<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தூங்க விடு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இரவு நேரம். 13 வயதான சிறுமி சரசு தொட்டிலை ஆட்டியபடி சன்னமான குரலில் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.

"உல்லாய் என் கண்ணே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிராரோ என் செல்ல கண்ணே பாட்டைக் கேட்டுக் கண்ணுறங்கு"

ஒரு சின்ன பச்சை நிற விளக்கு சாமி படத்துக்கு முன்னால் எரிந்துக் கொண்டிருந்தது. அறையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒரு கொடிக்கயிறு கட்டப்பட்டிருந்தது. அதில் குழந்தையின் துணிகளும் ஒரு பெரிய கறுப்பு நிறக்கால்சட்டையும் தொங்கிக் கொண்டிருந்தது. அறையின் கூரை முகப்பில் பச்சை விளக்கொளி திட்டாகப் படிந்திருந்தது. விளக்கு வெளிச்சத்தில் குழந்தையின் துணிகளும்,கால்சட்டையும் அடுப்பின் மீதும், தொட்டிலின் மீதும்,சரசுவின் மீதும் நீண்ட நிழல்களை பரப்பிக் கொண்டிருந்தன. விளக்கு சிமிட்டும் போது கூரை முகப்பு திட்டும், மற்ற நிழல்களும் காற்றில் அசைந்தாடுவது போல உயிர் பெற்று அசைந்தாடின. அறை ஒரே புழுக்கமாக இருந்தது. முட்டைகோஸ் சூப் வாசனையும் கூடவே செருப்புக்கடையில் இருப்பது போன்ற துர்நாற்றமும்.

குழந்தை அழுதுக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக அழுது களைத்துப் போயிருந்தது. ஆனாலும் தொடர்ந்து அழுதது. அது எப்போது அழுகையை நிறுத்துமென தெரியவில்லை. சரசு தூங்கி வழிந்தாள். அவளது கண்ணிமைகள் ஒட்டிக் கொண்டன. தலை கிறங்கத் தொடங்கியது. கழுத்தும் வலித்தது. அவளால் கண்ணிமைகளோ உதடுகளையோ அசைக்க முடியவில்லை. தன்னுடைய முகம் மரத்துப்போனதாக உணர்ந்தாள். அவளுடைய தலை குண்டூசியின் தலையைப் போலச் சிறுத்துப் போவதாக தோன்றியது. வலுவில்லாத குரலில்

"ஆராரோ ஆரிராரோ என் கண்ணே கண்ணுறங்கு
நான் உனக்கு கஞ்சிக் காய்ச்சி தாரேன் கண்ணுறங்கு"


இரவு பூச்சி எங்கோ கத்திக் கொண்டிருந்தது. கதவைத் தாண்டி அடுத்த அறையில் முதலாளியும் முதலாளியம்மா பங்கஜமும் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். தொட்டில் தன் போக்கில் கீரிச்சிட்டுக் கொண்டிருந்தது. சரசு இன்னமும் தாலாட்டு என்ற பெயரில் முனங்கிக் கொண்டிருந்தாள். இரவு நேரத்தில் சுருதிச் சேர்த்த சங்கீதத்தைப் படுக்கையில் படுத்தப்படி கேட்டால் எப்படி இருக்குமோ அவ்வளவு சுகமாக இருந்தது தூங்கிக் கொண்டிருந்தவர்களின் குறட்டை ஒலிச் சேர்க்கை. ஆனால் அவளுக்கு எரிச்சலூட்டியது. காரணம் அது அவளைத் தூங்க தூண்டியது. அவள் தூங்கக்கூடாதே. சரசு தூங்க நேருமானால்... கடவுளே! அவளுடைய முதலாளியும் முதலாளியம்மாவும் அடித்து நொறுக்கி விடுவார்கள்.

