<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மன்மத லீலையால் வென்றாரா சூப்பர் ஸ்டார்?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நான் வழும் இந்த காலகட்டத்தில் நான் அறிந்தது ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரை தான். நீண்ட நெடிய தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினிகாந்தை விட்டு விட்டு நூல் பிடித்துக் கொண்டே இறந்த காலத்தினூடே இறங்கினால் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனக்கு தென்பட்டார்.

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சூப்பர் ஸ்டார்களுக்கு இருந்த இரசிக கண்மணிகளும் ஒரே இலக்கண வரையறைகளுக்குள் தான் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இன்றைய சூப்பர் ஸ்டாருக்கும்,முதல் சூப்பர் ஸ்டாருக்கு இருந்த அதே அந்ததுஸ்து அதே மாதிரியான ரசிகப்பட்டாளங்கள் தான் இருக்கின்றன. என்று தமிழ் நாட்டில் சினிமா தோன்றியதோ அன்றே ரசிகர்களும் தோன்றியிருக்கிறார்கள். வரலாறு இவ்வாறுயிருக்கும் போது தற்கால சூப்பர் ஸ்டார் இரசிகர்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை. எனக்கு தெரிந்து இரசனை மாறாமல் அன்று முதல் இன்று வரை பரிணாம வளர்ச்சியே இல்லாமல் இருப்பவர்கள் நமது தமிழ் சினிமா ரசிகர்கள் தான்.

"Image hosted by PicsPlace.toமன்மத லீலையை வென்றார் உண்டோ?" என்ற பாடல் 61 வருடங்களாகியும் இன்னும் மங்க புகழுடன் இருக்கிறது என்றால் அதற்கு அமுதகுரலால் உயிர் கொடுத்த M.K.தியாகராஜ பாகவதர் தான் காரணம். தியாராஜபாகவதரின் சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை. அவருடைய சாதனைப்படங்களில் ஒன்று ஹரிதாஸ். 25 வாரங்கள் தாண்டி ஓடினாலே பெரிய விசயமாக இருக்கும் இன்றைய சூப்பர் ஸ்டார்களின் படத்துக்கு 110 வாரங்கள் ஓடி 3 தீபாவளிகளை கண்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரே படம் ஹரிதாஸ்.அந்த காலத்தில் படங்கள் வருவது மிகக்குறைவு. அதனால் ஹரிதாஸ் ஓடியது என்பது சப்பைக்கட்டு. ஹரிதாஸ் வந்த சமயம் தமிழ்சினிமா தவழுவது விட்டு விட்டு நன்றாகவே நடக்க ஆரம்பித்திருந்தது. ஹரிதாஸ் 1944 அக்டோபர் 16 தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. அந்த வருடத்தில் வந்த தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 35. பாகவதருக்கு இது 9 வது படம். அதையும் மீறி 3 வருடங்கள் ஓடியது என்றால் தமிழ் சினிமாவின் அது ஒரு மைல்கல்.

தங்க விக்கிரகம் மாதிரியான பளபளத்த உடம்பு, பட்டு வேட்டி பட்டு சட்டை, நெற்றியில் ஜவ்வாது பொட்டு,காதில் வைரம் பதித்த தோடு, கையில் மிகப்பெரிய தங்க மோதிரம், கணீரென்று பாடும் குரல்வளம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரர் தியாகராஜபாகவதர். "என்னைப் போல் வழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை" என்று சொல்லும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை இந்த பதிவில் அலசுவோம்.

தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆசாரியார், தாயார் மணிக்கத்தம்மாளுக்கு 1-3-1910-ம் ஆண்டு பிறந்தவர் தியாகராஜன். பிறந்த ஊர் மாயாவரம் (ஒரு சூப்பஸ்டார் அங்கு தோன்றியதாலோ என்னவோ அந்த ஊரில் தற்போதைய சூப்பர் ஸ்டாருக்கு ஏக ரசிகர்கள்). தியாகராஜனின் குடும்பம் பிறகு திருச்சி சென்று செட்டில் ஆனவர்கள். பள்ளி படிப்பு மண்டையில் ஏறாமல் துள்ளித் திரிந்தவர் தியாகராஜன். எங்கு சென்றாலும் தன் வசிய குரலில் பாடல்களை பாடி கூட்டம் சேர்த்து விடுவார் தியாகராஜன். எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகங்கள் புகழ் பெற்றிருந்த சமயம். அந்த நாடகப் பாடல்களின் மேல் தியாகராஜனுக்கு அபார ஈர்ப்பு. பாட்டெல்லாம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்த தந்தை அவன் விருப்பத்துக்கே இசைந்தார். முறைப்படி கர்நாடக சங்கீதத்தை ஈடுபாட்டுடன் கற்க ஆரம்பித்தார். தந்தை அவரை நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். முதல் நாடகமான ஹரிசந்திராவில் லோகிதாசனாக நடித்து குரல் வளத்தால் பல பாடல்களை 'ஒன்ஸ் மோர்' கேட்க வைத்தவர்.

