<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

அற்ப உயிர்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சிறுகதை : விருமாண்டி படத்தை இரவுக் காட்சி பார்த்து விட்டு சுந்தரும் அவரது துணைவியார் லீலாவும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திரையரங்கிலிருந்து 20 நிமிட நடையில் மெயின் ரோடு வழியாக நடந்து வந்தால் வீட்டை அடைந்து விடலாம். மெயின் ரோட்டில் ஓரளவு மக்கள் நடமாட்டம் இருந்ததால் நடப்பது பயமில்லை. மறுநாள் சனிக்கிழமையாக இருந்ததால் சுந்தர் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் மெதுவாக மெயின் ரோட்டின் வழியாக நடக்க ஆரம்பித்தனர்.

வழக்கமாக ஏதாவது சினிமா பார்த்துவிட்டு திரும்பி வந்தால் அவர்களின் நினைவும் பேச்சும் அந்த சினிமாவை சுற்றியே இருக்கும். படத்தில் ரசித்த காட்சிகளையும், நகைச்சுவை காட்சிகளையும் ஒருவருக்கு ஒருவர் சொல்லி புழங்காகிதம் அடைவார்கள். முக்கியமாக படம் பார்ப்பதற்கு முன் பாடல்களை ரசித்ததை விட படம் பார்த்த பின் பாடல்களை அதிகம் ரசிக்க ஆரம்பிப்பார்கள். அன்று இரவும் அப்படிதான் விருமாண்டி படத்தின் பொதுவான விசயங்களை பேசிக் கொண்டு வந்தவர்களின் பேச்சு மரணதண்டனையைப் பற்றி திரும்பியது.

லீலா சொன்னாள் "உண்மையில் மரணத்தண்டனை இந்த உலகத்திலிருந்து நீக்கப்படவேண்டும். என்றுமே நமக்கு அடுத்தவர் உயிரை எடுக்கும் அதிகாரமில்லை"

சுந்தருக்கு மரணத்தண்டனை இருந்தாலும் நலம் இல்லாவிட்டாலும் நலமென்ற இரண்டுங்கெட்டான் மனநிலையில் பேச ஆரம்பித்தான் "லீலா! அப்படியில்லை மனிதனுக்கு தவறு செய்யும் மனிதனின் உயிரை எடுக்க அதிகாரமில்லை என்றாலும் சட்ட ஒழுங்கு என்பதை நிலை நாட்ட தூக்குதண்டனைக் கொடுப்பதில் தவறில்லை என்கிறார்கள் சில பேர். சில பேர் என்ன சொல்கிறார்கள் என்றால் குற்றவாளி செய்யும் அதே மாதிரி குற்றத்தை சட்டமும் செய்ய வேண்டுமா என்று கேட்கிறார்கள்"

"அப்படியில்லை சுந்தர், நான் குற்றவாளியை தண்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லவில்லை. மரணம் என்பதை தண்டனையாகக் கொடுப்பதை விட ஆயுள் முழுவதும் அவனை சிறையில் அடைத்திருக்கட்டுமே. அதுவும் கடுமையான தண்டனையாகத் தான் இருக்குமே"

"ம்ம்..எனக்கு என்னவோ மரண தண்டனையை விட ஆயுள் தண்டனையை தான் மிகக் கொடுமையானதாக தெரிகிறது. மரணம் சில நாள் அல்லது சில நிமிட வேதனை தான்.அவன் செய்த குற்றத்திற்காக அவனின் உயிரை சில நிமிடங்களில் எடுத்து விடுதலைக் கொடுத்து விடலாம். ஆனால் ஆயுள் தண்டனை என்பது அவன் ஆயுளுக்கும் அந்த குற்ற உணர்வுடன் செத்த பிணமாகத் தான் வாழவேண்டும் லீலா.அதற்கு பதில் அவனுக்கு மரணத்தண்டனையே மேல்"