விளக்கு சிமிட்டுகிறது. கூரைமுகப்பு பச்சைத் திட்டும் நிழல்களும் ஊசலாடி அரைகுறையாய் மூடித் திறக்கும் சரசுவின் கண்களை அழுத்துகின்றன. தூங்கியும் தூங்காத கிறக்க நிலையிலான அவளுடைய மூளையை புகைமூட்டமான காட்சிகள் கண் மேலமர்ந்து அழுத்துகின்றன.அழுது அரற்றும் குழந்தையைப் போலக் கறுத்த மேகங்கள் வானத்தில் நிலவொளியில் ஒன்றையொன்று துரத்துவது தெரிகிறது. அடுத்து சரசுவுக்கு அகலமான சாலை ஒன்று சகதி மூடிய நிலையில் தென்படுகிறது. வாகனங்கள் சாலை நெடுக ஆங்காங்கே நின்றிருக்கின்றன. ஆட்கள் மூட்டை சுமந்து அலுத்து தளர்ந்து நடைப்போடுகிறார்கள். நிழல்கள் முன்னும் பின்னுமாக அலை பாய்கின்றன. திடீரென மூட்டை தூக்குபவர்களும் அவருடைய நிழல்களும் சாலையில் சரிந்து விழ நேர்ந்தது. "எதுக்காக இப்படி?" என சரசு கேட்க "தூங்கணும் தூங்கணும்!" என்று அவர்கள் பதில் சொன்னார்கள். சொல்லிவிட்டு அங்கேயே அயர்ந்து தூங்கி விட்டார்கள். நிம்மதியான தூக்கம். காக்கைகளும் காடைக்குருவிகளும் தந்திக் கம்பிகலில் உட்கார்ந்துக் கொண்டு குழந்தை அழுது அரற்றுவதுப் போல கரைந்தன. தூங்குபவர்களை எழுப்ப முயல்வதுப் போல கத்தி தீர்த்தன.

"ஆராரோ ஆரிராரோ என் கண்ணே கண்ணுறங்கு
நான் உனக்கு கஞ்சிக் காய்ச்சி தாரேன் கண்ணுறங்கு"


சரசு முணுமுணுத்தாள். தான் இப்போது புழுக்கமான இருட்டான ஒரு குடிசையில் இருப்பதாக உணர்ந்தாள்.

மரித்துப்போன அவளுடைய தந்தை முனுசாமி தரையில் இப்படியும் அப்படியும் புரண்டுக் கொண்டிருந்தார். அவள் அவரை நேரடியாக பார்க்கவில்லை. ஆனாலும் வலியினால் அவர் தரையில் உருண்டபடி முனகுவது அவளுக்கு தெளிவாக கேட்டது. "குடல் வெந்துப் போச்சி" என்று அவர் சொன்னது கேட்டது. ஒரு வார்த்தைகூட பேச முடியாத அளவுக்கு வலி உக்கிரமாக இருந்தது. அவரால் மூச்சு மட்டுமே விட முடிந்தது. பற்கள் கிடுகிடுத்துக் கொண்டிருந்தன.

"பூ.... பூ....பூ...பூ....ம்ம்ம்ம்ம்"

அவளுடைய அம்மா பாப்பா தன் கணவன் செத்துக்கொண்டிருப்பதைச் சொல்வதற்காக முதலாளி வீட்டுக்கு ஓடினாள். நெடுநேரத்துக்கு முன்னமே அம்மா போய்விட்டாள். அவள் இதற்குள் திரும்பியிருக்க வேண்டும். சரசு அடுப்படியில் காத்திருந்தாள். அப்பாவின் முனகல் ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது. அதைத் தொடர்ந்து யாரோ தங்கள் குடிசைக்குள் நுழையும் அரவம் கேட்டது. அவர் பக்கத்து டவுனிலிருந்து வந்திருந்த ஓர் இளவயது டாக்டர். அவர் மருத்துவம் பார்ப்பதற்காக கிராமத்துக்கு வந்திருந்தவர் முதலாளி வீட்டில் தங்கியிருந்தார். முதலாளி தான் அவரை இங்கே அனுப்பியிருக்க வேண்டும். டாக்டர் குடிசைக்குள் நுழைந்தார். அவரை இருட்டில் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் இருமுவதும் கதவைத் தள்ளும் ஓசையும் கேட்டது.

"விளக்கு ஏதாச்சிம் ஏத்துங்க" டாக்டர் சொன்னார்.

