<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தமிழ் சினிமாவின் திருப்புமுனை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை நிறைய பேர் நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குநராக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும், மற்ற சினிமா தொழில் சார்ந்த துறைகளாகட்டும்.ஓவ்வொரு காலகட்டத்திலும் 'இப்படி தான் சினிமா'என்பதை திருப்பி திருத்தி அமைத்தவர்கள் எத்தனையோ பேர்.தமிழ் சினிமா என்ற நீரோட்டத்தை ஒரு காலக்கட்டத்தில் திசை திருப்பியவர்களில் ஒருவர் தான் இயக்குநர்களின் இயக்குநர் மகேந்திரன்.

போன வாரம் சிங்கை நூலகத்தில் புதுமைபித்தனை பற்றிய ஒரு அலசலை ரமேஷ் சுப்பிரமணியம் முன் வைத்தார். மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் புதுமைபித்தனின் நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்ததால் சில காட்சிகள் திரையின் முன் விரிந்தன. குண்டாங்கல்லாக ஜம்மென்று மனதில் போய் உட்காரும் காட்சி அமைப்புகள், கதாபாத்திரங்களுக்கு கொடுத்திருந்த அழுத்தம் என்னை மகேந்திரனின் படங்களை திரும்பி பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்தது. புரியாத வயசில் ரஜினிக்காக பார்த்தது. பிறகு டிவியில் பல சந்தர்பங்களில் அந்த படத்தை பார்த்தது என்றதும் மகேந்திரனின் முள்ளும் மலரும் தான் என் மனதில் முதலில் வந்து நின்றது. இன்னும் ஆழமாக மகேந்திரனை ஆராய்ச்சி செய்ய அவருடைய படங்களைத் தேடிய போது, கிடைத்தது "சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்" என்ற புத்தகம். நூல் விமர்சனமாக போடாமல் என்னை கவர்ந்த மகேந்திரனின் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

அடுத்தவர்களின் கதையை கேட்பது என்பது எப்பவுமே மிக சுவாரஸ்யமான விசயம். அதனால் தானே இத்தனை ப்ளாக்குகள் (Blog) கண் மண் தெரியாமல் படிக்கப்படுகிறது. அதுவும் ஒருவர் தமக்கு பிடித்த சினிமா படங்களை சிருஷ்டித்த விதத்தை தன் கதையுடன் சொல்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்?. நேரம்காலம் தெரியாமல் ஹாலில், டாய்லெட்டில், ரயிலில்,உணவகத்தில் என அந்த புத்தகம் எந்நேரமும் என் கையில் தவழ்ந்தது. சினிமாவை நேசிக்கும் எனக்கு அந்த புத்தகத்தில் மகேந்திரனின் எளிய உரைநடையும் ஆங்காங்கே சினிமாவை விரும்புபவர்களுக்கு அறிவுரையும், கதையையும், படத்தையும் பெற்றெடுத்த அனுபவத்தையும் கொடுத்திருந்தது அந்த புத்தகத்தை மிக மிக விறுவிறுப்பாக்கியது.

எம்.ஜி.ஆர் தான் என்னை சினிமாவுக்கும் இழுத்து வந்தார் - இயக்குநர் மகேந்திரன்

எம்.ஜி.ஆரையும், ரஜினியையும்,கமலையும் மிக நேசிக்கிறவர் மகேந்திரன். அதில் எம்.ஜி.ஆர் தான் தன்னை சினிமாவுக்கு இழுத்து வந்தவர் என்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் முடித்த கையோடு பி.ஏ பொருளாதாரம் படிக்க காரைக்குடி அழகப்பா கல்லூரியில் சேர்ந்தவர். கடைசியாண்டில் கல்லூரி விழாவிற்கு எம்.ஜி.ஆர் தலைமை தாங்க அவர் முன் பேசப் போகிறவர்களில் மகேந்திரனும் ஒருவர். கொடுக்கப்பட்ட தலைப்பு 'சினிமா'. யதார்த்ததை மீறி கதாபுருஷர்கள் டூயட் பாடுவதையும்,வசனம் பேசும் தமிழ் சினிமா போக்கையும் சினிமா விமர்ச்சனமாக எம்.ஜி.ஆர் முன்னிலையில் மேடையில் நார் நாராக கிழித்திருக்கிறார். அவரை பாராட்டிய "எம்.ஜி.ஆர் நல்ல விமர்சனாக வருவாய்" என்ற கையெழுத்து இட்டதோடு அவர்கள் தொடர்பு அறுந்தது.

