<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

கட்டபொம்மு... கட்டபொம்மு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
திருநெல்வேலியிலேருந்து கொடைக்கானலுக்கு டைரக்ட்டு பஸ் இருந்திச்சி. அதுல ஏறின வத்தலக்குண்டுல இறங்கிக்கலாம்.இல்லேன்னா மதுரை போயி நின்னோன்னாக்க பஸ் ஸ்டாண்டுல மங்கம்மாள் போக்குவரத்துக் கழகம் பஸ்ஸு நிறைய நிக்கும். அதுல பெரியகுளம், கொடைக்கானல் போற பஸ்ஸா பார்த்து ஏறனும். திண்டுக்கல் பஸ்ஸுல ஏறின டி.கல்லுப்பட்டிலயிருந்து வேற ரூட்டில போயிருவான். வத்தலக்குண்டுக்கு போக முடியாது.

என்னோட ஸ்கூல் முழுப்பரீட்சை லீவுல நாங்கெல்லாம் ஒரு மாசம் எங்க வத்தலக்குண்டு அம்மாவழி தாத்தா வீட்டுல போய் கொண்டாடுவோம். திருநெல்வேலியில பஸ் ஏறின போற வழியில தாகம் எடுக்காம இருக்க எங்கப்பா 'பார்லே' பாப்பின்ஸ் மிட்டாய் நிறைய வாங்கி தருவாரு. கோவில்பட்டி,சாத்தூர், விருதுநகர்ல எல்லாம் பஸ்ஸூ பஸ் ஸ்டாண்டுல நின்னுச்சின்னு நிறைய வெள்ளரிப்பிஞ்சி வாங்கித் தருவாரு. ஆன.. ஆன.. தொட்டுக்க மிளகாத் தூளோட சேர்த்த உப்பு மட்டும் வேண்டான்னுருவாறு. கார உப்பை தொட்டு வெள்ரிக்கா சாப்பிட்டா தாகம் எடுக்குமாம். அப்புறம் நெறைய தண்ணி குடிக்கனுமாம். அப்புறம் ஒன்னுக்கு வந்த கவர்மெண்டு பஸ்ஸை நிப்பாட்ட முடியாதுன்னு சொல்லிருவாரு.

மதுரையில எறங்கி நாங்க பெரியகுளம் பஸ்ஸை பிடிப்போம். கொடைரோடு, அம்மையநாயக்கனூர், கல்லுப்பட்டி, வடுகப்பட்டி இப்படி நிறைய பட்டி போற வழியெல்லாம் வரும். வடுகப்பட்டில நிறைய பிச்சிப்பூ விப்பாங்க. எங்கம்மா தாத்தா வீட்டுல இருக்கிற அவங்க தங்கச்சிங்களுக்கெல்லாம் நெறைய பூ வாங்கிடுவாங்க. பஸ்ஸூ வத்தலக்குண்டுல நின்ன ஒடனே எங்க மாமா எங்களை வரவேற்கிறதுக்கு பஸ் ஸ்டாண்ட் வாசல்ல நிப்பாரு. ஆன எங்கப்பா மாமனார் வீட்டுல கெத்து காமிக்கனும்னு பையில இருந்து 15 ரூபாய் சின்ன செண்ட் பாட்டிலை திறப்பாரு. அவரு பூசிக்கிட்டு எங்க மேலயெல்லாம் பூசி விடுவாரு. ரொம்ப வாசமா இருக்கும்.

எங்க மூணாவது மாமா எங்க தலையை பார்த்தவுடனே என் தம்பிங்க கூட இருந்தாலும் ஓடி வந்து என்னை தான் தூக்கிக்கிடுவாரு. என்னை 'மரமண்டை', 'மரமண்டை'ன்னு செல்லம கிண்டல் பண்ணுவாரு. எனக்கு சின்ன வயசில மண்டை பெரிசா இருந்திச்சாம், அதுவுமில்லாம அப்பப்போ தெளிவில்லாம நடத்துகிடுவேனாம். அதுக்கு தான் எனக்கு மரமண்டைன்னு பேரு.