திருநெல்வேலியில் ஒரு நாடகத்தில் தியாகராஜன் நடித்துக் கொண்டிருந்த போது எஸ்.ஜி.கிட்டப்பா என்னுடைய அடுத்த வாரிசு தியாகராஜன் தான் என்று பிரகடனப்படுத்தி அவருடைய குரல் வளத்தைப் பாராட்டி 'பாகவதர்' என்ற அடைமொழி அவர் வழங்க அன்றிலிருந்து தியாகராஜ பாகவதர் ஆனார். அவர் நடித்துக் கொண்டிருந்த பவளக்கொடி நாடகம் தமிழகமெங்கும் சக்கைப்போடு போட, அழ.இராம. அழகப்ப செட்டியார் அதை படமாக தயாரிக்க விரும்பினார்.

தமிழில் டாக்கீஸ் எனப்படும் பேசும் படம் முதன் முதலாக காளிதாஸ் உருவில் 1931-ல் வெளிவந்தது. அதற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு 1934-ல் தியாகராஜ பாகவதர் முதன் முதலாக நடித்த பவளக்கொடி வெளிவந்தது. அந்தப் படத்தில் 60 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆரம்ப கால சினிமாக்கள் புராண மற்றும் இதிகாச நாடகங்களை தழுவி வந்ததால் பாடல்களே பிரதானமாக இருந்தன. லைட்டிங் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் வெயிலில் செட் போடப்பட்டிருக்கும். அங்கு தகடுகள் வைத்து சூரிய ஒளியை செட்டில் பாய்ச்ச நடிகர்கள் வெயிலில் நின்று பலபாடல்களை பாட வேண்டும். இந்த நிலையில் எடுக்கப்பட்ட பாகவதரின் பவளக்கொடி சூப்பர் டூப்பர் ஹிட்.

இப்படி வரிசையாக 9 படங்களும் ஹிட் கொடுக்க மற்ற நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ஓடவா வேண்டாம என்று ஓடியது. பாகவதர் புகழின் உச்சிக்கே சென்று விட்டார்.அவரிடம் பணம் தண்ணீர் போல் ஓடியது. 100 சவரன் உள்ள தங்கதட்டில் தான் சாப்பிடுவார். உயர்தர காரில் தான் பவனி வருவார். வீட்டில் ஒரு குதிரை வைத்துக் கொண்டு அதில் தான் சவாரி செய்வார். இருந்தாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கும் நல்ல ஒரு ஸ்டாராக திகழ்ந்தார். பாகவதரின் ஹேர் ஸ்டைல் 'பாகவதர் கிராப்' என்ற பெயருடன் புகழ் பெற ஆரம்பித்தது.

ஹரிதாஸ்

'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை, பாபநாசம் சிவனின் பாடல்கள்,இளங்கோவனின் வசனம், ஜி.மாதவனின் இசை, தியாகராஜ பாகவதரின் பாட்டும் நடிப்பும் என்றால் வெற்றி கூட்டணி என்று பெயர். ஹரிதாஸ் 1944-ல் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது உலக யுத்தம் உச்சத்திலிருந்தது. ஃபிலிம் ரோல்கள் கிடைப்பதிலும் அதிக டிமாண்ட் இருந்ததால் 11 ஆயிரம் அடிக்கு மேல் படங்கள் எடுக்கக் கூடாது என அரசாங்கம் தடை விதித்தது. அதனால் தான் என்னமோ ஹரிதாஸ் ஜவ்வு மாதிரி இழுக்காமல் விறுவிறுப்பாக எடுக்கப்படிருந்தது. அந்த படத்தில் இடைவேளை வரை பெண் பித்தர், குடிகாரன், பெற்றோரை வெறுப்பவராக வருவர். அப்புறம் திருந்திய உள்ளமாக கலக்கியிருப்பார்.