"பூ..பூ.." நடுங்கிய முனுசாமியின் நறநறத்த குரல்தான் பதிலாக வந்தது.

பாப்பா அடுப்படிக்கு விரைந்து தீப்பெட்டியை உடைந்த சட்டிப் பானைக்குள் துழவ தொடங்கினாள். ஒரு நிமிடம் அரவமில்லாமல் கழிந்தது. டாக்டர் தன் சட்டைப்பையில் தட்டுப்பட்ட தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்தார்.

"கொஞ்சம் பொறுங்க அய்யா கொஞ்சம் பொறுங்க" என்று சொல்லிவிட்டு குடிசையை விட்டு வெளியே போன பாப்பா சற்று நேரத்தில் ஒரு துண்டு மெழுகுவர்த்தியுடன் வந்தாள்.

முனுசாமியின் கண்கள் மின்னி ஒளிர்ந்தன. அவனுடைய பார்வையில் ஒரு மாதிரியான கூர்மையிருந்தது. அவன் டாக்டரையும் குடிசையையும் வெறித்துப் பார்ப்பது போலிருந்தது.

"என்னாச்சி அய்யா உங்களுக்கு?" அவனை நோக்கி குனிந்தபடி டாக்டர் கேட்டார் "எத்தனை நாளா உடம்பு இப்படியிருக்கு உங்களுக்கு?"

"என்னவா? செத்துகிட்டிருக்கேன் டாக்டர்....... நான் போகும் காலம் வந்திரிச்சி... நான் இனிமே பொழைக்க மாட்டேன்"

"பைத்தியம் மாதிரி பேசாதீங்க. குணப்படுத்துறதுக்கு தானே நாங்க இருக்கோம்"

"அப்படி குணப்படுத்திட்டீங்கன்னா நான் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்பேன் டாக்டர். ஏன்னா சாவு என்னை நெருங்கிட்டுருக்கு டாக்டர்"

டாக்டர் அவனை கால்மணி நேரம் சோதித்துப் பார்த்தார். பின்னர் எழுந்து நின்று சொன்னார்:

"நான் ஒன்னும் செய்றதுக்கில்லே. நீங்க இப்போ ஆஸ்பத்திரிக்கு போயே ஆகனும். ஒடனே கிளம்புங்க. இப்பவே நேரமாச்சி. ஆஸ்பத்திரியிலே எல்லாரும் தூங்கியிருப்பாங்க. ஆனாலும் பரவாயில்லே. நான் ஒரு சீட்டு தாரேன். நான் சொல்றது காதுலே விழுதா?"

"நீங்க சொல்றது சரிதானுங்கய்யா. ஆனா அவரு எப்படிப் போவாரு. இப்போ எந்த வண்டியும் வேற கிடைக்காதே" என்று முறையிட்டாள் பாப்பா.

'பரவாயில்லே நான் உங்க முதலாளி கிட்ட சொல்றேன். அவரு ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணித் தருவாரு..."

டாக்டர் போய்விட்டார். மெழுகுவர்த்தி தீர்ந்து முடிந்தது. அதே "பூ...பூ..." முனகல் ஒலி. அரைமணி நேரம் கழித்து யாரோ குடிசைப் பக்கம் வந்தார்கள். முனுசாமியை கொண்டு போக வண்டி வந்திருந்தது.

இப்போது நன்றாக புலர்ந்துவிட்ட காலைப் பொழுது, பாப்பா வீட்டில் இல்லை. கணவன் முனுசாமியுடன் மருத்துவமனை போயிருந்தாள். எங்கேயோ ஒரு குழந்தை அழுதது. அதனைச் சமாதானப்படுத்த தன்னுடைய குரலிலேயே யாரோ பாடுவதாக சரசுவுக்கு கேட்டது.

"ஆராரோ ஆரிராரோ என் கண்ணே கண்ணுறங்கு
என் பாட்டைக் கேட்டு கண்ணுறங்கு"


பாப்பா கண்ணில் கண்ணீர் முட்ட மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்தாள். விசும்பியபடி "அவங்க ராத்திரியெல்லாம் நல்லத்தான் பார்த்துக்கிட்டாங்க. ஆனா விடியறப்போ ஆண்டவன்கிட்ட போய்ச் சேர்ந்திட்டாரே....ரொம்பத் தாமதமாகக் கொண்டு வந்ததா அவங்க சொல்றாங்க.... சீக்கிரமா போயிருக்கனும்..."

