<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

கண்மணி கமலாவுக்கு...

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
வாழ முடியாமல் போன ஒரு எழுத்தாளரின் நெஞ்சத்தின் சோகம் அவரின் கடிதத்தின் வாயிலாக படிக்கும் போது ஆற்றாமையால் படிப்பவரின் நெஞ்சமும் துடித்துப் போகும் என்பது உண்மை. அவரின் அந்தரங்க கடிதங்களை படிப்பது மூலம்(படிப்பது சரியா? தவறா? என்பதை தவிர்த்து) அவரின் அந்தரங்கங்கள் தெரிவதுடன் அவரின் அந்தரங்க துன்பங்களும் நம்மை கவ்விக் கொள்கிறது. வாழ்க்கை சரிவர வாழாமல் எழுதி மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களை புத்தகத் தொகுப்பாக படிக்கும் போது ஒருவரின் அந்தரங்கத்தை படிக்கிறோமே என்ற குறுகுறுப்பும், அறிந்துக் கொள்ளும் மனிதனின் இயல்பு குணத்துடன் படித்து முடிக்கும் போது ஆசை இருந்தும் வாழ்க்கையை வாழமுடியாமல் இறந்துப் போகிற மனிதர்கள் இருக்கும் போது,வாழ்க்கை இருந்தும் வாழத் தெரியாமல் வீணடிக்கும் ஒவ்வொரு கணமும் கண் முன் மின்னி விட்டு மறைகின்றன.

தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் தொடுக்கப்பட்டவையாக, புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து "கண்மணி கமலாவுக்கு..." என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தனின் மீது ஆயிரம் குற்றசாட்டுகள் இருந்தாலும் அவரின் சுயத்தை எறிந்துவிட்டு படைப்புகளை கவனித்தால் தமிழில் முக்கிய எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பது விளங்கும். நக்கல்,நையாண்டி, மூர்க்கம், ரௌத்ரம் முதலியவைகள் மின்னும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் புதுமைப்பித்தன். அவரின் காதல்+சோகம்+இயலாமை நிறைந்த கடிதங்களை படிக்கும் போது அவரின் இன்னொரு முகம் தரிசனமாகும்.


புதுமைப்பித்தன்
Image hosted by PicsPlace.to

தொகுப்பட்ட அவரின் கடிதங்களில் எல்லாமே பணத்தை சுற்றியும், அவரின் தேவையை பூர்த்திசெய்யாத பணத்தை காண முடியாத இயலாமையும், பிரிந்த மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியாத கையாலாகத கணவனாக தன்னை சித்தரித்து அவர் படும் வேதனையும், தன் மனைவியை கதைகள் எழுத அவர் கொடுக்கும் ஊக்கமும், மனைவி மீது இருக்கும் தன் காதல் என்றைக்குமே மாறாது என்று சித்தரிக்கும் வார்த்தைகளும்,மனைவிக்கு அவர் கொடுக்கும் ஊக்கமொழிகளும், பிறந்த குழந்தையை காண முடியாமல், கொஞ்ச முடியாமல், தழுவ முடியாமல் போகும் இயலாமைகள் மட்டுமே அந்த கடிதங்களில் பிரதானமாக ஒலிக்கின்றன.

எஸ்.ராவின் 'துணையெழுத்தில்' புதுமைபித்தனைப் பற்றி சொல்லிமிடத்தில் புதுமைப்பித்தன் தன் தந்தையுடன் சண்டையிட்டு பிரிந்து சென்னைக்கு வந்ததாக குறிப்பிட்டிருப்பார். திருமணமான 16 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் 1938 முதல் 1948 வரை மனைவி பிரிந்தும் சொற்ப நாட்களில் இணைந்து வாடியிருக்கும் வேதனைகள் அந்த கடிதத்தில் ஒலிக்கின்றன. புதுமைபித்தனின் மனைவி கமலா திருவனந்தபுரம், உத்தமப்பாளையம், அம்பாசமுத்திரம்,பளையங்கோட்டை என்று பந்தாடப்படும் போதெல்லாம் சென்னையிலிருந்து கமலா எங்குச் சென்றாலும் துரத்தி துரத்தி கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களின் கணவன் மனைவி என்ற உறவில் கடிதமே பிரதான பாலமாக செயல்பட்டிருக்கிறது.