அந்த படத்தின் "மன்மத லீலையை வென்றார்" உண்டோ என்ற பாடலும், தாசி ரம்பாவாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரியும் முக்கிய காரணம். டி.ஆர்.ராஜகுமாரியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. மயக்கும் விழிகளையும், காந்த புன்னகையும் கொண்டிருந்த முதல் தமிழ் பட நடிகை.

சென்னை ப்ராட்வே தியோட்டரில் 110 வாரங்கள் சளைக்காமல் ஓடியப்படம். ஏன்? தமிழ் திரைப்பட உலகிலேயே முதன் முதலாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய கே,பி.சுந்தராம்பாளின் 'நந்தனார்' படம் ஹரிதாஸின் முன் ஈடுக்கொடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.(நந்தனார் படத்தில் தான் சுந்தராம்பாள் ஒரு லட்சம் வாங்கினார்)

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

லட்சுமிகாந்தன் என்பவர் ஒரு கிரிமினல். ஏகப்பட்ட வழக்குகள் அவன் மேல் பதிவாயிருந்தன. 'இந்து நேசன்' என்ற மஞ்சள் பத்திரிக்கையை நடத்தியவர். அந்த மஞ்சள் பத்திரிக்கையில் புகழின் உச்சியில் இருப்பவர்களை பற்றியும், செல்வந்தர்களை பற்றியும் கிசு கிசு முதல் அசிங்கமாக எழுதி பெரும் பணத்தை அவர்களிடம் பறிப்பது வழக்கம். புகழின் உச்சியில் இருந்த பாகவதரைப் பற்றியும் நிறைய எழுதியவர். இந்த நிலையில் 1944 அக்டோபர் 19-ம் தேதி லட்சுமிகாந்தன் தாக்கப்பட்டார். தான் தாக்கப்பட்டதாக வடிவேல் என்பவர் மீது புகார் கொடுத்தார். பிறகு 1944 நவம்பர் 8-ம் தேதி 10 மணி அளவில் சென்னை வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் அருகே இருவரால் கத்தியால் குத்தப்பட்டார். போலீஸிடம் புகார் கொடுத்து விட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதுவரையில் தியாகராஜ பாகவதர் மீதோ என்.எஸ்.கிருஷ்ணன் மீதோ எந்த புகாரும் அவர் சொல்லவில்லை. அன்று இரவே லட்சுமி காந்தன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

லட்சுமிகாந்தன் இறந்து 50 நாட்கள் கழித்து 27-12-1944-ல் பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். தமிழகமே குலுங்கியது. லட்சுமிகாந்தன் இவர்கள் மேல் எந்த புகாரும் கொடுக்கவில்லையென்றாலும் முக்கிய குற்றவாளிகளின் லிஸ்டில் எம்.கே.டியும், என்.எஸ்.கேவும் சேர்க்கப்பட்டனர்."வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள்" என்று வெளியே வரமுடியாத படி உள்ளேயே வைக்கப்பட்டனர். வழக்குக்காக எம்.கே.டி சொத்துக்களை எல்லாம் விற்க ஆரம்பித்தார். அவர் புகழும் சரிய ஆரம்பித்தது. பல கோர்ட்டுகளில் ஏறி கடைசியாக எம்.கே.டிக்கும் என்.எஸ்.கேக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பல படங்களுக்கு புக்கிங் ஆகியிருந்த பாகவதருக்கு பட அதிபர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். அவர் சொத்துக்களை எல்லாம் இழந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கவில்லை ஆகையால் லண்டனில் உள்ள 'பிரிவில் கவுன்சில்' தான் உச்ச நீதிமன்றம். மேல் முறையீடு செய்து வி.எல்.எத்திராஜ் (எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர்) தன் வாதத்திறமையால் வழக்கை தவிடு பொடியாக்கி இருவரையும் மீட்டார். ஆனால் இன்னமும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு புரியாத புதிராகவே உள்ளது.

30 மாதங்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்த பாகவதருக்கு திரும்ப படவாய்ப்புகள் வந்தன. பணம்,புகழ் போன்றவற்றை வெறுக்க ஆரம்பித்தார். படங்களில் நடிக்கப்போவதில்லை என்று மறுத்தார். முழுக்க முழுக்க சங்கீத கச்சேரிகளில் இறங்கப்போவதாக சொன்னார். சங்கீதமும் அவரை வரவேற்கவில்லை. திரும்ப திரும்ப தோல்விகள் தழுவ ஆரம்பித்தன. தானே சொந்தப்படம் எடுக்க முனைந்தார். அவர் சிறையிலிருந்த 30 மாத காலத்தில் தமிழ் சினிமா முக்கிய திருப்புமுனைகளை சந்தித்து வெகுவாக முன்னேறியிருந்தது. புராண படங்களை விட்டு விட்டு சமூக படங்கள் வர ஆரம்பித்திருந்த காலம்.பாகவதரால் சமூக படங்கள் என்ற சட்டத்தில் பொறுத்திக் கொள்ள முடியவில்லை.

