<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

என்னளவில் ஜெமினி கணேசன்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
பாளையங்கோட்டையில் வசித்த என்னுடைய டவுசர் வயதில் ஒரு சில வீடுகளில் மட்டுமே டிவி இருந்தது.அந்த சமகாலத்தில் தான் தூர்தர்ஷன் தமிழ் நிகழ்ச்சிக்காக நேரத்தை ஒதுக்கியிருந்தது.என்னுடைய அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் டிவி இருந்தது. தமிழ் படம் போடுகிறார் என்றால் எங்கள் டீமில் உள்ள ஒரு நண்பன் வீடு வீடாக ஓடி வந்து சொல்வான்.நல்ல மனது படைத்தவர்கள் அந்த டிவி வைத்திருப்பவர்கள். ஊரையே கூட்டி டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.சீக்கிரம் போனால் தான் அந்த வீட்டில் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க இடம் கிடைக்கும். இல்லாவிட்டால் டிவிக்கு எதிர்க்க ஹாலில் இருக்கும் ஜன்னலில் ஏறி வெளியிலிருந்து தான் டிவி பார்க்கமுடியும். ரொம்ப நேரம் ஜன்னலின் கம்பியை பிடித்து தொங்க கைகள் வலிக்கும். அதனால் நேரமாக அந்த தெருவுக்கு போய் கோலி குண்டு அல்லது பம்பரம் விளையாட(யார் வயிற்றில் என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் அப்போது நாங்க சின்ன பசங்க, மேலும் அந்த ட்ரெண்ட் செட் ஆகவில்லை அப்போது) ஆரம்பித்து விடுவோம். மூடியிருக்கும் அந்த வீட்டில் படம் ஆரம்பிக்க 5 நிமிடம் முன்பு தான் கதவை திறப்பார்கள். முதல் ஆளாக நண்டு சுண்டுகளாகிய நாங்கள் தான் முன்னால் உட்கார்ந்திருப்போம்.

ஒருவேளை இந்த டிவி வீட்டுகாரர்கள் ஊருக்கு போய்விட்டால் எங்களுக்கு கவலை தொற்றிக் கொள்ளும். எங்கள் லிஸ்டில் கிருஷ்ணன் கோவில் தெருவில் இருந்த அந்த வீடு தான் அடுத்த இலக்காக இருக்கும். பிரச்சனை என்னவென்றால் ஏரியா விட்டு ஏரியா வந்த நாய்களை போல் தான் அந்த தெருகாரர்கள் எங்களை பார்ப்பார்கள். எந்த வீட்டு புள்ள நீ, எந்த தெருவென்று ஆயிரம் கேள்விகள் கேட்டு தான் உள்ளே விடுவார்கள். அந்த தெரு பசங்க கிட்ட நாங்க மொறச்சிக்கக் கூடாது. அப்புறம் அந்த வீட்டுல போய் டிவி பார்க்க உட்கார்ந்தால் முதுகில கிள்ளி விட்டு எதுவும் தெரியாதது போல டிவி பார்க்க ஆரம்பிப்பார்கள்.

இப்படி தொங்கிக் கொண்டும், கிள்ளுகள் வாங்கிக் கொண்டு அறிமுகம் ஆனவர்கள் தான் நமது கணேசன்கள். அதாவது சிவாஜி கணேசனும், ஜெமினி கணேசனும். அந்த நேரத்தில் தூர்தர்ஷனில் போடும் எல்லா பழைய படங்களும் கண்களில் கண்ணீர் வரவழைக்கும். முக்கியமாக எஸ்.எஸ்.ஆர், ஏ.வி.எம் ராஜன், ஜெமினி கணேசன் ஆகியோர்கள் நன்றாகவே இலவச கண்ணீர் சேவையை செய்வார்கள். ஜெமினி கணேசன் படத்திற்கு வரும் கண்ணீரை துடைக்க கர்ச்சீப் போதுமென்றால், ஏ.வி.எம் ராஜன் படத்திற்கு ஒரு டவல் வேண்டும். அதைவிட எஸ்.எஸ்.ஆர் படத்திற்கு வரும் கண்ணீர் துடைக்க ஒரு போர்வையையே கொண்டு போக வேண்டும். அவ்வளவு கண்ணீர் வரும்.