"அப்பா!......" சரசு சாலையில் இறங்கி அழத் தொடங்குகிறாள். ஆனால் திடீரென்று யாரோ அவளுடைய பின்னந்தலையில் பலமாகத் தாக்குகிறார்கள். அதனால் அவளுடைய நெற்றி பக்கத்திலிருந்த மரத்தில் முட்டி மோதுகிறது. அவள் கண்களை திறந்து ஏறிட்டுப் பார்க்கிறாள். அவருடைய முதலாளி முறைத்துப் பார்த்தபடி நிற்பது தெரிகிறது.

"என்னடி பண்றே சின்ன சிறுக்கி" முதலாளி தொடர்ந்தார் "கொழந்தை அழுதுட்டிருக்கு... நீ தூங்கி வழியிறே..."

அவர் காதோடு சேர்த்து அறைகிறார். அவள் அதிர்ந்து தலை நிமிர்கிறாள். பயத்துடன் நடுங்கி வேகவேகமாக தொட்டிலை ஆட்டுகிறாள். தன்னுடைய தாலாட்டுப் பாடலை முணுமுணுக்கிறாள். கூரை மேல் பச்சைத் திட்டும் கால்சட்டையும், குழந்தையின் துணியும் உருவாக்கிய நிழல்கள் மேலும் கீழுமாக சலனமுற்று சரசின் மீது படிகின்றன. அவளுடைய மூளையை மீண்டும் அது ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மீண்டும் சகதி புரண்ட சாலையை பார்க்கிறாள். தோல்பையை முதுகில் தொங்க விட்டப்படி ஆட்கள் ஆங்காங்கே படுத்த நிலையில் ஆழந்த உறக்கத்திலிருக்கிறார்கள். அவர்களை பார்த்த சரசுவுக்கு தூங்க வேண்டுமென்ற தணியாத ஏக்கம் ஏற்பட்டது. அவள் ஆனந்தமாக விட்டால் அப்படியே தூங்கி விடுவாள். ஆனால் அவளுடைய அம்மா பாப்பா அவளை அவசரப்படுத்தியபடி பக்கத்திலேயே நடந்து வந்துக் கொண்டிருந்தாள். ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடுவதற்காக அவர்கள் அவசரம் அவசரமாக டவுணுக்கு போய்க் கொண்டிருந்தார்கள்.

"ஏதாச்சிம் பிச்சை போடுங்கய்யா. ராசா பிச்சை போடுய்யா... கருணை காட்டுங்கைய்யா!" எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் அம்மா பிச்சை கேட்டாள்.

"கொழந்தைய எங்கிட்ட கொடு!" பழக்கமான அந்தக் குரல் கேட்கிறது. "கொழந்தைய எங்கிட்ட கொடு!" அதே குரல் மீண்டும் கேட்கிறது; ஆனால் இந்த தடவை கடும்கோபத்துடன் "தூங்கித் தொலைக்கிறியா நாயே! உருப்படாத சிறுக்கி".

சரசு துள்ளி எழுகிறாள். சுற்றும் முற்றும் பார்க்கும்போது தான் விவரம் புரிந்தது. அங்கே சாலை இல்லை.அம்மா இல்லை. ஆள் நடமாட்டமில்லை. அவள் முதலாளியம்மா மட்டுமே தட்டுப்படுகிறாள். குழந்தைக்கு பாலூட்ட வந்திருக்கிறாள்.அவள் அந்த அறையின் மையத்தில் நின்றிருந்தாள். பருத்த தோள்களுடன் குண்டாக இருந்த அவள் குழந்தைக்கு பாலூட்டி, பணிவிடை செய்து அசுவாசப்படுத்தியதை முழுவது சரசு எட்ட நின்று பார்த்தபடியே வேலை முடியும் வரை நின்றிருந்தாள். ஜன்னல் வழியே பார்த்தப்போது புறவெளி கறுப்பு நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு மாற தொடங்கியிருந்தது. கூரை முகப்பு பச்சைத்திட்டும் நிழல்களும் மங்கலாக தொடங்கிவிட்டன. விரைவில் காலைப்பொழுது வந்துவிடும் என்பதற்கான அறிகுறிகள்.