நான் எங்க தாத்தா வீட்டுக்கு போற வழியெல்லாம் எல்லா ஜனங்களும் எங்களை கூப்பிட்டு நிப்பாட்டி பேசித்தான் அனுப்புவாங்க. முடிவெட்டுற இசக்கி அண்ணன், ஜவுளிக்கடை ராஜன் பெரியப்பா, டெய்லர் மாமா வர்கீஸ்,முத்து, மிட்டாய்கடை ரவுத்தர் பாய், மளிகைக் கடை சுல்தான் மாமா எல்லாரும் எனக்கு ஒரு உம்மா(முத்தம்) கொடுத்து தான் தாத்தா வீட்டுக்கே அனுப்புவாங்க. எங்க தாத்தா காந்தி தாத்தா மாதிரி. சட்டையே போட மாட்டாரு. எங்கேயாச்சிம் வெளியே விசேஷத்துக்கு போனா தான் சட்டையே போடுவாரு. அவுங்க கருப்பட்டி கடையில உட்கார்ந்திருக்க எங்க தாத்தாவை வர்கீஸ் டெய்லர் தான் மாப்பிள்ளை வந்திருக்கிறத சொல்லுவாரு.

எங்கள் தாத்தா வீட்டு நண்டு சுண்டுக்களின் 25% இங்கே...

வலது பக்கம் பாண்ட்ஸ் பேபியை தூக்கிக்கிட்டு இருப்பவன் சத்தியமாக நானே

எங்க தாத்தா அவரோட சோடாப்புட்டி கண்ணாடியை ஒரு கையால தூக்கிக்கிட்டே எங்களை பார்ப்பாரு. உடனே கடைய அப்படியே போட்டுட்டு எங்களை வரவேற்பாரு.என்னோட சித்தி, மாமாக்களை சேர்த்து 8 புள்ளைங்க எங்க தாத்தா பாட்டிக்கு. சில பேருக்கு கல்யாணம் ஆகி அவங்களுக்கு குழந்தை குட்டி வேற இருந்தது. வீடே ஜே ஜேன்னு ஒரு குட்டி கிராமம் மாதிரி இருக்கும் எங்க தாத்தா வீடு. ஆளாளுக்கு என்னையும் என் தம்பிங்களையும் தூக்கி வச்சி முத்தமழை பொழிவாங்க.

ஆனா எனக்கு மட்டும் எங்க மாமா செவுத்து பீரோல் மேலியே கண்ணு இருக்கும். என்னோட இரண்டாவது மாமா கமலஹாசன் மாதிரி இருக்கிறாருன்னு நெனப்பு. அப்படியே ரோமியோ மாதிரி வத்தலக்குண்டையே சுத்தி சுத்தி வருவாரு. முழங்கால் வரைக்கும் கவர் பண்ணியிருக்கிற மாதிரி பெரிய பெரிய ஷூ வச்சிருப்பாரு. அந்த பிரோல்ல பெரிய புரூஸ்லீ படம் ஒட்டியிருப்பாரு. ஆனா எப்பவுமே அந்த பீரோலை பூட்டி சாவி அவரே வச்சிருப்பாரு. ஒரு நாள் மறந்துப் போய் பீரோலை பூட்டாம போயிட்டாரு. முதல்ல எங்கம்மா அந்த பீரோல்ல ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் கூடப்போய் நின்னு என்ன இருக்குன்னு பார்த்தேன். கிரிக்கெட் பால் மாதிரியே பெரிசா சிவப்பு கலர்ல ஒன்னு இருந்திச்சி. அத திறந்து பார்த்த உள்ள பாட்டில் இருந்திச்சி. எங்கம்மா பாட்டிக்கிட்டே அது சாராயம்ன்னு சொல்லிகிட்டு இருந்திச்சி. அப்புறம் அவரோட பாரின் பிரெண்டு கொடுத்த சூப்பர் சேவிங் செட்டு வச்சிருந்தாரு. இப்படியே நிறைய மேட்டர் இருந்திச்சி உள்ளே.