"இருக்கலாங்க. நான் திரும்பவும் இந்த மரணத்தண்டனை என்பதை வரவேற்கமாட்டேன். பலநாடுகளும் மரணத்தண்டனை கொள்கையை விட்டு விட்ட பிறகும் இன்னும் சில நாடுகள் மரணத்தண்டனைக் கொடுமையை பிடித்துக் கொண்டுதான் தொங்குகின்றன என்று தெரியவில்லை. அதிகபட்சமாக சீனாவில் தான் அதிகமான மரணத்தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை எங்கோயோ படித்த ஞாபகம். நாம் இன்னும் கற்காலத்தில் இல்லை. மனித சமுதாயம் மேம்பட்டுக் கொண்டேதானிருக்கின்றன.குற்றம் செய்தவனை அந்த காலத்திலிருந்து சட்டதிட்டங்கள் மரணதண்டனை என்பது கொடுத்துக் கொண்டே தானிருக்கின்றன. இருந்தும் குற்றம் செய்வதென்பது தொடர்ந்துக் கொண்டுதானிருக்கின்றன.அப்படியிருக்க மரணத்தண்டனை தேவையா?"

"லீலா ஒன்ன நீ மறந்துட்டே. குற்றம் என்பதை அறவே ஒழிக்கமுடியாவிட்டாலும் குற்றக் குறைப்பு என்று ஒன்று இருக்கிறதல்லவா. மரணதண்டனை இருந்தாலாவது அந்த பயத்தில் குற்றங்கள் குறைக்கப்படலாம்"

"இதை என்னால் ஏற்க்க முடியாது. குற்றம் செய்யத் தூண்டும் பல சூழ்நிலைகள் இருக்கலாம். சூழ்நிலைகளும், அந்த கணத்தில் எடுக்கப்படும் ஒரு நொடி முடிவால் செய்யப்படும் குற்றமும் மரணதண்டனை என்பது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிகழ்ந்தே தீரும்"

ஹர்ர்ர்ர்ர்... என்ற ஹாரன் சத்தத்தில் இருவரின் பேச்சும் திடீரென தடைப்பட்டு பதறி ரோட்டின் ஓரத்தில் ஒடுங்கினர்.சிங்கத்தின் பிடறி மயிர் போல வைக்கோலை ஏற்றிக் கொண்டு வந்த அந்த லாரி ஒன்று அவர்களைக் கடந்து சென்றது.

சிறிது நேரம் அமைதியாக நடந்துக் கொண்டிருந்த இருவரின் பேச்சும் சிறிது திசைமாறியது. "லீலா! மரணத்தண்டனையின் கொடுமை என்னவென்றால் சில நேரங்களில் நிரபராதி தண்டிக்கப்படுவது"

"ஆமாங்க, செய்யாத குற்றத்துக்காக கொடுக்கும் மரணத்தண்டனை வெகு கொடுமையானது. எனக்கு எப்போதும் அசைவம் சாப்பிடுகிறவர்களை கண்டால் அதற்கு தான் வெறுப்பு வருகிறது. தேவையில்லாமல் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறது"

"மரணதண்டனை தேவையா? இல்லையா? என்பதை பலரும் பலகாலமாக விவாதித்துக் கொண்டுதானிருக்கின்றனர். அவரவர் பார்வையில் அவரவர்கள் நிலைநாட்டும் கருத்துக்களும் நியாயமாக தான் இருக்கும். இது சும்மா விவாதித்து ஒன்று ஆகப்போவதில்லை. நீ சொன்ன மாதிரி நிறைய நாடுகள் மரணத்தண்டனைகளை முற்றிலும் நிப்பாட்டப்பட்டு விட்டன. இந்தியாவில் கூட அதிபயங்கரமான குற்றத்துக்கு தான் மரணதண்டனை கொடுக்கப்படுகிறது. அதுவும் பல ஆண்டுகளுக்கு இடைவெளியில் தான் நடக்கிறது"

நடுநிசி ஆகிவிட்டதால் ரோட்டின் ஓரத்தில் போலீஸ் கும்பல் நின்றுக் கொண்டு வண்டியில் போகிற வருகிறவர்களை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்துக் கொண்டிருந்தது.