சொந்த படங்களும் கையைச் சுட, கிடைக்கும் நேரத்தில் கச்சேரி செய்தே வாழ்க்கையை ஓட்டி வந்தார். எத்தனையோ பேர் அவருக்கு உதவி செய்ய துணிந்தாலும் எதையும் அவர் ஏற்கவில்லை. முக்கூடல் சொக்கலால் ராம் சேட் பீடி கம்பெனி முதலாளி பெரிய பணக்காரர். பாகவதரின் தீவிர ரசிகரும் கூட. அவரிடம் முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டார். முக்கூடலில் பெரிய பங்களாவை கட்டி 'ஏழிசை மாளிகை' என பெயரிட்டு பாகவதரை தன்னுடனே தங்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதையும் மறுத்தார்.அவர் குருதட்சணையாகக் கொடுத்த எம்.டி.டி 21 என்ற எண்ணுள்ள சவர்லே காரை மட்டும் பாகவதர் கடைசிகாலம் வரை பயன்படுத்தினார்.

இதற்கிடையில் பாகவதரை சர்க்கரை நோய் வேறு வாட்டியது. என்.எஸ்.கேவும் பாகவதரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இருவரும் கொள்கைகளில் நேர் எதிர். பாகவதர் தீவிர கடவுள் பக்தர். என்.எஸ்.கே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் மிக ஈடுபாடு உடையவர்.பாகவதரின் நோய்க்கு மருத்துவரை அதிகம் நாடாமல் தெய்வம் காப்பற்றுவர் என்று வாழ்ந்தவர். கண்பார்வையும் அவருக்கு மங்க ஆரம்பித்தது. பொள்ளாச்சியில் ஒரு கச்சேரி முடிந்ததும், அவருடைய அபிமானி சர்க்கரை வியாதிக்கு ஏதோ மருந்து கொடுத்தார் என பாகவதர் குடிக்க, அது ஒவ்வாமையோ எதோ ஆகி மிக சீரியாஸான நிலமையில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைகள் பலனின்றி 1959 நவம்பர் 1-ம் தேதி 4:30 மணி அளவில் உயிர் நீத்தார்.

பாகவதருடன் எம்.ஜி.ஆர்
Image hosted by PicsPlace.to

அசோக்குமார் என்ற படத்தில் பாகவதருடன் எம்.ஜி.ஆர் அவரின் நண்பணாக நடித்திருப்பார். பாகவதர் மேல் எம்.ஜி.ஆர் மிகுந்த மரியாதை உடையவர். அவர் பாகவதரின் இறுதி சடங்கு சென்னையில் நடக்க வேண்டுமென விரும்பினாலும் பாகவதரின் சொந்த ஊர் திருச்சிக்கே கொண்டு செல்லப்பட்டார்.

அவர் மறைந்தாலும் தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற நிலைமையையும், அவருடைய குரலும் என்றுமே மறையாது.

M.K. தியாகராஜ பாகவதர் நடித்த படங்களின் வரிசை

Image hosted by PicsPlace.to

பவளக்கொடி (1934)
நவீன சாரங்கதாரா (1936)
சிந்தாமணி (1937)
சத்தியசீலன் (1938)
அம்பிகாபதி (1938)
திருநீலகண்டர் (1939)
அசோக்குமார் (1940)
சிவகவி (1942)
ஹரிதாஸ் (1944)
ராஜமுக்தி (1948)
அமரகவி (1952)
சியாமளா (1953)
புதுவாழ்வு (1957)
சிவகாமி (1959)


References:

1. இந்த பதிவை எழுதுவதற்கு உதவிய சுரேஷ் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.அவர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கென்றே தனியான வலைத்தளம் வைத்திருக்கிறார். இன்னும் மேலும் சுவையான பாகதவரைப் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். அந்த வலைத்தளத்தை இங்கே சென்று பார்க்கவும்.

2. 'ஏழிசை மன்னர்' தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாறு -மாலதி பாலன் பதிப்பகம்: BOOKS INDIA

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
தலைவருக்கு இதெல்லாம் தெரியுமா? ஃபோன் போட்டு சொல்லவா உம்ம பதிவப் பத்தி? நம்பர் இருக்கு என்ட.