எங்களோட பெரிய்ய்ய மாமா இளம்பிள்ளை வாதம் மூளையில அட்டாக்காகி மூளை வளர்ச்சியில்லாம போயிட்டுது.அதுனால சின்ன வயசுல என்ன என்ன ஆக்டிவிட்டு பண்ணாறோ அதே மாதிரி செயல்களை தான் செய்வார். எங்க அப்பாவை விட வயது மூத்தவராயினும் டவுசரும் சட்டையும் மட்டுமே அணிவார்.எவ்வளவோ வற்புறுத்தியும் வேட்டி கட்டமாட்டேன் என்று சொல்லி விட்டார். காலையில் பூஜையை எல்லாம் சரியாக முடித்து விட்டு காக்காவுக்கு பிரேக் பாஸ்ட் படைத்து விட்டு கடையில் போய் வேலை செய்வார். அவரென்றால் என் தாத்தாவுக்கும் பாட்டிக்கு கொள்ளை பிரியம். என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார் தாத்தா. சில நேரங்களில் சிறு பிள்ளை போல கோலா வாங்கிக் கொடுக்கும் படி கால்களை உதைத்து உதைத்து அழுவார். அதைத் தவிர அவரிடம் ஒரு பிரச்சனையும் இல்லை.

நாளும் போய்க்கிட்டே இருந்திச்சி. தாத்தா எப்ப கக்கூஸ் போனாலும் வாயில சுருட்டு வச்சிக்கிட்டு இழு இழுன்னு இழுத்துக்கிட்டே கக்கூஸ் போவாரு. நானும் அது என்னன்னு ஆர்வக் கோளாறுல தேடினேன். அந்த மரப்பொடி டப்பா பக்கத்துல இருந்த செவுத்து குழியில மான் மார்க் சுருட்டு வச்சிருந்தாரு. நானும் ஒரு நாள் யாருக்கும் தெரியாம ஒரு மான் மார்க் சுருட்டை எடுத்துக்கிட்டு மாடிக்கு போனேன்.

பக்கத்து வீடு ஒரு ரெட்டியார் வீடு. பெரிய்ய்ய வீடு, மாடியில எங்க வீட்டுக்கு அவர் வீட்டுக்கு இடையில ஒரு குட்டிச்சுவர் இருக்கும். தாத்தா வீட்டு அடுப்பாங்கரை சிம்னியும் பக்கத்துலேயே இருக்கும். சிம்னிக்கு கீழே உட்கார்ந்து சுருட்டை பத்த வச்சேன். சனியன் பத்தவே மாட்டேங்குது. நாலஞ்சி தீக்குச்சி பத்த வச்சி எப்படியோ சுருட்டு பத்திக்கிச்சி. சுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு இழு இழுத்தேன். வயித்துக்குள்ளே சுருட்டுப் புகை விழுந்த விழுல தொப்புன்னு கீழே உட்கார்ந்துட்டேன். உஸ்ஸூன்னு ஸ்டைலா புகைய ஊதினேன். அப்புறம் திரும்ப ஒரு இழு இழுத்தேன். மனசுல ரஜினிகாந்த் வந்து நின்னாரு. அப்படியே தம் பிடிச்சி புகையை முழுங்கி மூக்காலே விட்டேன். ங்ங்... லொக் லொக்... இருமல் வந்திச்சி. இருந்தாலும் ரஜினி ஸ்டைல் தான் ஞாபகம் வந்திச்சி. திரும்ப ஒரு இழு இழுத்தேன். இப்போ ரவுண்டு ரவுண்டா புகைய விடுறது எப்படின்னு முயற்சி பண்ணினேன். சுருட்டு காரத்துல நாக்கு வேற மறத்துப் போச்சி.சுருட்டி என் வாய் ஓட்டைய விட தடிமனா இருந்ததால சுருட்டை வாயில வச்சி இழுக்கும் போதெல்லாம் எச்சில் ஒரு பக்கம் ஒழுகும். துடைச்சிக்கிட்டு திரும்ப திரும்ப இழுத்தேன். திரும்ப திரும்ப வட்டம் விட முயற்சிப் பண்ணேன். கடைசி வர வட்டம் வரலே. வாந்தி தான் வந்திச்சி. அப்படியே ரெட்டியார் வீட்டுப்பக்கம் வாந்தி எடுத்துட்டு, கீழே போய் யாருக்கும் தெரியாம வாயை கொப்பளிச்சேன். வாயெல்லாம் வாந்தியும் சுருட்டுமா ஒரே நாத்தம்.அப்புறம் சூடம் மிட்டாய் வாங்கி வாயில போட்டுக்கிட்டேன். வ்வ்வ்வ்வ்வே... அப்பயிருந்து இந்த சுருட்டு கருமாந்திரத்தை தொடுறதில்ல.

