வசதிக்காக மட்டுமே. நான் பதில் சொல்ல வேண்டுமெனில் என் கருத்து நேரடியாய் எதிர்கொண்டால் மட்டுமே செய்யமுடியும். நன்றி.
 
பிரஞ்சு பெயர்களை தவறாய் எழுதுவது பெரிய பிரச்சனையில்லை. தகவலுக்காக மட்டும்.
இப்போதுதான் கவனித்தேன்

//பிரான்சிஸ் த்ரூஃபா //
அவர் பெயர் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ.
 
400 coups பார்த்து மிகவும் பாதிக்கப்பட்டேன். அதே கருவுடன் ஒரு ஜெர்மானியப் படமும் வந்தது. பெயர் மறந்து விட்டேன். அப்படத்தின் இயக்குனர் அப்படம் மேக்ஸ் ம்யுல்லர் பவனல்ல் திரையிடப்பட்டபோது பார்வையாளருடனானக் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார். அவரிடம் நான் 400 coups பற்றிக் குறிப்பிட்டு இரு படங்களுக்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றிக் கேட்டதற்கு அவரும் அவரும் அதை ஆமோதித்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
ரோசா,

நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். இந்த பதிவில் சிறுவனின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்திய அளவிற்கு,தேடலை முன்னிலைப்படுத்தவில்லை.அதை நூலிழையாக சொல்லவிழைந்திருக்கிறேன். ஆனால் அந்த தொனி கொஞ்சம் வேறுமாதிரியாக ஒலிக்கிறது. உதாரணத்துக்கு..

//அவனையொத்த நண்பனுடன் விளையாட்டு அரங்கினில் காசு கொடுத்து விளையாடுவதும், சினிமா பார்ப்பதுமாக தனக்கென தனி உலகம் அமைத்துக் கொள்ள விழைகிறான்.//

//சீர்திருத்தப்பள்ளியிலும் அவன் தன் உலகத்தை கண்டுக் கொள்ளவில்லை. //

மொத்தத்தில் அவன் தேடலின் நிராகரிப்பு தான் சொல்லப்பட்டிருக்கிறது.

கடல் குறியீடு அருமை.

அப்பப்பா.. இந்த ப்ரெஞ்சு பெயர்கள் பெரிய தொல்லையாக இருக்கிறதே.ஆங்கிலம் மாதிரியே மொழி(ஒலி)ப்பெயர்க்கிறேன். இனிமேல் பெயரை எழுதுவதற்கு முன் உங்களை அல்லது டோண்டுவை தொடர்புக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அப்படியே பின்னூட்டத்திலும் சரியான பெயர் உச்சரிப்பை சொல்லி திருத்துங்களேன்.
 
This comment has been removed by a blog administrator.
 
///ப்ளாக்கர்களில் அவ்வவ்ப்போது கற்பனை மிக்க சினிமாவுக்கு ஆதரவு குரல்கள் இருக்கும் எப்படியென்றால் 'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று.////

///என்னை பற்றி சொல்லும்போது பெயர் குறிப்பிட்டு எழுதுங்கள், தயவு செய்து.

மேலும் ஒருமைக்கு பண்மையை பயன்படுத்தாதீர்கள்.

அடுத்து நீங்கள் மேலே சொன்ன "'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று நான் சொல்லவில்லை. ஒரு போதும் சொல்லமாட்டேன். என் பார்வை வேறு.சந்திரமுகி விமர்சனத்தில் நான் கேட்ட கேள்வி வேறு. இங்கே திரிக்கப்பட்டிருப்பது முற்றிலும் வேறு. உங்களுக்கு நான் சொன்ன விஷயம் புரியாமல் இருக்கலாம் என்று சந்தேகத்தின் பலனை அளிக்கிறேன். இதை சுட்டி காட்டுவது மட்டுமே என் வேலை. நான் எழுதியதை நேர்மையாய் எதிர்கொள்பவருக்கு மட்டும் அது குறித்து பதில் சொல்ல முடியும்.////

விஜய்,
நல்லா இருக்கு. தொடருங்கள்.

ரோசா,
விஜய் சொல்லியிருப்பது நான் சொன்னதை.
http://muthukmuthu.blogspot.com/2005/04/not-for-mature-audience.html

இன்னும் எனக்கு கார்ட்டூன் படங்களும், டாம் அண்ட் ஜெர்ரியும் ரொம்பவே பிடிக்கும்.