"இந்தா தூக்கிக்கோ..." மார்புக்கச்சை பொத்தனை சரி செய்தப்படி முதலாளியம்மா சொன்னாள். "குழந்தை அழறான். எதாச்சிம் போக்கு காட்டு."

சரசு குழந்தைய தூக்கி தொட்டிலில் போட்டு மறுபடியும் தாலாட்டுகிறாள். பச்சைத்திட்டும் நிழல்களும் படிப்படியாக மறைகின்றன. இப்போது எதுவும் அவளுடைய கண்களை அழுத்தவும்,மூளையை ஆக்கிரமிக்கவுமில்லை. ஆனால் இன்னமும் தூக்க கிரக்கத்தில் தான் இருந்தாள். பயங்கர தூக்கம் அழுத்தியது. சரசு தொட்டிலின் முனையில் தன் தலையை சாய்த்து தொட்டிலோடு தானும் ஆடிக்கொண்டிருந்தாள். தூக்கத்தை தவிர்க்க அவள் கண்டுபிடித்த ஒரே வழி. ஆனாலும் கண்கள் ஒட்டிக் கொண்டன. தலை கனத்தது.

"சரசு... அடுப்பை பத்த வை" முதலாளியின் குரல் கதவு இடுக்கு வழியாகக் கேட்டது.

ஆகா... எழுந்திருந்து வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சரசு தொட்டிலை விட்டுவிட்டு விறகை எடுத்து வர கொட்டடிக்கு ஓடினாள். அவளுக்கு அது மகிழ்ச்சியாகவேயிருந்தது. உட்கார்ந்திருக்கும் போது வரும் தூக்க கிறக்கம் ஓடியாடி இயங்கும் போது சற்று குறைந்து விடுகிறதல்லவா? விறகை எடுத்து வந்தாள். அடுப்பை பற்ற வைத்தாள். தன்னுடைய மரத்துப்போன முகம் மறுபடியும் பழைய நிலமைக்கு திரும்பியது போல் உணர்ந்தாள். அவளுடைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகிக் கொண்டிருந்தது.

"சரசு வெந்நீர் வை" முதலாளியம்மா.

சரசு விறகிலிருந்து சிம்புகளை பிரித்தெடுத்து அடுப்பிலிட்டு வெந்நீர் வைப்பதற்குள் அடுத்த கட்டளை பிறந்தது.

"சரசு அய்யாவோட ஷூவை தொடச்சி வை"

அவள் கீழே உட்கார்ந்து ஷூ உறைகளை துடைத்து சுத்தம் செய்யத் தொடங்கினாள். அந்த உறைகள் நல்ல முழங்கால் வரை நீண்டு மூடியிருப்பவை. அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. இந்த நீண்ட் உறைக்குள் தலையை நுழைத்து ஒரு குட்டித் தூக்கம் போட்டால் எப்படியிருக்கும்!... திடீரென்று அந்த கவச உறை நீண்டு, உப்பி, அந்த அறை முழுவது வியாபித்தது. சரசு பிரஷ்ஷை நழுவ விட்டாள்.ஆனால் உடனுக்குடன் சுதாரித்துக் கொண்டு தலையைச் சிலுப்பிக் கொண்டு கண்களை அகல விரித்தாள்.

"சரசு. வாசப்படியை கழுவிவிடு. வர்றவங்க போறவங்க அதைப் பார்த்த எனக்கு தான் கேவலம்!"

சரசு வாசல்படியை கழுவினாள். எல்லா அறைகளையும் கூட்டிப் பெருக்கினாள். இன்னோர் அடுப்பை பற்ற வைத்து கடைத்தெருப் பக்கம் ஒடினாள். நிறைய வேலையிருக்கு. அவளுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்க முடியாது.