அப்பா ஊருக்கு கிளம்ப பறப்பாரு. எங்களுக்கு லீவு இன்னமும் இருக்கும் ஆனாலும் அப்பா சீக்கிரம் பாளையங்கோட்டைக்கு போகலாம்ன்னு சொல்லுவாரு. அந்த சமயம் பார்த்து மாரியம்மன் கோவில்ல காப்புக் கட்டிருவாங்க. காப்பு கட்டுன திருவிழா முடியிற வரைக்கும் யாரும் ஊரை விட்டு வெளியே போக முடியாது. எங்களுக்கெல்லாம் ஒரே ஜாலியா இருக்கும். திருவிழாவிலே கலர் கலரா பலூன், பீப்பி எல்லாம் விப்பாங்க. நானும் காலையில எழுந்திருச்சி செம்புல மஞ்சத்தண்ணி எடுத்துக்கிட்டு வேப்பிலையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க சித்தியோட மாரியம்மன் கோவிலுக்கு கெளம்பிருவேன். அங்கே போய் காப்புல மஞ்சள் தண்ணி ஊத்துறதே ஜாலியா இருக்கும். கொட்டு அடிச்சிக்கிட்டு புலிவேஷம் கட்டுக்கிட்டு தெரு தெருவா சாமிங்க ஆடிக்கிட்டே வருவாங்க. எங்க தாத்தா வீட்டுலேயும் ஒரு அண்டா நிறைய மஞ்ச தண்ணி கலக்கி வச்சிருப்போம். சாமி மேலேயெல்லாம் மஞ்ச தண்ணிய கோரி கோரி ஊத்துவோம். ரொம்ப ஜாலியா இருக்கும்.நானும் ஊடைல ஊடைல போய் மஞ்ச தண்ணி குளியல் வாங்கிக்கிடுவேன்.

அப்புறம் சாயங்காலம மாட்டுவண்டி கட்டிக்கிட்டு குன்று மேலயிருக்கிற கோட்டைப்பட்டி சாமியை கும்பிட்டு, அப்படியே பழைய வத்தலக்குண்டு அய்யனார் கோவிலுக்கு போவோம். அய்யனார் சிலையே பார்க்க பயமா இருக்கும். எங்க தாத்தா வயலும் பக்கத்தில இருந்ததுனால அங்கே போய் ஜாலியா பம்புசெட்டுல தண்ணி போட்டு விட்டு திரும்ப திரும்ப குளிப்போம்.

நைட்டு மொட்டை மாடியில எல்லாரும் கூடி நிலாச்சோறு சாப்பிடுவோம்.எங்க தாத்தா வீட்டு மாடியிலேயிருந்து பார்த்த கொடைக்கானல் மலை தெரியும். அங்கேங்கே மினுக் மினுக்குன்னு லைட்டு எரியும். கொடைக்கானல் டிவி ஸ்டேஷன் தெரியும். ங்ஈஈஈஈன்னு இருக்கிற அந்த நடுராத்திரியிலே எங்க சித்திங்க,மாமா,பாட்டி எல்லாரும் உட்கார்ந்து சொந்தக்காரங்களைப் பத்தி புரணி பேசுவார்கள். கேட்க கேட்க ரொம்ப ஜாலியா இருக்கும்.வாய்க்கும் சோறு காதுக்கும் சோறு செம சூப்பரா இருக்கும். புரணி பேசுறது முடிஞ்சிறக்கூடாதுன்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டே இருப்பேன். ரொம்ப லேட்டாச்சுன்னு பெண்கள் எல்லாம் கீழே போய் படுக்க போயிருவாங்க. நாங்க நண்டு சுண்டுங்க எங்க மாமாவோட மேலே தான் படுப்போம். மாமா வேணுக்குன்னே பேய் கதையா சொல்லுவாரு. எல்லாரும் பயத்துல மாமாவை கட்டி பிடிச்சி தூங்கிருவாங்க. நான் மட்டும் அம்மன் நடமாடும் அந்த சலங்கை ஒலியை திகிலோடு கேட்டுக் கொண்டிருப்பேன்.அப்புறம் தான் தெரிஞ்சது அது சலங்கை ஒலியில்ல சுவர் கோழி கத்துகிறது என்று.