பிறகு சட்டம் படிக்க சென்னை சென்ற மகேந்திரன் பணமின்மையால் படிப்பை நிறுத்திவிட்டு 'இனமுழக்கம்' என்ற தி.மு.க பத்திரிக்கையில் சினிமா விமர்ச்சனங்களை எழுதி புகழ் ஈட்டியிருக்கிறார். ஒரு பேட்டிக்காக எம்.ஜி.ஆரை பார்த்த போது பலவருடங்களாகியும் மறக்காமல் மகேந்திரனை அடையாளம் கண்டு அவர் நாடகங்களுக்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பு தந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் தொடர்பு மூலம் சினிமா உலகம் இவரை வாரி அனைத்துக்கொள்ள பல வெற்றி படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமா எப்படியிருக்கக் கூடாது என்று இருந்தேனோ அந்த மாதிரி படங்களுக்கு வசனம் எழுத வேண்டியதாகி விட்டதே என தொழிலை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பும் வேளையில் திரும்ப பத்திரிக்கை வாய்ப்பு.

இந்த முறை வாய்ப்பு தந்தவர் 'துக்ளக்' சோ, வாய்ப்பு வந்தது துக்ளக் பத்திரிக்கை சினிமா பகுதிக்காக. அப்போது துக்ளக் விகடனுடன் இருந்ததாம். அவருடைய வாழ்வின் வசந்தகாலம் என்று சொல்வது துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றியது தான். பல வருடங்கள் செல்ல நடிகர் செந்தாமரைக்காக 'இரண்டில் ஒன்று' என்ற நாடகத்தை எழுத வேண்டிய கட்டாயம். பிறகு அதுவே சிவாஜியின் நாடக கம்பெனியால் தத்து எடுக்கப்பட்டு சிவாஜியால் தங்கப்பதக்கம் நாடகம் உருவாகி, சினிமாவாகி சக்கைப் போடு போட்டது. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சின்ன வயதில் தங்கபதக்கம் கதை வசனம் கேசட்டை எங்கள் வீட்டில் எத்தனை முறை கேட்டிருப்பார்கள் என்று தெரியாது, அப்படியே நானும்.

தங்கப்பதக்கத்திற்கு பிறகு வாய்ப்பே இல்லாமல் முடக்கம், திரும்ப துக்ளக்கில் போய் வேலை கேட்க முடியாத தன்மான உணர்ச்சி, குடும்பம் பட்டினியால் தவித்தல். திடீரென அவருடைய பழைய 'இனமுழக்கம்' பத்திரிக்கை ஆசிரியர் மூலமாக மகேந்திரனின் வாழ்க்கை புதிய பாதையில் பயணித்தது. வெறியுடன் கதை வசனம் எழுதிய 'வாழ்ந்து காட்டுகிறேன்' படம் சூப்பர் டூப்பர் ஹிட். வரிசையாக பல வெற்றிப்படங்களுக்கு கதை, வசனமென்று எழுதியவர் ஒரு சந்தர்ப்பத்தில் இயக்குநராக முள்ளும் மலரும் வழியாக மலர்ந்தார். மகேந்திரன் மேல் சொன்ன ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் மிக மிகச் சுவையாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