அடுக்களை மேசையெதிரே ஒரே இடத்தில் நின்றபடி உருளைகிழங்கையும் வெங்காயத்தையும் உரிப்பதைப் போன்ற அவஸ்தை வேறெதுமில்லை. அவளுடைய தலை தள்ளாட்டத்துடன் மேசையை நோக்கி சரிந்து தொங்கியது. உருளைக்கிழங்குகள் அவள் கண்ணெதிரே நடனமாடின, கத்தி அவள் கையிலிருந்து நிலை தடுமாறியது.அப்போது அவளுடைய தடித்த சரீர முதலாளியம்மா சேலையை வாரிச் சுருட்டி இடுப்பில் செருகி கூப்பாடு போட்டாள். அது சரசுவின் காதைக் குடைந்து ரீங்காரிமிட்டது. எல்லாரும் சாப்பிட்டி முடியும் வரை காத்திருப்பது எரிச்சலான விசயம். அதற்கு பிறகு பாத்திரம் துலக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். இன்ன வேலை என்றில்லை. எல்லாவற்றையும் செய்து முடித்து தூங்குவதற்க்காக கட்டையை சாய்க்க நீண்ட நேரமாகிவிடும்.

பகல்பொழுது ஒருவழியாய்க் கழிந்து முடியும். சாயங்கால நேரங்களில் குழந்தையைப் பார்க்க விருந்தாளிகள் வந்துவிடுவார்கள்.

திரும்ப கட்டளைகள் "சரசு அடுப்ப பத்த வை. வந்தவங்களுக்கு காப்பி போடு". சின்ன சட்டி ஆகையால் ஐந்து ஆறு முறை பால் ஊற்றி காப்பி போட வேண்டும் வந்தவர்களுக்கு கொடுக்க. உபசாரம் ஒரு மணி நேரமாவது நடக்கும். அதுவரைக்கு அவள் விருந்தாளிகளின் முகங்களை பார்த்தபடி அங்கேயே நிற்க வேண்டும். என்ன கட்டளை வருமோ என்று காத்திருக்க வேண்டும்.

அய்யா தனியாக கச்சேரி நடத்துவார். "சரசு போயி 3 பாட்டில் பீர் வாங்கிவா". அவள் உடனே கிளம்பிவிடுவாள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடுவாள். தூக்கத்தை கலைக்க அவள் கண்டுபிடித்த வழி.

அப்பாடா! வந்த விருந்தாளிகள் ஒருவழியாய் போயாயிற்று. விளக்கெல்லாம் அணைந்தாயிற்று முதலாளியும் முதலாளியம்மாவும் படுக்க சென்றாயிற்று.

"சரசு, குழந்தையை ஆட்டி விடு" இது தான் கடைசிக்கட்டளை.

கரப்பான்பூச்சி அடுப்படியை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. அறைமுகப்பின் பச்சைத்திட்டும் கால்சட்டையின் நிழலும், குழந்தையின் துணிமணிகளின் நிழலுமாகச் சேர்ந்து சரசுவின் பாதி திறந்த கண்ணை அழுத்த ஆரம்பிக்கின்றன. அவை அவளுடைய மூளையைச் சுற்றியும் கவிழ்கின்றன.

"ஆராரோ ஆரிராரோ என் கண்ணே கண்ணுறங்கு
என் பாட்டைக் கேட்டு கண்ணுறங்கு"


அவள் முணுமுணுக்கிறாள். ஆனால் குழந்தையோ அலறுகிறது. அழுதழுது கடைசியில் தானாகவே ஒய்ந்துவிட்டது. மறுபடியும் சரசு சகதி படிந்த சாலையை கண்முன் காண்கிறாள்.தூங்க வரும் தொழிலாளிகள்,அவள் அம்மா, அவள் அப்பா... ஆக எல்லாவற்றையும் பார்க்கிறாள். அவள் எல்லாவற்றையும் புரிந்துக்கொள்கிறாள். எல்லாரையும் அடையாளம் கண்டுக் கொள்கிறாள்.