ஒரு நாள் இப்படி தான் ஜெமினி கணேசனின் 'ராமு' படம் டிவியில் போட போவதாக நண்பன் வந்து சொன்னான். நண்டு சுண்டுவாக எங்களை போன்றே ஒரு நண்டு அந்த படத்தில் நடித்திருக்கிறான் என என் அப்பா சொன்னார். ஆவல் மிகக் கொண்டு ஒரு கர்ச்சீப் மட்டுமே கொண்டு போய் டிவி பார்க்க உட்கார்ந்தது பெரிய தப்பாகி விட்டது. ஜெமினி கணேசன் ராமு படத்தில் சிரிக்கும் போது டிவி பார்க்க உட்கார்ந்த கும்பலுடன் சேர்ந்து நாங்களும் மொத்தமாக சிரித்தோம். படம் போக போக ஜெமினி கணேசன் அழவைத்துக் கொண்டேயிருந்தார். ஒவ்வொருவர் கண்ணிலும் குடம்குடமாக கண்ணீர். கையில் வைத்திருந்த கர்சீப்பையும் மீறி கண்ணீர் உடைந்த அணை தண்ணீராக பாய்ந்தது. கண்ணில் கண்ணீர் மிகுதியானதால் மூக்கிலும் சளி ஒழுக ஆரம்பித்தது. கண்ணில் கண்ணீர் வந்தாலும் பரவாயில்லை டிவி பார்க்க உட்கார்ந்திருக்கும் யாவருக்கும் தெரியாமல் கண்களை அப்போ அப்போ துடைத்துக் கொள்ளலாம். ஆனால் மிகுதி அழுகையால் மூக்கில் ஒழுகும் சளித் தண்ணீரை துடைப்பது தான் பெரும் பாடு. சுர்ர்ர்ர்ர்ர்ர்... என்று மூக்கை உறியும் போது எல்லாருக்கும் தெரிந்து விடும் இவன் படம் பார்த்து தான் அழுதுக் கொண்டிருக்கிறான் என்று. சில சமயம் சுர்ர்ர்ர்... என்று மூக்கு உரியும் போது அழும் போது வரும் ஏக்க பெருமூச்சும் சேர்ந்துக் கொள்ளும். சுர்ர்ர்ர்ர்ர்....ஏஏஏஏஏ என்று சத்தம் வந்தவுடன் நான் ஜெமினியின் ராமு படம் பார்த்து அழுதுக் கொண்டிருப்பது டபுள் கன்பர்ம் ஆகிவிடும்.

இந்த மாதிரி தான் எனக்கு அறிமுகம் ஆனவர் ஜெமினி கணேசன்.பழைய படம் பார்க்கும் போது எல்லாம் யார் வந்தாலும் பக்கத்தில் இருப்பவரிடம் "இவர் உயிருடன் இருக்கிறாரா? செத்துப் போயிட்டாரா?" என்று கேட்டு கொண்டேயிருப்போம். நாகைய்யா, ரங்கராவ் வரும் போது இவர் செத்து போய்விட்டார் என்பார்கள். ஜெமினி பற்றி கேட்ட போது இவர் உயிருடன் இருக்கிறார் என்று சொன்னார்கள். ரஜினி,கமல்,விஜயகாந்த் என்று அந்த சமயத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்ததால் ஜெமினி எங்கே போனாரென்று கேட்கும் துணிவு இல்லை.

ஒரு சமயம் ஜெமினி மூஞ்சை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி ஒரு நடிகை கார்த்திக்வுடன் ஆடிக் கொண்டிருந்தார். இவர்கள் யார் என்று கேட்டதற்கு ஜெமினி கணேசனின் மகள் ஜிஜி என்று சொன்னார்கள். ஒரு நாள் டிவி பேட்டியில் டாக்டர் கமலா என்பவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்க, யார் என்று கேட்டேன். ஜெமினியின் மகள் என்றார்கள். அப்புறம் டிவியில் இந்தி நடிகை ரேகாவை பார்த்தபோது திரும்ப ஜெமினி கணேசனின் மூஞ்சி, யார் என்று கேட்டதற்கு ஜெமினியின் மகள் என்றார்கள்.