சின்ன வயசில் ரொம்ப தலைமுடி வச்சிருந்தா என் அப்பா - "என்ன தியாகராஜ பாகவதர்னு நினைப்பா", என்று சொல்வார். பாகவதரின் அந்த பிரத்யேக ஹேர் "ஸ்டைல்" பற்றி ஏதும் மேல் விவரம் உண்டா?

- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
லட்சுமிகாந்தன் கொலை வழக்கை விசாரித்த ஒரு போலீஸ் அதிகாரிதான் பாகவதர் மற்றும் என்.எஸ்.கே ஆகியோரிடம் துட்டு கேட்டு, கிடைக்காததால் வேண்டுமென்றே அவர்களை வழக்கில் இழுத்ததாகப் படித்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
அடுத்து யாருங்க? தவமணி தேவிதானே ;-)
 
விஜய்,

'சூப்பர்'பதிவு! எங்க வீட்டுலே எம்.கே.டி. கலெக்ஷ்னா அந்தக் காலத்துலே வந்த எல்.பி. ரெகார்ட்ங்க இருக்கு!

நானும் அப்பப்ப 'தூள்.காம்.லே கேக்கறதுண்டு!

நல்லாஇருங்க! வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
துளசி

பி.கு: நடிகை சிநேகாவுக்கு டி.ஆர். ராஜகுமாரி சாயல் கொஞ்சம் இருக்குன்னு எங்க அபிப்பிராயம்!
 
are you sure that you are not violating copyright by putting the songs in web and encouraging others to download.you have included your blog address also with song details and it gets displayed in windows media player.this may result in trobule for you if copyright holders take this seriously.please note that sharing music like this whether it is downloaded from sites or you ripped of from your personal collection is not legal.all is fine as long as you dont get into trobule but do you want to take a risk.giving links to songs is a safer option.
 
விஜய்,

இந்த 'அனானிமஸ்' சொல்றதுலே பாய்ண்ட் இருக்கு. கவனமா இருங்க. வேணாமே
இந்த ரிஸ்க்.

அன்புடன்,
அக்கா
 
சூப்பர் ஸ்டார் பதிவு, கலக்கறீங்க!
ஆரம்பமே இப்படின்னா?
 
பாகவதரின் பிற்கால வாழ்க்கை மிகக் கொடுமையானது. தமிழின் மற்ற சூப்பர் ஸ்டார்களுக்கு இருந்த ஆதரவும், பணச்செல்வாக்கும் பாகவதரிடமில்லை. ஒரு காலத்தில் தங்கதட்டில் சாப்பிட்டவர் பிற்காலத்தில் கையேந்தினார் என்று சொன்னால் நம்பத்தான் வேண்டும். பாகவதரின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம், மாறிவிட்ட திரையுலகமும் மக்களும், மிதமிஞ்சிய பிடிவாதமும்தான் என்பது என் கருத்து.

இதேப் போல் வாழ்ந்து கெட்ட நிறைய நபர்களை தமிழ்சினிமாவில் உதாரணம் காட்டலாம். ஆனால், இன்றளவும் என் மனம் நெருடும் இழப்பு இருவருடையது. ஒருவரும் சிதம்பரம் ஜெயராமன், கணீர் குரலுக்கு சொந்தக்காரர். சிவாஜிக்கு டி.எம்.எஸ் செட்டாகுமுன்பு, பாடலுக்கு குரல் கொடுத்தவர். அற்புதமான பாடல்களை தமிழில் பாடியவர். இறந்த போது கடனை தவிர வேறெதுவ்மில்லை. இத்தனைக்கும், ஜெயராமன் கலைஞர் கருணாநிதியின் மனைவியின் அண்ணன். கைவிடப்பட்டு, காசில்லாமல், செத்துப் போனார். கலைஞர் நினைத்தால் உதவியிருக்கலாம் ஆனால் இல்லை என்றுதான் வரலாறு சொல்லுகிறது (இதுக்கு மேல எழுதினா இது அரசியலாகிவிடும்)