டேஸ்ட் ஆளாளுக்கு மாறுபடத்தான் செய்கிறது, ஆனால் எது நல்லது,தரமானது என்பதில் அனைவருக்கும் பொதுக்கருத்து உண்டுதான்.
 
//அது ஸும்மெர் 42 இன் திருகிய தமிழ்ப்பதிப்பு. ஆனாலும், நன்றாகவே இருந்தது. (சலீல் சௌத்ரியும் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க)//
அண்ணை,
சம்மர் 42 -ஐ இப்போது கூட 2 வருடங்களுக்கு முன் பார்த்து -மனதை ரிகன்சைல் செய்துகொண்டேன். என்ன படம் !!! என்ன படம்!!! அந்த காலத்திலே (90 களில்) எனக்கு அது கனவுப்படம். பார்க்குப்போது ஒரு சிவ்வு வரும் பாருங்க!!. அழியாத கோலங்கள் பார்க்கவில்லை.
 
அப்போதே எழுதலாமென நினைத்தேன், மறந்துவிட்டது. //பதின்ம வயதில் வீணாப்போனவன் கதை// என்பது ரொம்ப simplisticஆக இருப்பதுபோல் பட்டது. எத்தனையோ விஷயங்கள் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும் - பால்சாக்குக்கு (சரியா?) மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துக் கிட்டத்தட்ட வழிபடுவது, அதைக்கொண்டு அறையைக் கிட்டத்தட்ட எரித்துவிடுவது, வந்தபின் வள்ளென்று குரைக்கும் மாற்றாந்தந்தையும் தாயும் சிறிதுநேரம் கழித்துச் சமாதானமாகி திரைப்படமொன்றுக்குப் போவது என்று. இந்த மாற்றாந்தந்தை விவகாரத்தை எனக்குத் தெரிந்து தமிழில் பசும்பொன் என்றொரு படத்தில் சிவக்குமார் அற்புதமாகச் செய்திருப்பார் (பிரபுவின் மாற்றாந்தந்தையாக) - அந்தப் படம்தான் ஊத்தி மூடிக்கொண்டது - இன்னும் நன்றாக வந்திருக்கவேண்டிய படம் அது. 400 ப்ளோஸ் படத்தை பல முறை திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்று, இன்னும் அலுக்கவில்லை. சிலைகளுள்ள நீரூற்றொன்றுக்குள் பட்டென்று குதித்து சிறுவன் அந்த்வான், தேங்கியிருக்கும் நீரைக் கைகளால் பட் பட்டென்று அள்ளிக் குடிப்பதை, வீட்டில் கோபித்துக்கொண்டு ஃபாக்டரியொன்றிற்குள் தனிக்குடித்தனம் போவதை என்று எண்ணற்ற நினைவுகள். சந்தர்ப்பம் வாய்த்தால் திரும்பவும் பார்க்கவேண்டும்!! அப்போதிருந்த த்ரூஃபோவின் வீச்சு, பின்பு விஞ்ஞானப் புனைகதையான ஃபாரன்ஹீட் 451ஐப் படமாக எடுத்தபோது இல்லாமல் போயிற்று என்றுதான் தோன்றுகிறது. தன்னளவில் அது ஒரு நல்ல படம் எனினும், பிற படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தான் தோன்றுகிறது.
 
அய்யா முத்து நல்ல வேளை ஞாபகப்படுத்துனீங்க. நானும் எங்கேயோ படிச்சேன் படிச்சேன்னு ஞாபகபடுத்த முயற்சி பண்ணினேன். ஸ்ட்ரைக் ஆகவே இல்லை. அதனால் பொதுப்படையா எழுத வேண்டியத போச்சி. நன்றி முத்து.