முள்ளும் மலரும் - ரஜினிகாந்த் ரொம்ப கறுப்பு

அதுவரை கதாசிரியராக வலம் வந்துக் கொண்டிருந்த மகேந்திரனுக்கு ஆனந்திபிலிம்ஸ் வேணு செட்டியார் மூலமாக இயக்குநராகும் வாய்ப்பு கிட்டியது. எத்தனையோ வெற்றி படங்களுக்கு வெற்றிகரமாக கதை எழுதிக் கொண்டிருந்தாலும் வேண்டாத வெறுப்பாக தான் செய்து வந்தார். கதை தீர்ந்தது நாவலை கொண்டு வாருங்கள் கதை எழுதி தாருகிறேன் என்று மகேந்திரன் கேட்ட போது குவிந்த நாவல்களில் ஒன்று தான் உமாசந்திரனின் நாவலான 'முள்ளும் மலரும்'. மகேந்திரன் எப்போதுமே ஒரு நாவலை முழுவதுமாக தழுவி படத்தை எடுக்க மாட்டார். கதையை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு தன் இஷ்டத்துக்கு கதையில் கத்திரி வைத்து ஆங்காங்கே பெரும் மாற்றங்களை செய்து திரைக்கதைக்கு ஏற்றவாறு மாற்றுவது தான் அவர் பாணி. நாவலில் சொல்லப்பட்டிருக்கும் உணர்ச்சியை அப்படியே திரைப்படத்தில் கொண்டு வருவதென்பது முடியாத காரியம் என்று தெளிவாக தெரிந்து வைத்து, திரைக்கதைக்கு ஏற்ப பெரும் மாற்றங்கள் வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தவர்.

முள்ளும் மலரும் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் என்று மகேந்திரன் சொன்னதை வெகு கமர்ஷியல் தனமாக இருக்கும் என்று நினைத்து மிக ஆதரவு தந்த செட்டியார், ரஜினி இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிப்பதை முற்றிலுமாக மறுத்தார். காரணம் அவர் கறுப்பாம்(???). மகேந்திரன் ரஜினி தான் நடிக்க வேண்டுமென பிடிவாதமாக நின்று போராடி தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய தரத்தை தரும் முள்ளும் மலரும் படத்தைக் கொண்டு வந்தவர்.

முதல் காட்சிக்காக கமர்ஷியலை எதிர்பார்த்து வந்த செட்டியாருக்கு பெருத்த ஏமாற்றம். தலையில் கைவைத்து வெளியேறியவர் மகேந்திரனை திட்டி தீர்த்திருக்கிறார். படம் முதல் இரண்டு வாரத்துக்கு படு அமைதியாக தியேட்டரை விட்டு ஓடும் நிலைமையில் மகேந்திரன் செட்டியாரை படத்தின் விளம்பரத்தை கூட்ட சொல்லியிருக்கிறார். ஒடாதா படத்துக்கு எதுக்கு விளம்பரம் என்று மறுத்து விட்டார் செட்டியார். மகேந்திரனும், ரஜினியும் கவலையுடன் கேள்விக் குறியாக எதிர்காலத்தை நோக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் ரஜினி அதுவரை நெகடிவ் கேரக்டரில் நடித்து வந்தவர், முதன் முறையாக குணச்சித்திர வேடத்தில் முள்ளும் மலரில் நடத்திருக்கிறார். அப்போது நிகழ்ந்தது ஒரு மிராக்கிள். மூன்றாவது வாரத்திலிருந்து விசில் சத்தத்துடன் திரையரங்கங்கள் கூட்டத்தில் எகிறியது. முள்ளும் மலரும் சூப்பர் ஹிட். செட்டியார் மகேந்திரனிடம் மன்னிப்பு கேட்டது வேறு விசயம்.

சுவையான தகவல்: முள்ளும் மலரும் படத்திற்கு மகேந்திரன் கேமிராமேனை தேடிக்கொண்டிருந்த போது கமலின் பரிந்துரையில் கிடைத்தார் அருமையான ஒருவர். அந்த ஒருவர் தான் பாலுமகேந்திரா. தமிழ்சினிமாவில் அவர்ஏற்படுத்திய பாதிப்பு தனிக்கதை.

புதுமைபித்தனின் 'சிற்றன்னை' குறுநாவல் 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் ஆனது எப்படி?