இன்னொருவர் நகைச்சுவை மன்னன் சந்திரபாபு. நிறைய பேர்களுக்கு நாகேஷ் ஒரு நகைச்சுவை ஜாம்பவனாக தெரிந்தாலும், என்னகென்னவோ சந்திரபாபு தான் இன்றளவும் மன்னனாக தெரிகிறார். நாகேஷ் மிக சாமர்த்தியமாக அப்போதிருந்த இரு பெரும் நடிகர்களின் அரவணைப்பில் வாழ்ந்த போது, சந்திரபாபு அதற்கு நேரெதிர். சபாஷ் மீனாவில் சென்னை பாஷை பேசுவாதாயிருந்தாலும் சரி. குங்கும பூவே என பாடும்போதும் சரி. சந்திரபாபு rules the audience. தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் முற்போக்கான சிந்தனையுடையவர். அந்த 7 நாட்கள் என்றொரு பாக்கியராஜ் படம் பார்த்திருப்பீர்கள். அதன் நிஜ கிளைமேக்ஸ் சந்திரபாபுவின் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொண்ட தன் மனைவி வேறொருவனை மனதார விரும்புகிறார் என்று தெரிந்தவுடன், அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தவர் அவர். அவ்வளவு முற்போக்கான சிந்தனை உடையவர், எம்.ஜி.ஆரினை பகைத்துக் கொண்டதால், ஒரு படம் நடிப்பதாக ஒப்புக் கொண்டு கடைசியில் காலை வாரியதால் நஷ்டப்பட்டு, மீண்டும் சொந்தப்படமெடுத்து வீணாய்ப்போனவர். சந்திரபாபு என்று பேசியவுடன் நினைவுக்கு வருவது தேங்காய் சீனிவாசன் அவரைப் பற்றிய சொல்லிய செய்திதான். சந்திரபாபு உச்சத்திலிருந்தபோது தான் தே.சீனிவாசன் தமிழ் திரையில் நுழைந்திருந்தார். மற்ற நகைச்சுவை நடிகர்கள் அவரை மதிக்காதபோது, சந்திரபாபு அவரை அழைத்து நிறைய படங்களும், படத்தயாரிப்பாளர்களிடமும் சொல்லி அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார். பின்னாளில் சீனிவாசன் சொந்தமாக வீடு கட்டி கிரகபிரவேசம் பண்ணியபோது வந்த கூட்டத்தில் கொஞ்சம் கசங்கலாக சட்டையணிந்த ஒருவர், சீனிவாசனை தனியாக அழைத்து, "என்ன தேங்கா, மறந்துட்டியா, சரக்கு இருக்குமாடா, காலையிலிருந்து குடிக்கலை" என்று சொன்னதை கேட்டவுடன் தே. சீனிவாசனின் கண்களில் கண்ணீர் கொட்டியது. அப்படிக் கேட்டவர் சந்திரபாபு.

வாழ்ந்து கெட்ட மனிதர்களைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் இவர்களிருவரும்தான் நினைவுக்கு வருவார்கள். தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரும் அதே ரகமாகதான் தெரிகிறார். நல்ல பதிவு. இந்த வாரம் திருவாரமாக போகுமென்று பட்சி இப்போதே கூவ ஆரம்பித்துவிட்டது.
 
பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.

அனானிமஸ், உங்களின் அக்கறையான காப்பிரைட் பற்றிய கேள்விக்கு ரொம்ப நன்றி. நானும் மிக மிக யோசித்து தான் அதை போட்டேன். எனக்கு தெரிந்த சில பாகவதர் அபிமானிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது பாகவதரின் பாடல்களை ரசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் தவறில்லை என்றார்கள். பாகவதரின் பாடல்கள் ஆவணப்படுத்தப்படாமல் நிறைய பாடல்கள் தொலைந்து விட்டன. அது போல் அவர் பாடிய கர்நாடக சங்கீதத்தை அந்த காலத்திலேயே அவர் பதிய மறுத்து விட்டதால், அவர் பாடிய கர்நாடக இசைத்தட்டுகள் ரொம்ப rare ஆகிவிட்டது.

பாகவதர் ரசிகர்கள் அந்த மாதிரி பாடல்களை தேடி தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில பாடல்கள் இலங்கை வானொலி தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருந்ததாக சொல்லியிருந்தார்கள். ஒரு சிலரின் முயற்சியில் பாகவதரின் புகழ்பெற்ற பாடல்ல்களை தொகுத்துயிருக்கிறார்கள். காப்பிரைட் எதற்கும் இருப்பதாக தெரியவில்லை. நான் ஏறக்குறைய 10,15 கடைகள் ஏறி இறங்கி பாகவதர் பாடல்களை தேட வேண்டியிருந்தது.எந்த ஒரு கம்பெனியின் ஆடியோ சிடியும் கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்தது MP3 வடிவிலே தான்.