புதுமைப்பித்தனின் இயற்பெயரான 'சொ.விருத்தாசலம்' என்ற பெயரிலேயே எல்லா கடிதங்களையும் எழுதியிருக்கிறார்.கணவன் மனைவிக்கு எழுதும் எல்லா அந்தரங்க வார்த்தைகளும் சென்ஸார் இல்லாமல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது படிப்பவரை கொஞ்சம் அதிகமாகவே நெளியச் செய்கிறது.

"குஞ்சு என் உயிர். நீ என் உடம்பு" என்று கடிதத்தில் குறிப்பிட்டுருக்கும் குஞ்சு என்ற தன் குழந்தையை சென்னைக்கு புறப்படும் முன் ஆசை தீர கன்னத்தை தொட்டு விட்டு கிளம்பியவர் தான், பிறகு கமலாவுக்கு எழுதும் கடிதத்தில்,

"...........
எப்பொழுதும் நீயும் குஞ்சுவும் தான் என் மனசில் தோன்றிக் கொண்டிருக்கிறீர்கள்.இன்னும் ஒரு விசேஷம். போனவாரம் நான் பகலில் படுத்துக் கொண்டிருக்கையில் சிறிது கண்ணயர்ந்தேன். அப்பொழுது நீ உட்கார்ந்துகொண்டு என்னை ஏறிட்டு பார்க்கிற மாதிரி முகம் மட்டும் மார்பு வரை தெரிந்தது. உன் கண்கள் கலங்கியிருந்தன. நீ அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாய். "கண்ணா" என்று நான் அலறிக்கொண்டு எழுந்திருந்தேன். அது வெறும் சொப்பனம் என மனதில் பட வெகுநேரமாயிற்று. இப்படியாக நான் இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் மன கொந்தளிப்புகள் உன்னை இன்னும் அதிக துயரத்தில் ஆழ்த்திவிடக்கூடாது என அஞ்சுகிறேன்.. நீ எதற்கும் மலைத்து விடாதே. விதி நம்மை சோதிக்கிறது அவ்வளவு தான். நமது சங்கடங்கள் எல்லாம் இன்னும் இரண்டொரு மாதத்தில் பனி போல மறைந்து விடும். பயப்படாதே.
......................."

பிறகு 30-5-40 அன்று புதுமைப்பித்தன் எழுதும் கடிதத்தில் மனைவியின் அவசர தேவைக்காக எங்கெங்கோ கஷ்டப்பட்டு பணம் பிரட்டியதை குறிப்பிட்டு "குஞ்சுவைக் காட்டி பிச்சை எடுத்த மாதிரி" இந்த பணத்தை பிரட்டினேன் என்னும் தொனியில் எழுதிய கடிதத்தை அஞ்சல் செய்யும் முன்னரே குஞ்சு இறந்த செய்தி கிடைத்திருக்க வேண்டும்.எந்த காரணத்தால் தன் இறந்த குழந்தையை பார்க்க செல்ல முடியவில்லை என தெரியவில்லை.யுத்த நேரம் சென்னையில் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இயலாமையோ அல்லது ஊருக்கு செல்லக் கூட காசு இல்லாத வறுமையோ தெரியவில்லை. இறந்த குழந்தைக்காக தான் விடும் கண்ணீரால் கடிதத்தில் மனைவிக்கு ஆறுதல் சொல்லியிருப்பார். 31-05-40 என்ற தேதியிட்ட கடிதத்தில்...