சிறுவயதில் புதுமைபித்தனின் 'சிற்றன்னை' நாவலை படித்து தூக்கி போட்டு விட்டார். அவர் அனுபவித்த சில கஷ்டங்களும் சிற்றன்னையை நினைவுப்படுத்தியதால் அந்த கதை அவருள் ஊறிக் கொண்டிருந்தது. முள்ளும் மலரும் படத்துக்கு பிறகு அந்த கதையை திரைப்படமாக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. கதையை மூலத்திலிருந்து இஷ்டம் போல் மாற்றினார். படத்தில் அனைவரும் புதிய முகங்கள். ஆனால் மகேந்திரனை இந்த படம் எங்கேயோ கொண்டு போய் விட்டது. திரும்பவும் ஒரு சூப்பர் ஹிட்.

எங்கிருந்தோ கதையை சுட்டு மூச்சு விடாமல் படம் எடுத்து பெயர் வாங்குபவர்களுக்கு மத்தியில் மகேந்திரன் வித்தியாசமானவரே. இதோ அவரது எழுத்தின் வழியே அவரே உங்களிடம் பேசுகிறார்...

"மற்றவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்னாடி முதலில் சிற்றன்னை எழுதிய புதுமைபித்தன் அவர்களின் குடும்பத்திற்கு மூலக்கதைக்கான ஒரு தொகையை கொடுங்கள்" என்றேன். அவரோ ஒரு மாதிரி தயங்கினார்.

"என்ன தயங்குறீங்க?"

"அது ஒண்ணும் இல்லே... நீங்க தந்த சிற்றன்னை புத்தகத்தை வாசிச்சேன்... ஆனா இப்ப நீங்க எழுதியிருக்கிற 'உதிரிப்பூக்கள்' கதைக்கும் சிற்றன்னைக்கும் எந்த சம்பந்தமில்லையே. அப்புறம் எதுக்கு அவுங்களுக்கு பணம் கொடுக்கனும்?"

பார்த்தீர்களா... ஒரு நாவல் சினிமாவுக்கான திரைக்கதையாக உருமாறும்போது, பாலகிருஷ்ணன் போன்ற தயாரிப்பாளர் மட்டும் அல்ல, சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கூட அடிப்படை உண்மை அறியாது எப்படித் தடுமாறுகிறார்கள்?

நான் சொன்னேன், "சிற்றன்னை கதையை நான் படிக்காமல் விட்டிருந்தால் இன்று இந்த 'உதிரிப்பூக்கள்' கதை உருவாகியிருக்காது. நானும் வருகிறேன், முதலில் அவர்களின் குடும்பத்திற்கு உரிய மரியாதையை முறைப்படி செய்து விட்டு வரலாம்.

அதன்படியே நடந்தது. என் மனம் நிறைந்தது

ஆனால் "உதிரிப்பூக்கள் வெற்றி கண்டதும் ஒரு இலக்கிய வட்டம் என்னைப் பழித்துக் கடிதம் எழுதியது எப்படி? இப்படி:

படத்தின் தொடக்கத்தில் டைட்டிலில் மூலக்கதை அமரர் புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' என்று போட்டிருக்கிறாய். அவர் பெயரை வைத்து வியாபாரம் நடத்தி விட்டாய்..."

நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன் (மனத்திற்குள் சிரித்திருப்பேன்) என்பதை இப்போது உங்களால் உணர முடியும்.

ஒரு நாவலை திரைக்கதையாக்கி படம் எடுப்பதில்,வெற்றி காண்பதில்,வாழ்த்தும் வசவும் சேர்ந்து தான் வரும். நான் இரண்டையும் ஒன்றாக ஏற்கிறேன்......"

அது போக 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தை பற்றியும் சுவையான தகவல்களை அள்ளி விட்டிருக்கிறார்.அதுபோக சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், ரஜினி,கமல்,நல்ல தரமான சினிமா, சாசனம் படம் நின்று போன விசயம் பற்றியெல்லாம் அந்த புத்தகத்தில் விரிவாக பேசியிருக்கிறார். பதிவு கொஞ்சம் நீளமாக போய் விட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். சினிமாவை விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை படிக்காமல் விட்டு விடாதீர்கள். புத்தகம் தயாரிப்பு வெளியீடு : மித்ர ஆர்ட்ஸ் & க்ரியேஷன்ஸ். விலை Rs 125/-

இயக்குநர் மகேந்திரனின் திரைப்படைப்பை பார்க்க விரும்புபவர்களுக்காக.....