ஆனால் ஆனால் எந்த சக்தி தன்னை கட்டுப்படுத்துகிறது. எந்த சக்தி தன் காலையும் கையையும் கட்டுப்போட்டிருக்கிறது. எந்த சக்தி தன்னை அழுத்துகிறது. எந்த சக்தி பிரக்ஞையில் இருப்பதினின்றி தடுக்கிறது என்பதையெல்லாம் பாதித் தூக்கத்திலிருந்த அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அந்த சக்தியினின்று தன்னை விடுவித்து தப்பித்துக் கொள்ள சுற்றும் முற்றும் பார்த்து எதையோ தேடுகிறாள். ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. செத்த சவத்துக்கு நிகராக களைத்துப் போன அவள் முடிந்த அளவுக்கு கண்ணை திறக்க முயல்கிறாள்.அண்ணாந்து பார்க்கும் போது பச்சைத்திட்டு தெரிகிறது. குழந்தை அலறல் சத்தம் இப்போது பெரிதாகக் கேட்டது. அலறல் சத்தத்தை கவனித்துக் கேட்டபோது அவளுக்கு புரிந்தது விட்டது... தன்னை தூங்கவிடாமல் தடுக்கும் எதிரி யாரென்று இப்போது அவளுக்கு புரிந்து விட்டது.

அந்த எதிரி, அந்தக் குழந்தை தான்.

அவள் சிரிக்கிறாள். இந்த சின்ன விசயத்தை கிரகிக்க இவ்வளவு நாள் தவறிவிட்டோமே என்று அவளுக்கு விநோதமாக இருந்தது. பச்சைதிட்டு, நிழல்கள்,கரப்பான்பூச்சி எல்லாமே அவளைப் பார்த்து சிரிப்பதைப் போலிருந்தது. ஆச்சரியப்படுவது போலவும் இருந்தது.

மதிமயக்கம் சரசுவை ஆட்கொண்டது. அவள் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தாள். சிமிட்டாத அகலமான கண்கள். தன்னுடைய நினைப்பு குறித்து அவள் மகிழ்ந்தாள். சிலிர்த்தாள். தன் காலையும் கையையும் கட்டிப்போடும் அந்தக் குழந்தையிடமிருந்து நேரடியாகவே விடுவித்துக் கொள்ளலாம். அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டால்..... விடுதலை..... விடுதலை..... அதன்பிறகு தூக்கம் தூக்கம்.... தூக்கம்... நிம்மதியான தூக்கம்.....

பச்சைத்திட்டை பார்த்து சிரித்துக் கொண்டும், கண் சிமிட்டிக் கொண்டும், கைவிரல்களால் நெட்டி முறித்துக் கொண்டும் சரசு மெதுவாகத் தொட்டில் பக்கம் போனாள். குழந்தையிடம் போனாள். குழந்தையின் கழுத்தை நெறித்தாள். மறுகணமே தரையில் படுத்தாள். இனி நான் தூங்கலாம் என்ற எக்களிப்பில் சிரித்தாள். அடுத்த நிமிடமே செத்த சவமாகத் தூங்கத் தொடங்கினாள்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
திருட்டு ராஸ்கல்!!! என்று இந்த கதையை படித்தவர்கள் திட்டுவதற்கு முன் இந்த தொடர்பை க்ளிக்கவும்.
 
அட பாவி, கொஞ்ச நேரத்தில் ஆடிப் போய்டேன்.. விஜிக்கு இவ்வளவு ஞானமுனு.. லே, ஒழுங்கா மரியாதையா தொடக்கத்திலில் காபினு போட்டுரு.. ஒரு வேளை நம்ம இராமதாசு ஐயாக்கு பயந்து அவ்வளவு ரஷ்ய பெயரையும் தமிழுக்கு மாத்திடியா ?
 
சங்கர், பதிவை படிச்சி ஓடிப் போகாம ஆடி போயிருக்கிறது சந்தோசம் தான். தமிழ் நாட்டு அரசியல் போக்கத்த பயலுவ எவனுக்கு பயந்து பெயரை மாத்தல. இலக்கிய எப்படியெல்லாம் திருடப்படலாமுன்னு பாக்குறதுக்கு ஒரு சின்ன பரிசோதனை முயற்சி. அவ்வளவு தான்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->