"கண்ணா,

இன்றாவது எனது கடிதம் உனக்கு ஆறுதல் அளிக்குமாக. எனக்கு இங்கு நிம்மதி இல்லை. தந்தி எழுதுகையில் உனது கலங்கிய கண்களும், முகமும் தான் தெரிகிறது. ஒன்றும் ஓடவில்லை. நான் என்னை விட்டு ஓடினால் தான் எனக்கு நிம்மதி. தன்னை மறக்க மயக்க மருந்தால் அல்லது 'எழுந்திராத தூக்கத்தால்' தான் முடியும்.இந்த நிலையில் நான் உனக்கு ஆறுதல் சொல்ல வருவது நொண்டி இன்னும் ஒரு நொண்டியைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டது போலத்தான். இருந்தாலும் பொறுப்பு எனக்குத்தானே. அதனால் என் மனம் என்னைத் தின்றுக் கொண்டிருக்க உனக்கு ஆறுதல் சொல்லிவிட முடியும் என ஆசைக்கொண்டு அசட்டுத்தனமாக முயற்சி செய்கிறேன். என் முயற்சியைப் பார்த்து நானே சிரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணம்மா துக்கம் எல்லை மீறிவிட்டதால்-இதற்கெல்லாம் நான் தான்,இந்தப் பாவியாகிய நான் தான் காரணம் என்பதால், நெஞ்சு ஒரு புறம் என்னைக் குத்த ஓங்கி அழுது மனச் சுமையைத் தீர்த்துக் கொள்ளவும் சக்தியற்று, இடமற்று, தனிப் பிணமாக, பேயாக அலைகிறேன். நான் உனக்குச் செய்ய தவறிய கடமைகள் தினம் தினம் என் மனசை, மனச்சுமையை அதிகரிக்கிறது. என்னை நானே தேற்றிக் கொள்கிறேன். எப்படி என்றாலோ நான் செய்த குற்றஞ்களுக்கெல்லாம் எனக்குத் தண்டனை என்று. ஆனால் இந்த விஷயத்தில் என் தவறுகளுக்கு என் மேல் மட்டும் பலன்களைப் போடாமல் நான் யாரை உயிருக்குயிறாய் மதிக்கிறேனோ அவள் புழுவாகத் துடிக்கும் படி வைத்துப் பார்த்து உதவ வழி இல்லாமல் நின்று தவிக்கும்படி செய்து விட்டது. குஞ்சு என் மனசில் குடியிருக்கிறாள். அவள் இனிமேல் தேவதையாகி என் வாழ்வின் வழிகாட்டியாக, குருவாக, தெய்வமாக மாறிவிட்டாள்.
........."

அதைத் தொடர்ந்து தினமும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை கமலாவுக்கு எழுதித் தள்ளுகிறார். கமலா குழந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலையைப் பற்றி பேசியிருக்க வேண்டும். அடுத்த கடிதங்களில் தற்கொலை என்பது கோழைச்செயல் என்று மனைவிக்கு பெரும் ஆறுதல் சொல்லும் கடிதங்களும் இடம் பெறுகின்றன.

அவ்வப்போது பட்டினியால் கிடந்து வாடி பணம் கிடைக்கும் போது கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு வந்த புதுமைப்பித்தனுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு வந்து படுத்துக்கொள்கிறார். அடிக்கடி நோக்காடு வந்து கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், மனைவியின் உடல்நிலையை மட்டுமே பிரதானமாக கவனித்தில் கொண்டு அறிவுரை வழங்கியிருப்பார். தன் உடல் நிலையைக் குறித்து ஒரே வரியில் எழுதி, உடனே அதற்கு பின் 'இதெல்லாம் ஒன்றுமில்லை. நான் பார்த்துக் கொள்வேன்" என்று பெரிதாக மனைவியிடம் கடிதத்தில் அலட்டிக் கொள்ள மாட்டார்.