இயக்குநர் மகேந்திரன் எழுதி இயக்கிய படங்கள்

1.முள்ளும் மலரும்
2. உதிரிப்பூக்கள்
3. பூட்டாத பூட்டுக்கள்
4. ஜானி
5. நெஞ்சத்தைக் கிள்ளாதே
6. மெட்டி
7. நண்டு
8. கண்ணுக்கு மை எழுது
9. அழகிய கண்ணே
10. ஊர்ப் பஞ்சாயத்து
11. கை கொடுக்கும் கை
12. சாசனம் (இன்னும் வெளிவரவில்லை)
13. அர்த்தம் (டெலிப்ளே)
14. காட்டுப்பூக்கள் (டெலி ப்ளே)

இயக்குநர் மகேந்திரன் கதை வசனம் கதை திரைக்கதை வசனம் எழுதிய படங்கள்.

1. தங்கப்பதக்கம் (கதைவசனம்)
2. நாம் மூவர் - கதை
3. சபாஷ் தம்பி - கதை
4. பணக்காரப் பிள்ளை - கதை
5. நிறைகுடம் - கதை
6. திருடி - கதை
7. மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
8. ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
9. வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
10. வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
11. ரிஷிமூலம் - கதை வசனம்
12. தையல்காரன் - கதை வசனம்
13. காளி - கதை வசனம்
14. பருவமழை -வசனம்
15. பகலில் ஒரு இரவு -வசனம்
16. அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
17. கள்ளழகர் -வசனம்
18. சக்கரவர்த்தி - கதை வசனம்
19. கங்கா - கதை
20. ஹிட்லர் உமாநாத் - கதை
21. நாங்கள் - திரைக்கதை வசனம்
22. challenge ramudu (தெலுங்கு) - கதை
23. தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
24. சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
25. அழகிய பூவே - திரைக்கதை வசனம்
26. நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்

இயக்குநர் மகேந்திரன் பற்றி மேலும் சில விசயங்களும், எனக்கு முன்னே பதிவில் எழுதியவர்களும்....

http://rajinifans153.tripod.com/id12.html
http://www.teakada.com/archives/cinemaavum_naanum.html
http://poetraj.blogspot.com/2005/01/blog-post_19.html

சுவையான தகவல் : விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் 'சச்சின்' படத்தை இயக்கியிருப்பவர் யார் தெரியுமா? இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் தான்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
எங்கய்யா போயிருந்தே? எவ்வளவுநாள் ஆச்சு, இந்த மாதிரி ஒரு புத்தகப்பார்வையை படிச்சு. நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கிங்க. வாழ்த்துக்கள். சாசனம் பத்தி எதாவது எழுதியிருக்காரா. ம்ம்ம். அரவிந்த்சாமி கதாநாயகன், இன்னும் என்.எப்.டி.சிக்கு காசு வரலையாமா?
 
நிஜமாகவே போட்டுத் தாக்கி விட்டீர்கள். இன்றைக்கு ராத்திரி நான் தூங்கின மாதிரிதான்..
 
நல்லாருக்கு அல்வாசிட்டி!
நிறைவான சுருக்கம் ஒண்டத் தந்திருக்கிறியள்.
என்னத்தச் சொல்ல? 'முள்ளும் மலரும்' 'ஆறிலிருந்து அறுபது வரை' ரஜனியெல்லாம் தொலைந்து போய் 'படையப்பா', 'பாட்சா', 'பாபா' ரஜனிகள் தான் மிச்சம்.
 
நல்ல பதிவு. "ஜானி" படத்தை, வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பின் பார்த்தும்கூட அலுக்கவில்லை. வணிகத்தன்மையையும் தாண்டி, எஸ்.பி.முத்துராமனுக்கு எதிர்த்திசையில் உருப்படியாக ரஜினியை உபயோகித்த இயக்குனர் மகேந்திரன். உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, முள்ளும் மலரும் என்று எத்தனை நல்ல படங்கள்!! 25 படங்கள் ரஜினியை வைத்தும் கமலை வைத்தும் எடுத்து தமிழ் சினிமாவுக்கு ஒரேயடியாகச் சங்கு ஊதியதுதான் எஸ்.பி.முத்துராமன் போன்றவர்களின் மகத்தான பங்கு!!
 