எனக்கு தெரிந்த வரையில் பாகவதர் பாடல்களுக்கு காப்பிரைட் பிரச்சனை இல்லை என்பதாலேயே போட்டிருந்தேன். இதைப்பற்றி தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தெரிவிக்கவும். சுட்டியை தூக்கி விடுகிறேன். கவனத்திற்கு கொண்டு வந்த அனானிமஸ்க்கு மீண்டும் நன்றி
 
நரேன்,

உங்களின் பின்னூட்டம் வெரி பவர் ஃபுல்.

அவருடைய வாழ்க்கை வரலாறு ஆவணங்களை தேடி படித்தப் போது 'கையேந்தினார்' என்பதை வன்மையாகவே கண்டிக்கிறது.கடைசிவரை பாகவதர் தன் சொந்தகாலில் இன்று உழைத்து தான் சாப்பிட்டார் என்கிறது அந்த ஆவணங்கள். ஆனால் வறுமையில் உழன்றது என்னவோ நிதர்சனமான உண்மை.

//பாகவதரின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம், மாறிவிட்ட திரையுலகமும் மக்களும், மிதமிஞ்சிய பிடிவாதமும்தான் என்பது என் கருத்து//

இது 100 % உண்மை.

அவர் சிறையில் இருந்த காலத்தில் சுதந்திரத்துக்கு ஒட்டிய காலகட்டத்தில் தமிழ்சினிமா பல மாற்றங்களை கண்டுக் கொண்டுவிட்டது. அதே ராஜா ராணி மனோபாவத்தில் இருந்த பாகவதரால் ஈடுகொடுக்க முடியவில்லை. சொத்தை இழந்தவர் தன்மானம் இழக்கமால் பிடிவாதத்துடனே வாழ்ந்தார் என்பதை சிறு நிகழ்ச்சிகள் மூலம் விளக்கியிருந்தார்கள்.

பிற்காலத்தில் 'அம்பிகாபதி' படத்தை சிவாஜிகணேசன் நடிக்க உறுதியானது. ஏற்கனவே பாகவதர் அம்பிகாபதி என்ற படத்தில் அம்பிகாபதியாக நடித்திருந்தார்.தயாரிப்பாளர் பாகவதருக்கு உதவ எண்ணி கம்பர் வேடம் ஏற்க அழைத்தார். பாகவதர் மறுத்தார். சிவாஜியை விட 10000 ரூபாய் அதிகம் தருவதாக கூறினார்கள். பாகவதர் அவர்களிடன் தன்னை அம்பிகாபதியாக ஏற்கனவே மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். திரும்ப அம்பிகாபதியின் தந்தையாக நடிக்க முடியாது என்றார். உண்மையில் பாகவதரின் அம்பிகாபதி தான் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்தது. சிவாஜியின் படம் அந்த அளவுக்கு ஓடவில்லை.

2. இரண்டாவது நிகழ்ச்சி டி.ஆர்.மகாலிங்கம் கொடிகட்டி பறந்துக் கொண்டிருந்தார். தன் பையனை பள்ளியில் சேர்க்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ந்திருந்தார். அங்கு பாகவதர் தான் பாடினார். டி.ஆர்.மகாலிங்கம் பாகவதருக்கு உதவ எண்ணி வெள்ளித் தட்டில் 1000 ரூபாய் வைத்துக் கொடுத்தார். பாகவதர் அந்த ஆயிரம் ரூபாயின் மேல் 1 ரூபாயை வைத்து அந்த தட்டை டி.ஆர் பையனுக்கே திருப்பி கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு தங்க பேனாவையும் பிரசண்ட் பண்ணினார் என்று டி.ஆர்.மகாலிங்கம் தன் கடைசி காலத்தில் சொல்லியதாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.

காமராஜர் பாகவதரை அரசியலுக்கு அழைத்தும் அரசியலுக்கு வரவில்லை.

உண்மையில் இந்த காலத்திலும் உச்சியில் இருக்கும் சினிமா நடிகர்களும் ஒரு காலத்தில் உரு தெரியாமல் போய் கொண்டுதானிருக்கிறார்கள்.
 
கையேந்தினார் என்பதை வேண்டுமானால் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். தன்மானத்தோடு, பிடிவாதத்தோடு வாழ்ந்தவர் அவர். தினந்தந்தியில் வரலாற்று சுவடுகளில் பாகவதர் பற்றிய வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொண்டதுதான். ஆனாலும், மகா உன்னதமான கலைஞன் அவன்.