இப்படியே ஒவ்வொரு வருசமும் போச்சி. நான் ஒன்பதாவது படிக்கும் போது தாத்தாக்கு நெஞ்சு வலின்னு தந்தி வந்ததும், அடிச்சி பெரண்டு ஓடினோம்.தாத்தா மற்ற இரண்டு மாமாக்களிடம் பாட்டியையும் புத்தி சுவாதீனமில்லாமல் இருக்கும் பெரிய்ய மாமாவையும் கைவிட்டு விடாதீர்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்தவர் தான். அடுத்த நாளே போய் விட்டார்.

தாத்தாவை பிணமாக வீட்டுக்கு கொண்டு வந்தார்கள். தன் தங்கை முதல் தம்பி வரை தானே முன்னின்று சம்பாதித்து தோட்டம் துறவு என்று வாங்கிப்போட்டு தன் 5 மகளுக்கும் திருமணமும் முடித்து வைத்த ஆலமரம் சாய்ந்தது. தாத்தாவை அலங்காரம் பண்ணுவதற்கு முன் வாயில் ஒரு பாட்டில் கெரசினை ஊற்றினார்கள். ஏன் கெரசின் ஊற்றுகிறார்கள் என்று கேட்டேன். அப்போது தான் தாத்தாவை எரிக்கும் போது நன்றாக எரிவார் என்றார்கள். அதை நினைத்துப் பார்க்கையில் என் கண்ணில் குடம் குடமாக தண்ணீர் கொட்ட தேம்பி தேம்பி அழுதேன். என் தாத்தா என்னை கட்டபொம்மன் மண்ணிலிருந்து வந்ததால் 'கட்டபொம்மு கட்டபொம்மு' என்று செல்லமாக அழைப்பார். 'கட்டபொம்மு கட்டபொம்மு' என்று அழைப்பது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தாத்தா எரிந்த கையோடு வீட்டில் உள்நாட்டு கலவரம் ஏற்ப்பட்டு எல்லோர் வயிறும் எரிய துள்ளித் திரிந்த என் வத்தலக்குண்டு தாத்தாவீடு சர்ச்சையில் வெறிச்சோடி பூட்டாப்பட்டு கிடக்கிறது.

பின் குறிப்பு: லோல் பட்டுக்கொண்டிருந்த என் பாட்டியும் புத்தி சுவாதீனமில்லாத மாமாவை விட்டு பிரிந்து பரலோகம் போய் விட்டார்.ஆனால் மாமா இப்போது தள்ளாத வயதிலும் அங்குமிங்குமென நகர வாழ்க்கையில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார். என்னுள் விரிந்த ஆச்சரியம் தாத்தா இறந்தவுடன் சில நாட்களில் அவர் வேட்டிக்கட்ட ஆரம்பித்து விட்டார்.நான் போனில் எப்போதாவது பேசும் போது என்னிடம் அடிக்கடி கேட்பது "எனக்கு ஒரு சட்டையும்,ஒரு டவுசரும், ஒரு வேட்டியும் வாங்கிக் கொடு".

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//தாத்தா எரிந்த கையோடு வீட்டில் உள்நாட்டு கலவரம் ஏற்ப்பட்டு எல்லோர் வயிறும் எரிய துள்ளித் திரிந்த என் வத்தலக்குண்டு தாத்தாவீடு சர்ச்சையில் வெறிச்சோடி பூட்டாப்பட்டு கிடக்கிறது.//
எல்லார் வீட்டிலும் இதே கதைதான். என்ன செய்வது!! பழைய நினைவுகளுக்குள் இழுத்துக்கொண்டு போய்விட்டீர்கள்...
 