லீலாவையும் சுந்தரையும் நிறுத்தி விசாரித்தது "ராத்திரியிலே எங்கே போயிட்டு வாரீங்க"

சுந்தர் "சார் சினிமா பார்த்துட்டு வாரோம். வீடு இங்க பக்கத்திலேயே இருக்கிறதுனால. நடந்தே வர்றோம் சார்" என்றான்.

"சினிமா டிக்கெட் வச்சிருக்கீங்களா?" என்றான் ஒரு போலீஸ்காரர்.

பாக்கெட்டை தடவிப் பார்த்த சுந்தர் டிக்கெட் இல்லாததை உணர்ந்தான். "இல்ல சார் வர்ற வழியிலேயே எங்கேயோ கீழே போட்டுட்டேன்னு நினைக்கிறேன்"

"யோவ் நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டின்னு எப்படிய்யா நம்புறது"

சுந்தரும் டென்ஷனில் கத்த ஆரம்பித்தான் "என்ன சார், அந்தாண்ட தியேட்டர் இருக்கு. இந்த நேரத்தில படம் விடும்னு கூட தெரியாதா உங்களுக்கு?. இப்படியெல்லாம் சந்தேகப்படுறீங்க. வேணும்னா கூடவே வாங்க இரண்டு தெரு தள்ளி தான் வீடு இருக்கு"

சுந்தர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே டீ சாப்பிட்டுவிட்டு வந்த ஏட்டு நீலகண்டன் இவர்களை கண்டான். நீலகண்டன் அந்த போலீஸ்காரனிடம் சொன்னான் "சார் இந்த சாரை நல்ல தெரியும் சார்.இரண்டு தெரு தள்ளி தான் அவங்க வீடு இருக்கு"

போலீஸ்காரன் "நைட்டு இப்படி தனியா எல்லாம் வராதீங்க சார். இந்த இடம் ரொம்ப கெட்டு கெடக்கு. ஏதாச்சும் நடந்த நாங்கள்ள கஷ்டப்படனும், போங்க போங்க"

சுந்தரும் போலீஸ்காரனுக்கும், ஏட்டு நீலகண்டனுக்கும் நன்றிச் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தனர்.

அங்கு நிகழ்ந்த டென்ஷனில் இருவருமே பேசிக் கொள்ளவேயில்லை. லீலா மட்டும் வெடித்தாள் "பேசாம ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போயிருக்கலாம். கண்ட கண்டவன்கிட்ட எல்லாம் வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு"

"ஆமா ஆட்டோல போன மட்டும் போலீஸ்காரன் நிப்பாட்டு கேட்க மாட்டானா? உன்னை சொல்லனும்டி. நாளைக்கு படத்துக்கு போலம்ன்னு சொன்ன கேட்டியா?நைட்டே போனும்னு சொன்ன இப்படி தாண்டி"

ஒட்டி நடந்த இருவரின் கொஞ்சம் விலகி நடக்க ஆரம்பித்தனர்.

இருவரும் வீட்டை அடைந்ததும் வராண்டா லைட் போட சுவிட்சை தேடிய போது அவர்களின் செல்ல நாய் ஸ்கூபி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. லைட்டை போட்டவுடன் தான் அதற்கு நிகழ்ந்த விபரீதம் விளங்கியது. படம் பார்க்க போகிற அவசரத்தில் ஸ்கூபியை செயினில் கட்ட மறந்து போயிருந்தார்கள். வீட்டு நாய் தெருவில் இறங்கியதால் சைக்கிளிலோ, மோட்டர் பைக்கிலோ அடிப்பட்டு வலது பக்க முன்னம் காலில் நல்ல காயம் ஏற்ப்பட்டுருந்தது. ஸ்கூபியை லீலாவும் சுந்தரும் மிகவும் நேசித்தார்கள்.சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. லீலாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