நடிகை சாவித்திரியை ஜெமினியின் முதல் மனைவி என்றார்கள். அப்புறம் யாரையோ திருமணம் செய்துக் கொண்டார் என்றார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை திருமணம் புரிந்துக் கொண்டார் ஜெமினி. இப்படி ஜெமினிகணேசனுக்குள்ளும் ஒரு தேடல் இருந்திருக்கிறது. பல திருமணங்கள் செய்துக் கொள்வதற்கும், பல குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு அசாத்திய மனோதிடமும், உடல்வலிமையும் தேவை. அப்போது தான் புரிந்தது 'காதல் மன்னன்' என்ற பட்டம் அவ்வளவு சாதரணமாக வந்து விட முடியுமா?

அடுத்து 'கொஞ்சும் சலங்கை' படம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அவர் பேசும் "சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்தி விளையாட ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே" என்று நிறுத்தி ஒரு மாதிரி வாய்ஸில் வசனம் பேசுவார். மயில்சாமி போன்ற மிமிக்ரி மன்னர்களின் வாயில் அந்த வசனம் கிடைத்து உருட்டி விளையாடினார்கள். நம்பியார்,லூஸ் மோகன், ரஜினி, கமல் என்று பலரின் வாய்ஸில் அந்த வசனம் பேசி படு பேமஸாகி விட்டது.

தமிழ் சினிமாவில் திடீரென ஒரு ட்ரெண்ட் முழித்துக் கொண்டது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வயதான நடிகர், நடிகைகளை தேடி தேடி புதிய படங்களில் நடிக்க வைத்து பெருமையடைந்தார்கள். சிவாஜி, சரோஜாதேவி,நாகேஷ் வரிசையில் ஜெமியும் உண்டு. நீண்ட நாட்களுக்கு பிறகு மேட்டுகுடி, அவ்வை சண்முகி போன்ற படங்களிலும் ஜெமினி கலக்கினார்.

இன்று சிங்கப்பூர் வசந்தம் செண்ட்ரல் தமிழ் சேனலில் 1999 ஜெமினி கணேசன் கொடுத்த பேட்டியை ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். மிக உற்சாகத்துடன் இளமை துள்ளலுடன் பேசிக் கொண்டிருந்த அந்த பேட்டி என் கவனத்தை கவர்ந்தது. அவற்றில் சில....

ஜெமினி 'மனம் போல் மாங்கல்யம்' என்ற படத்தில் தான் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தாராம். 1953-ல் வெளியான அந்த படத்தில் நடித்த போது வயது 33 ஆக இருந்ததாம். எல்லாருக்கும் கேரியர் முடிகிற வயதில் தான் என் கேரியர் ஆரம்பம் ஆனது என நினைவு கூர்ந்தார். 33 வயது ஆனாலும் 20 வயது இளைஞனாக தான் எனக்கு அப்போது தோற்றம் இருந்தது என பெருமையுடன் விளக்கினார் [பின்னே காதல் மன்னன் என்று சொன்னால் சும்மாவா?]. 'மனம் போல் மாங்கல்யம்' படத்தில் ஜெமினிக்கு இரட்டை வேடம். யூத் வேடம் ஒன்று. பைத்தியகாரன் வேடம் ஒன்று. யாரோ அவர் மனைவியிடம் சென்று ஜெமினி பைத்தியகாரன் வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொன்னார்களாம். அவர் மனைவியும் படம் பார்த்துவிட்டு இதில் என்ன நடிப்பு இருக்கிறது. எப்போதும் வீட்டில் இருக்கும் போது எப்படியிருக்கிறாரோ அதே மாதிரி தான் அந்த வேடத்தில் இருக்கிறார் என்றாராம்.

மிகையான நடிப்பு தேவையா என்ற கேள்விக்கு....

டிராமா ஆர்டிஸ்ட் எல்லாம் கொஞ்சம் மிக நடிப்பை செய்ய வேண்டிய அவசியத்தை பகிர்ந்துக் கொண்டார். நாடகம் போடும் போது கடைசியில் உட்கார்ந்திருப்பவனுக்கும் கேட்கும் படி கத்தி தான் பேச வேண்டும். அப்போது நடிப்பு என்பது அவற்றில் கொஞ்சம் மிகைப்பட்டு தான் போகிறது. அதுவே சினிமாவென்று வரும் போது டிராமா ஆர்டிஸ்ட்களால் பழக்கத்தை விட முடியாமல் மிகை நடிப்பு வந்துவிடுகிறது. சில இடங்களில் ஒவர் ஆக்டிங்(மிகைநடிப்பு) தேவை என்பதை பகிர்ந்துக் கொண்டார்.