சந்தோஷமாகப் படிக்க ஆரம்பித்து,

படிச்சு முடிச்சதும் கஷ்டமாகப் போய்விட்டது. :(
 
விஜய்,

எனக்கு mathygrps at yahoo dot com விலாசத்துக்கு ஒரு கடிதம் போடுறீங்களா?

நன்றி விஜய்.
 
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...

எல்லோரும் சுற்றி உட்கார்ந்து அம்மா சாத உருண்டையை உருட்டி உருட்டி தரும்பொழுது 'அடிக்குழம்பு, ஆ(யா)னக்குழம்பு' யாருக்கு அதிகம் கிடைக்கும் உங்க வீட்ல?

- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
வாழ்க்கையில் அப்பிடி இப்படின்னு பேசுவாங்கல்ல. ஆனா அது எவ்வளவு விசயத்தை அடக்கி வைச்சிருக்கிதென்னு நினைக்கறப்ப
ஏதோ பாரமா! (அல்லது வருசம் பதினாறு படம் பாத்திட்டு வந்தமாதிரி) இருக்கு
 
விஜய், நீங்கள் கூறிய பலவிடயங்கள் எனக்குத் தெரிந்த ஊர் நினைவுகளையும் ஞாகப்படுத்தியது. அந்த 'மரமண்டை' கூட நாங்களும் இயல்பாய் பயன்படுத்திய/பயன்படுத்தும் ஒரு சொல்.
//தாத்தா எரிந்த கையோடு வீட்டில் உள்நாட்டு கலவரம் ஏற்ப்பட்டு எல்லோர் வயிறும் எரிய துள்ளித் திரிந்த என் வத்தலக்குண்டு தாத்தாவீடு சர்ச்சையில் வெறிச்சோடி பூட்டாப்பட்டு கிடக்கிறது.//
இந்தத் துயரை நேரில் அனுபவிக்காதபோதும், பலருடைய எழுத்துக்களில் வாசித்து நெகிழ்ந்திருக்கின்றேன். அதுவும் இப்படி களியாட்டமாய் பூர்வீகமாய் வாழ்ந்த வீடுகளை, அதன் பின்னணியறியாத அந்நியருக்கு எல்லாம் விற்கும் விலை நிலைவருவது, இன்னும் எவ்வளவு துயரமானது.
 
பூட்டிக் கிடக்கும் தாத்தா வீட்டை விட வேட்டியும் சட்டையும் கேட்ட மாமாவை பற்றி படித்ததும் மனம் உடைந்தது விட்டது.

நல்லவர்கள்... அதிலும் நமக்கு நெருங்கியவர்கள் கஷ்டப்படும் போது, அதிலும் சில நேரங்களில் நம்மால் பெரிதாக எதுவும் செய்ய முடியாமல் போகும் போது ஒரு குற்ற உணர்ச்சி மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

என்ன செய்வது material worldஇல் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நல்ல பதிவு விஜய்.

அன்புடன்
நவன் பகவதி
 
விஜய், ரொம்ப நல்லா ஒரு சிறுகதை போல் எழுதியிருக்கிறீர்கள். பல விவரணைகள் அருமை. கடைசி விவரணைகளும் நெஞ்சை தொடுவதாக இருந்தது. ஆனால் திருநெல்வேலி மொழி அங்கங்கே வருவது போல் வந்து கண்ணாமூச்சி காட்டுகிறதே, ஊரைவிட்டு வந்து ரொம்ப நாளாச்சோ?
 
மேலே பார்த்த அந்த பழைய புகைப்படத்தை நேற்று தற்செயலாக பார்க்க நேர்ந்த போது சுருள் சுருளாய் வட்டம் தோன்றி என்னை பின்னோக்கி அழைத்துச் சென்றது தான் இந்த பதிவுக்கு காரணம். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

ரோசா! ஊரை விட்டு வந்து வெகுகாலமாகி(பலவருடங்கள்) விட்டது. பள்ளி படிப்பை முடித்த கையோடு நெல்லையை விட்டு வெளியேறியது தான். அம்மா அப்பா அங்கிருக்கிறார்களே(தியாகராஜநகர்) தவிர, வருடம் ஒரு முறை சென்று பார்ப்பதே பெரிய விசயமாகி விட்டது.நானும் திருநெல்வேலி மொழியில் இந்த பதிவை எழுத முயலவில்லை . ஸ்கூல் பையன் பார்வையில் பழசை எழுத நினைத்து அது வேறு எங்கேயோ இழுத்துச் சென்று விட்டது :-)
 