"இப்படி ஆயிடுச்சுங்களே நம்ம ஸ்கூபிக்கு, டாக்டரை போய் பார்க்கலாமா"

"எப்படி லீலா இப்போ மணி நடுஇரவு 1:30 ஆகுது. எந்த வெட்னரி டாக்டருங்க இருப்பாங்க?. காயத்துல துணி கட்டி வைப்போம். காலையில மொத வேலையா டாக்டரை போய் பார்த்திரலாம் லீலா" என்று சொல்லிக் கொண்டே வீட்டின் கதவை திறந்தான் சுந்தர்.

லைட்டைப் போட்டதும் ஏதோ ஒன்று ஊர்ந்து ஓடியது. அது கரப்பான் பூச்சியாகத் தான் இருக்க வேண்டும். சுந்தருக்கு தெரியும் லீலாவுக்கு கரப்பான் பூச்சி என்றால் படுபயம். அது நடக்காமல் பறந்து வந்து மேல் விழுவதால் லீலா அலறி விடுவாள்.எப்போதுமே கரப்பான் பூச்சி பிரச்சனை இந்த வீட்டில் இல்லை. இப்போது எப்படி? என்று யோசித்துக் கொண்டிருந்த சுந்தர் லீலாவிடம் கரப்பான்பூச்சியைப் பற்றி சொல்லவில்லை.

இன்னும் லீலா ஸ்கூபியின் சோகத்தில் தான் இருந்தாள்.சுந்தர் ஸ்கூபியின் காலில் கட்டுப்போடுவதற்காக துணி எடுத்து காயத்தை சுற்றி கட்ட ஆரம்பித்தான். வெகுவாக ஊளையிட்டது ஸ்கூபி. லீலா சொன்னாள் "பார்த்தீங்களா சுந்தர், ஒரு அடிப்பட்டதற்கே ஸ்கூபியும் நாமும் எவ்வளவு வேதனை அனுபவிக்கிறோம். நாம மரணத்தண்டனை பற்றி பேசிக் கொண்டு வந்தோம். மரணம் எவ்வளவு வேதனை. அந்த வேதனையை மனித உயிர்கள் அனுபவிக்க வேண்டுமா?"

சுந்தரிடம் பதிலில்லை. நாய்க்கு கட்டுப் போட்டு வந்த சுந்தர் படுக்கையை விரிக்க ஆரம்பித்தான்.

திரும்ப எங்கிருந்தோ பறந்து வந்த கரப்பான் பூச்சி லீலாவின் நெற்றிப் பொட்டில் இடித்து எங்கேயோ விழுந்தது. அலறோ அலறு என்று அலறி விட்டாள். அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது. சுந்தருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஓரத்தில் கிடந்த செருப்பை எடுத்து கரப்பான்பூச்சியை தேட ஆரம்பித்தான். மோதிய அதே அதிர்ச்சியில் கரப்பான்பூச்சி மெதுவாக ஊர்ந்துக் கொண்டிருந்தது. 'நச்'சென்று கரப்பான்பூச்சியின் மேல் பலம் கொண்ட மட்டும் செருப்பின் அடிப்பாகத்தால் அடித்தான்.