Wow ! What an extensive analysis. Vijay how do you manage your time. I envy you ! You have like Kasi said one of the most active promising blog. great keep it up !, Best, J
 
விஜய், அருமையான அலசல்.
உதிரிப்பூக்கள் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. ஜானியையெல்லாம் ரொம்ப ரசித்ததில்லை (பாட்டும் ஸ்ரீதேவியும் விதிவிலக்கு). முள்ளும் மலரும் பிடித்திருந்தது, ஆனாலும் முழுதும் இப்போது நினைவில் இல்லை. மகேந்திரன் என்றும் தனியிடம் பெறும் படைப்பாளி.
 
நான் சொல்ல நினைத்ததை எல்லாம் மற்றவர்கள் ஏற்கனவே சொல்லி விட்டதால் - 'அற்புதம்' என்பதைத் தவிர அதிகம் சொல்ல இயலவில்லை விஜய்.... இருந்தாலும் ஜெயந்தி சங்கர் கேட்ட ஒன்றை மட்டும் திரும்பியும் கேட்கிறேன் - " எப்படிங்கோ..உங்களுக்கு இவ்வளவு நேரம் கிடைக்குதுங்கோங்கோ? "
 
பாதித்து, அனுபவிதது எழுதியிருக்கிறீர்கள் - அதனால் அருமையான பதிவாக அமைந்திருக்கிறது.பாராட்டுக்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம்:
வீட்டில துணையில்லாட்டி இப்படில்லாம் நிறைய உருப்படியான விஷயம் செய்யமுடியுமோ:)
 
மாண்டீ சொன்னது மிக சரி, எப்பயெல்லாம், தமிழ் சினிமா கொஞ்சம் தன் திசையை மாத்துதோ, அப்பெல்லாம் ஏ.வி.எம்.வந்து ஒரு மசாலா படத்தைக் கொடுத்து திருப்பியும் "பழைய குருடி, கதவை திறடி" கணக்காக தமிழ் சினிமா பாதையை திருப்பி விட்டுவாங்க. உதாரணம் சேது,தில்,காசி ன்னு போய்டிருந்த விக்ரமை, கூப்பிட்டு ஜெமினி -ங்ற "பட்டர் மசாலா" படத்தைக் கொடுத்து பாதை மாற வைச்சிடாங்க. கமல் உருப்படியா வணிக/கலை சினிமாக்கு இடைப்பட்ட ரீதியிலான படங்களை பரிசோதிக்க முயற்சிக்கும் போது தான் "சகலகலாவல்லவன்" வந்தது. இப்படி நல்ல தமிழ்சினிமாவுக்கு மங்களம் பாடின பெருமை ஏ.வி.ஏம்மை சாரும். ஜானி' ஒண்ணு போதுமய்யா ரஜினியும், மகேந்திரனும் யாருன்னு சொல்ல, தமிழ் சினிமாவுல உளவியல் ரீதியான காட்சி அமைப்புகளை முதலில் அரங்கேற்றின இயக்குநர் அவர். செனோரீட்டா -ன்னு ஒரு பாட்டு வரும், அந்த காட்சியமைப்பு, ரஜினியின் நடிப்பு இன்று வரை ஈடுசெய்யமுடியாத கற்பனை. இன்றைய அரசியல் நிலவரங்கள் தாண்டி, ரஜினி ஒரு சிறந்த நடிகன், அவரை ஒழுங்கா உபயோகித்தவர்களில் மகேந்திரனும் ஒருவர். இன்னொருவர் எனக்கு தெரிந்து கே.பாலச்சந்தர்.

யாராவது இளையராஜா பத்தி எழுதுங்கப்பு. ஒரு மேதையை பத்தின விரிவான வாசிப்பு கூட வலைப்பதிவுகளுல இல்ல - ரெடியா வசந்த், பிரகாஷ், மாண்டீ!
 