ஏலேய்! என்னலேய்! ரொம்ப ஃபீலிங்க்ஸ்-ஆ இருக்கு. (சிவாஜி குரலில் படிக்கவும்). பின்னூட்டங்கள் வேறு இன்னும் நனைய வைக்குது கர்சீஃபை.

சீக்கிரமே ஒரு ஃப்லாஷ் போட்டு (அதில் "தெளிவில்லாம நடந்துகிடும்" இன்றைய விஜேயின் மரமண்டை தெரியணும்) கொஞ்சம் எல்லாத்தையும் சிரிக்க வைப்பா !

அழுகையும் சிரிப்பும் கலந்த 'விஷமுதம்'தானே வாழ்க்கை !

- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
//எனக்கு mathygrps at yahoo dot com விலாசத்துக்கு ஒரு கடிதம் போடுறீங்களா//

கூடிய விரைவில் நட்சத்திரமா? ஜமாயுங்க விஜய்.
 
நல்ல பதிவு விஜய். உங்க மாமா பத்திபடிச்சதும் தான் மனசு கொஞ்சம் பாரமாயிடுச்சு...
 
நண்பர்களே, என் மாமாவை நினைத்தால் சில சமயம் எனக்கும் இருப்பு கொள்ளாது.

சுரேஷ், இப்படி கரெக்டா பாயிண்ட் பிடிப்பிங்களா? :-) நான் மதிகிட்டே போன்ல $1000 கடன் கேட்டிருந்தேன். மெயில் வழியா தர்றேன்னு சொன்னாங்க. நம்பலையா??? :-) :-)
 
விஜய், இப்பதிவைப் படிக்கப் படிக்க பின்னூட்டத்தில் என்னன்னமோ எழுதலாமென்று நினைத்துக் கொண்டே வந்தேன், கடைசியில்
// சந்தோஷமாகப் படிக்க ஆரம்பித்து,
படிச்சு முடிச்சதும் கஷ்டமாகப் போய்விட்டது. :(//
 
அந்தப்போட்டாவில் நாணம் சொட்டச்சொட்ட உக்காந்திருக்கும் பையன் எதிர்காலத்தில் இணையம் வழி பதிவுகளைப் போட்டு தாக்கப் போறார்னு யாராவது ஜோசியமாச்சும் சொல்லியிருப்பாகளா?

அது எப்படிங்க விஜய், எளிய வார்த்தைகளில் - நெஞ்சில் வலியை வர வச்சிடுறீங்க?
 
விஜய், நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்த வயதில் இருக்கும், தமிழ் நாட்டின் நகரங்கள், கிராமங்களில் தன் குழந்தைப் பருவத்தை/பதின்மப் பருவத்தை அனுபவித்த எவரும் பெற்றிருக்கக்கூடிய அனுபவங்களே இவை. குடும்பம், உறவுகள், ஊர் என்ற அமைப்பு, சமூக- சமய கட்டமைப்பு இவை அனைத்தும் ஒரு பெரும் திரும்ப முடியாத மாற்றத்தைச் சந்தித்த காலகட்டம் அது. அறிவு அதை விமர்சனம் செய்யலாம், புரிந்துகொள்ளலாம். ஆனால் அவை நிரப்பிய அனுபவங்கள் நெகிழ்சியையும் இன்னும் ஆழமான உணர்வுகளையும் கொண்டவை.

பதிவுக்கு நன்றி!
 
கலக்கிட்ட மக்கா!
 
அந்த ஃபோட்டோவில் இருக்கும் மற்ற வாண்டுகள் என்ன செய்றாங்க இப்பன்னு ஏதும் விவரம் தெரியுமா?

- ஆத்மன்
 
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

ஆத்மன், அந்த போட்டோவில் இருக்கும் அனைவரும் பெரிய புள்ளைகள் ஆகி அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->