கரப்பான்பூச்சியின் வெள்ளை இரத்தம் சுற்றித் தெறிக்க அதன் 2 கால்களின் இணைப்பு உடலிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. சப்பிப்போன கரப்பான்பூச்சி இன்னும் கழண்டக் காலுடன் எதையோ தேடி தேடி நகர்ந்துப் போனது. சுந்தரின் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. இன்னொரு தடவை திரும்ப செருப்பால் அந்த குற்றுயிர் கரப்பான்பூச்சியை ஓங்கி அடித்தான். உடலின் மீதமிருந்த வெள்ளை இரத்ததையும் மொத்தமாக உயிருடன் வெளியேற்றியிருந்தது. செருப்பின் ஓரத்தால் செத்துப்போன கரப்பான்பூச்சியை தள்ள முயற்சித்தான். பிசிபிசித்துபோன வெள்ளை இரத்தம் தரையில் ஒட்டிப் போய் வெள்ளை இரத்தம் எப்படியாவது உடம்புக்குள் வந்து விடாதா என்ற ஆசையில் கரப்பான்பூச்சியின் உடல் அதைவிட்டு அகலமறுத்தது. சுந்தர் இன்னமும் அருவருப்புடன் ஓங்கித் தள்ளினான். கரப்பான்பூச்சியின் உடல் ஹாலை தாண்டி வராண்டாவில் வலியுடன் முனங்கிக் கொண்டிருந்த ஸ்கூபியின் பக்கத்தில் போய் விழ, ஸ்கூபியும் அது என்னவென்று தலையை திருப்பிப் பார்த்தது. சுந்தர் திரும்பவும் வராண்டாவிலிருந்து அந்த செத்த கரப்பான்பூச்சியை தெருவுக்கு தள்ளி விட்டான். சுவற்றில் எங்கிருந்தோ ஒரு பல்லி வேகமாக வெளியே ஓடியது.

எந்த குற்றத்திற்காக இந்த மரண தண்டனை?

ஸ்கூபியும் வலியில் முனங்கிக் கொண்டிருக்க, லீலாவும் சுந்தரும் ஸ்கூபியை நினைத்துக் கவலையுடன் படுத்து தூங்க ஆரம்பித்தனர்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
புழங்காகிதம் spelling கரெக்டா?

எனக்கும் சரியா தெரியாது. யாராவது சொல்லுங்கப்பா?
 
புளகாங்கிதம் தான் சரி என்று நம்புகின்றேன். எனக்கும் இந்த ழ, ள பிரச்சனை இருக்கின்றது. ஆனால் நான் ஒரு assistant ஐ இங்கே வைத்திருக்கின்றேன். அவர் என்னுடைய எல்லாப் படைப்புக்களையும் மிக நுணுக்கமாக வாசித்துப் பிழை கூறுவார். எனவே எனக்குப் பிரச்சனை இல்லை
 
புளகாங்கிதம் சரி!

கதையைப் படிச்சுட்டு அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன்!!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
மரணதண்டனைகள் வழங்கப்படுவது குற்றவாளிக்குத்தான் என்றாலும் அதன் உள்நோக்கம் எதிர்காலத்தில் அவ்வாறான கொலைகள் நடக்ககூடாது என்பதுதான் பிரதான காரணம். அதன்மூலம் புதிய கொலைக்குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதுதான். சுருக்கமாக சொன்னால், அவர் குற்றவாளியாக இருந்தாலும் சமூகத்தை நல்வழியில் இட்டுசெல்லகூடிய கருவியாகதான் அவர் பயன்படுத்தப்படுகிறார்.
 
'புழங்காகிதம்' தவறை சுட்டிக்காட்டிய கிறுக்கனுக்கு நன்றி.

அது போல் புளகாங்கிதமாக அதை திருத்தி நேராக்கிய கறுப்பிக்கும், துளசியக்காவுக்கும் நன்றி.

கறுப்பி, எனக்கும் ஒரு அசிஸ்டெண்டை பிடிச்சி தாங்களேன். ழ,ள பெரும் பிரச்சனை தான் எப்போதும்.

மரணதண்டனைப் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்வாணன்.

சக இன உயிருக்கும், தன் வட்டத்துக்குள் இருக்கும் உயிருக்கும் மதிப்பு கொடுத்து வாதிடும் மனிதன் இன்னொரு உயிரை அற்பம் என மதிப்பது ஏன் என்ற கேள்வி கேட்கவேண்டும் என்ற தொனியில் எழுதினேன்.

அப்படியா வந்திருக்கு கதை???? :-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->