//நடிகை சிநேகாவுக்கு டி.ஆர். ராஜகுமாரி சாயல் கொஞ்சம் இருக்குன்னு எங்க அபிப்பிராயம்!//

அப்படிப்பார்த்தால், அஞ்சலி தேவியின் உப்பிய கன்னங்கள் போலவே ராதிகாவும் இருப்பார். துளசி, என்ன ஒப்பீடு இதுவென்று புரியவில்லை ;)
 
//உண்மையில் இந்த காலத்திலும் உச்சியில் இருக்கும் சினிமா நடிகர்களும் ஒரு காலத்தில் உரு தெரியாமல் போய் கொண்டுதானிருக்கிறார்கள்.//

ராமராஜன்?!!
மோகன்?!!
கார்த்திக்?!!
 
பாகவதர் புதுக்கோட்டையில் வீடு வாங்கிப் போட்ட வேகத்தைப் பார்த்த புதுக்கோட்டை( அப்போதைய)
மன்னர் பாகவதருக்கு வீட்டை யாரும் விற்கக் கூடாது என்று சட்டமே இயற்றினாராம்.
இவருக்கு அடுத்த தலைமுறையான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் போன்றோர் விழித்துக்
கொண்டார்கள். அதற்கு முன்பு திடீர் கோடீஸ்வரன் என்பதே கிடையாது. கூரையை பிய்த்துக் கொட்டிய
பணத்தைப் பார்த்து, படிப்பறிவில்லாவர்களுக்கு எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் போயிருக்கும். போததற்கு
சுற்றி துதிப்பாடும் அள்ளக்கைகளின் தவறான வழிக்காட்டுதல்கள்.
நல்ல பதிவு விஜய்!
உஷா
 
சூப்பர்ஸ்டார் யாரென்று நிர்ணயிப்பதில் தலைமுறை இடைவெளிகளுக்கும் பெரும்பங்கு இருக்கிறது எனினும் இந்தக்காலத்திலெல்லாம் ஊதப்பட்ட பலூன்களே உயரங்களென அதிகம் வியக்கப்படுகின்றன.
 
they are under copyright.the copyright owners saregama formerly hamv have released a volume, 4 casettes using his songs.so your assumption is wrong.
 
நரேன்,

துளசியக்கா அவர்கள் டி.ஆர்.ராஜகுமாரி சிரிப்பையும், சினேகா சிரிப்பையும் ஒப்பிடுகிறார் என நினைக்கிறேன். நானும் அவர்கள் இருவரின் சிரிப்பு முகபாவம் ஒன்றாக இருப்பதை கண்டிருக்கிறேன்.

உஷா,

பின்னூட்டத்திற்கு நன்றி. பாகவதர் திருச்சி கண்டோன்மெண்டில் தான் மிகப்பெரிய பங்களா கட்டிக் கொண்டார் என படித்திருக்கிறேன். கோவில் மாதிரி வீடு கட்ட வேண்டும் அதுவும் கலைக்கோவில் மாதிரி இருக்க வேண்டுமென சொன்னதாக படித்தேன்.

சுட்டுவிரல்,

பின்னூட்டத்திற்கு நன்றி.
//எனினும் இந்தக்காலத்திலெல்லாம் ஊதப்பட்ட பலூன்களே உயரங்களென அதிகம் வியக்கப்படுகின்றன. //
:-)

அனானிமஸ்,

கவனத்திற்கு கொண்டுவந்தற்கு நன்றி. டவுன்லோட் சுட்டியை தூக்கி விட்டேன்.
 
நல்ல பதிவு விஜய். பாகவதரை பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் இது மேலும் அறிந்துகொள்ள உதவியது. அதிலும் அவரை வீழ்ந்தவர் என்ற சித்திரத்தை தருகிற பொதுக்கருத்துக்கு முரண்பட்டு சுயமரியாதையோடு தம் உழைப்பில் வாழ்ந்தவர் என்று காட்டியிருப்பது நல்லது. நன்றி!

எனக்கும் சந்திரபாபுவைப்பிடிக்கும், அவரது தன்மானம், முற்போக்குத் தனத்துக்காக. அவரது மண வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டபோது அது இன்னும் அதிகமானது. நன்றி நாராயணன்.
 
அந்த கால மனுசங்களுக்கெல்லாம் பகவதர் ஒரு உந்துசக்தி தான்.

பாகவதரின் பாடல்களை பாடி பாடியே டி.எம்.எஸ்-க்கு பாடும் ஆசை வந்ததாக ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->