கலக்கல் பதிவு விஜய்! படித்ததும் மிக நிறைவாய் இருந்தது.
 
எழுதறது மட்டுமல்ல; படிக்கறபோதும் - இப்படி லேட்டா வந்தா பாக்கி எதுவும் இருக்காதுன்றதுக்கு இதுதான் சரியான உதாரணம். அதனால அல்வாசிட்டி அன்பரே! கலக்கிட்டீங்கன்னு சொல்லி இதோடு நிறுத்திக்கறேன். அப்புறம் நரேன்... உங்களுக்கு அடுத்த சனிக்கிழமை மீட்டின்போது லட்சுமி மணிவண்ணன் நாவலைக் கொடுக்கலாம்னு நெனைச்சேன். இப்ப சந்தேகம். உங்களையே கேட்டுடறேன். எது வேணும். அதுவா? இயக்குனர் மகேந்திரனா?

- சந்திரன்
 
கிடைத்த சைக்கிள் கேப்பில் இதுவரை பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு ஒரு சலாம் வைத்து நன்றி சொல்லிவிடுகிறேன். மகேந்திரன் பற்றி சொன்னது சில. சொல்லாதது பல. அவருடைய படங்கள் போலவே அவருடைய எழுத்தும்.அருமை.

ஹீரோ என்றிருந்தால் வில்லன் கட்டாயம் ஒருவர் இருப்பார் தமிழ் படத்தில். அது போல் நல்ல படைப்பாளிகள் ஹீரோ போல நல்லது செய்தாலும் ஏவி.எம் போல் வில்லன்களும் தமிழ் படத்தின் தரத்திற்கு ஊறு விழைவிக்கத் தான் செய்கிறார்கள்.அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. எல்லாரும் பிழைக்கவேண்டும்.அவ்வளவு தான்.

ஜெயந்தி அக்கா, பாலு மணிமாறன், நேர விசயத்தை அன்பு புட்டு புட்டு வைத்து விட்டார். துணைவியார் ஊருக்கு போய் விட்டதால் அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் தான் நானும்.

நரேன், சாசனம் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார் மகேந்திரன். நேரம் கிடைக்கும் போது பின்னூட்டத்தில் சுருக்கமாக அதைப் பற்றி இடுகிறேன்.
 
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.என்க்கு மிகவும் பிடித்த திரைப்படம் முள்ளும் மலரும், பாதித்த படம் உதிரிப் பூக்கள்.உங்களின் சில பதிவுகள் மனதை விட்டு நீங்குவதே இல்லை (குழந்தை பிறந்த அனுபவத்தை பற்றி எழுதினது)
 
சந்திரன், இரண்டும். அப்படி இல்லையென்றால், சாய்ஸ் ஒன்றுதானென்றால், லக்ஷ்மி மணிவண்ணன்.
 
நன்றி தேன்துளி அவர்களே. நானும் ரெகுலாரக படிக்கும் சில பதிவுகளில் உங்களுடைய பதிவும் ஒன்று. தொடர்ந்து சமூக நல்கருத்துக்களை கொடுங்கள். அப்படி எழுதுபவர்கள் தமிழ்மணத்தில் வெகுசிலரே.

இந்த ப்ளாக்கரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு கண்விழித்து பதிவு போட்டால் அப்படியே முழுங்கி விடுகிறது.
 
நல்ல பதிவு விஜய்! பட்டியலிலுள்ள படங்களில் ஒருசிலவற்றைப் பல வருடங்களுக்கு முன்பு பார்த்தது. 'முள்ளும் மலரும்' என்றும் நினைவில் நிற்பது; ரஜினி 'நடித்த' படம்.
//இந்த ப்ளாக்கரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.// அதை ஏன் கேட்கிறீர்கள், பின்னூட்டமிடுவதற்கே சமயங்களில் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
 
நல்ல பதிவு விஜய், இப்போதுதான் முழுவதும் படிக்க முடிந்தது.
 
நல்ல பதிவு விஜய், இப்போதுதான் முழுவதும் படிக்க முடிந்தது.
 
நன்றி இராதா கிருஷ்ணன், ரோசாவசந்த்
 
Thanks for the posting...
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->