ஜெமின் எடுத்த சொந்தப்படமான "நான் அவனில்லை" படத்தை பாலசந்தர் இயக்கியிருக்கிறார். அதில் ஜெமினி 9 மொழி பேசும் 9 வேடங்களில் நடித்திருக்கிறாராம். அது எல்லாவற்றிலும் அண்டர் ஆக்டிங் (குறை நடிப்பு) செய்திருப்பதாக சொன்னார். அதுவும் பேசப்பட்டதென நினைவு கூர்ந்தார்.

தற்காலத்து படங்களை பேசும் போது....

பழைய நாட்கள் படங்களில் குவாலிட்டி அதிகமாக இருந்து குவாண்ட்டிடி(எண்ணிக்கை) குறைவாக இருந்ததாகவும் தற்போது குவாலிட்டி குறைந்து எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் சில படங்களே வெற்றி பெறுகிறது என்றார். அந்த காலத்தில் ஸ்டூடியோ ஓனர் மற்றும் பெரிய ப்ரொட்யூசர் மட்டுமே படம் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் தற்போது எல்லாரும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டதால் குவாலிட்டி பற்றி அதிகம் யாரும் கவலைபடவில்லை என்றார்.

தற்கால சினிமாவில் கவர்ச்சி பற்றி.....

கவர்ச்சி இருந்தால் தான் மக்கள் படம் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை கடுமையாக ஆட்சேபித்தார். மக்களின் இரசனையை அந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டவர்கள் படைப்பாளர்கள் தான். அவர்கள் தான் மக்கள் மீதும் பழி சுமத்துகிறார்கள் என்று சொல்லி விட்டு நல்ல ஒரு எடுத்துகாட்டையும் சொன்னார். குழந்தை பிறந்து தாய்பால்,பவுடர்பால்,புட்டிபால் என குடித்து, பிறகு சிறிது வளர்ந்தவுடன் திட உணவு என உட்கொண்டு, பெரிதாக வளர்ந்தவுடன் நன்றாக ***சாம்பார்***,தயிர்,மோர் என்று சாப்பிடுகிறவனை ஒரு நண்பன் அழைத்து சென்று வெற்றிலை பாக்கு போட சொல்லி கொடுத்து அத்துடன் புகையிலை பழக்கத்தையும் அடிமைப்படுத்திகிறான். அந்த நண்பனை போல தான் இக்காலத்து தமிழ்சினிமா படைப்பாளர்கள் ஆகிவிட்டார்கள்.பிறகு அடிமையானவனை குற்றம் சொல்வது போல மக்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்றார்.

ஜெமினி மீது படுபிரமாதமான ஈர்ப்பு எனக்கு இல்லாவிட்டாலும் அவருடைய மறைவை அறிந்ததும் ஒரு வருத்ததுடன் மேல் சொல்லியவை மனதில் மேலெழுந்தன. மொத்தத்தில் சினிமா நம் மீது உண்டாக்கியிருக்கும் தாக்கம் கொஞ்ச நஞ்சமா?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
கொஞ்சும் சலங்கையைப் பற்றி மேலும் சில விஷயங்களைக் கூற ஆசைப்படுகிறேன். காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரம். சோவியத் யூனியனில் இப்படம் திரையிட்டப்போது, ஒரு ரஷ்யர் படத்தை வெகு உன்னிப்பாகப் பார்த்து விட்டு (பாஷை புரியாமல்தான்), வெளியில் வந்து தன் தமிழ் நண்பரிடம் ஜெமினியின் ஸ்டில்ல் படத்தைக் காட்டிக் கேட்டாராம் "இந்தப் பெண் மட்டும் ஏன் ஜாக்கெட் போடாமல் இருக்கிறாள்?" என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
//பல திருமணங்கள் செய்துக் கொள்வதற்கும், பல குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு அசாத்திய மனோதிடமும், உடல்வலிமையும் தேவை. //

விஜய்,
சரிதான்.., கதை அப்படி இருக்குதா ? :-).
 
'sumai thaangi' padam parththu (while studying 4th std), kadaisiyil dhukkaam thaaLaamal romba azhudhaen. I wonder now as to how at that yourng age I was crying for all those love sentiments.

its very true that the owner's children used to pinch, just for fun though in our case.

vishy
 
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி
 
Well said vijay....

He has lived his life to the FULL. A lucky soul !~
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->