பெயரிலி, விரிவான கருத்து கொடுத்ததற்கு நன்றி. ஃபாரன்ஹீட் 451ஐ பார்க்க வேண்டுமென நினைத்திருந்தேன். :-(
 
முத்து தகவலுக்கு மிகவும் நன்றி. உங்களை முன்வைத்துதான் எழுதப்பட்டது என்பதுதான் சரியானது. ஒப்புகொள்கிறேம்

விஜய், இதில் 'நல்லவேளை' என்று சொல்ல என்ன இருக்கிறது. என்னை பற்றி சொல்லியிருந்தாலும் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் நீங்கள் சொன்னதும், முத்து சொல்வதும் என் கருத்து அல்ல. அதை நான் சொல்லவில்லை. எனக்கு அது ஒப்புதலும் இல்லை. அதை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதால் எழுதினேன். அவ்வளவே!
 
ஃபாரன்ஹீட் 451 பிரபல்யமான கதை, அந்நியமொழி (திராபைக்கு ;-)) & எதிர்பார்ப்பு

400 blows: இந்நிபந்தனைகள் அற்றது(வை)
 
//பால்சாக்குக்கு (சரியா?) ..//
சரி
 
சரியே; அதனைத் தொடர்ந்துதான் காலை உணவுமேசையிலே திட்டும் பாடசாலையிலே கட்டுரையிலே திருட்டுத்தனம் செய்ததாகக் கிண்டலும் நிகழ்கிறது.

[ Balzac இன் உருவத்துக்குப் பால்சாக்கு என்பது தமிழிலே பொருத்தமே; ஆனால், cannibal என்னும் மாமிச உண்ணிக்கு, கனிபால் என்று தாவரசகவாசம் மட்டும் செய்வது நியாயமில்லை:-) ]
 
//விஜய், இதில் 'நல்லவேளை' என்று சொல்ல என்ன இருக்கிறது. என்னை பற்றி சொல்லியிருந்தாலும் எனக்கு பிரச்சனையில்லை. //

அட விடுங்க ரோசா.

//Balzac இன் உருவத்துக்குப் பால்சாக்கு என்பது தமிழிலே பொருத்தமே//

BTW யார் இந்த பால்சாக்கு. பிரான்சில் புகழ் பெற்றவரா? இந்த அசட்டு கேள்விக்கு மன்னிக்கவும்.

//cannibal என்னும் மாமிச உண்ணிக்கு, கனிபால் என்று தாவரசகவாசம் மட்டும் செய்வது நியாயமில்லை//

:-))))))))))
 
கூகுலியதிலே கொட்டினதில் இரண்டு:
balzac-1

balzac-2
 
நன்றி பெயரிலி. அது என்ன பழக்கமோ தெரியவில்லை. கூகுளுவதே சில சமயம் அலர்ஜியாகி விடுகிறது.
 
விஜய் உங்களுக்கு François Truffaut பிடிக்குமா? நேரில் பேசியிருக்கலாமே !!! என் அபிமான இயக்குனர் அவர் ! பல படங்கள் கவர்ந்தாலும் எனக்கு பிடித்தவைகள் :
Jules et Jim, 1961
[Jules and Jim]
Le Dernier Métro 1980
[The last Métro ]
La Femme d'a cote, 1981
[The Woman Next Door]
Vivement Dimanche ! ;1983
[Confidentially Yours]

இதில் vivement dimanche அவரின் கடைசிப் படம். 1983 ல் கறுப்பு/வெள்ளையில் எடுக்கப்பட்டது.

//அப்படியே பின்னூட்டத்திலும் சரியான பெயர் உச்சரிப்பை சொல்லி திருத்துங்களேன்//

Antoine doinel = அந்துவான் துவானல்

balzac பற்றி இங்கே
 
ஆகா ரவியா, தாங்களை சென்னையில் கண்டு விட்டு வந்த பிறகு தான் த்ரூஃபோ அறிமுகம் ஆனார். அதுவும் இது தான் அவர் இயக்கத்தில் நான் பார்த்த முதல் படம். அடுத்து என் கண்ணில் தட்டுப்பட்டது ப்ரான்ஹீட் 451 & ஜுல்ஸ் அண்ட் ஜிம் தான்.இரண்டையும் பார்த்து விடலாம். அடுத்து பிரஞ்சு மொழி தொடர்புக்கு லிஸ்டில் இன்னொரு ஆள் ரவியா. நன்றி ரவியா.
 
படம் பர்க்க கிடைக்காவிட்டாலும்.....அதை விளக்கிய விதம் அருமை. பார்க்க தூண்டுகிறது ஆனால் வழி தான் இல்லை
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->