பின்வரும் வருடங்களில் தன் மனைவியை சென்னைக்கு கூட்டிவரும் முயற்சிகளாக தன் கடிதத்தில் ஒலிக்கிறது. கடன் ஏதும் இல்லாத துவக்கத்தில் தான் மனைவியுடன் சென்னை வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து கடன் அடைத்து வர, திரும்ப கடன் வாங்க என்று பல மாதங்கள் ஓடி விடுவதும், ஒவ்வொரு கடிதத்திலும் அடுத்தவாரம் சென்னைகு வர தயாராக இரு என்று வாக்குறுதி அளிப்பதும், பிறகு எந்த காரணத்தாலோ அந்த வாரம் கமலாவை கூட்டிவர முடியாமல் நாட்கள் தள்ளிக் கொண்டே போயிருப்பதையும் கடிதத்தில் காணலாம். அப்படி பார்த்தால் ஏறக்குறைய 'இந்தா அந்தா'வென்று கடிதத்தில் சொல்லி சொல்லியே 6 மாதம் வரை நீட்டித்திருப்பார் .இந்த இடத்தில் ஆசை அடைந்து மோசம் போய், புதுமைப்பித்தனை விட அவரின் மனைவி கமலாவின் நிலமை தான் மிக பாவமாக இருக்கிறது.

சென்னை வந்து சிலகாலம் வாழ்ந்து விட்டு திரும்பவும் கமலா பிரசவத்திற்காக ஊருக்கு செல்கிறார் என்று நினைக்கிறேன். திரும்ப தனிமை. கடிதம், தனிமை, கடிதம் என புதுமைப்பித்தனின் வாழ்க்கைத் தொடர்கிறது. அவருக்கு மகள் பிறக்க, மகளுக்கு பார்வத குமாரி,சாமளா போன்ற பெயர்களில் பர்வதகுமாரி என்பது தனக்கு படித்திருப்பதைப் பற்றியும், பர்வதகுமாரி என்பதற்கு தினகரி என்ற பொருள் உண்டு என்றும், தினகரி தான் ரொம்ப பிடித்திருக்கிறது என்றும் கடிதத்திலேயே குழந்தைக்கு பெயர் சூட்டியிருப்பார்.

சென்னையில் யுத்தகாலத்தில் நடக்கும் அரசியல் நடப்புகளையும், சுவராஸ்யமான விசயங்களையும் விளக்கியிருப்பார். பத்திரிக்கையிலிருந்து சினிமாவிற்கு வாய்ப்புகள் வர, கையில் கொஞ்சம் தாரளமாக பண புழக்கம் இருப்பதையும், சென்னையில் பங்களா டைப் வீடு வாங்கினால் சினிமா துறையில் இருப்பதற்கு கொஞ்சம் 'கெத்'தாக இருக்கும் என்பதையும் அந்த கடிதப் போக்குவரத்தில் அறியலாம்.

காமவல்லி,அமராவதி போன்ற படங்களில் வேலைப்பார்த்த சுவராஸ்யமான விசயங்களையும், தியாகராஜ பாகவதர் சிறையிலிருந்து மீண்ட பின் செய்யும் சொந்தத் தாயரிப்பு படமான 'ராஜமுக்தி'யில் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்ததையும் கடிதத்திலேயே பேசியிருப்பார். 'என்.எஸ்.கிருஷ்ணன் வர மறுத்துவிட்டானம்' என்று ஒருமையில் குறிப்பிட்டு ராஜமுக்தியில் என்.எஸ்.கே கொடுத்த தடையால் பாகவதரின் அந்த படம் சந்தித்த தடங்களைப் பற்றிய பீடிகையை ஆரம்பித்து விட்டு 'நேரில் இதையெல்லாம் கதைகதையாகச் சொல்கிறேன்' என்று கடிதத்தை முடித்திருப்பார்.

பிறகு ராஜமுக்தி படத்திற்காக புதுமைபித்தன் புனேவிற்கு செல்ல காந்திஜி சுடப்பட்டதையும்,'முஸ்லீம் தீவிரவாதி தான் செய்திருப்பார், புனேவில் பிரச்சனையில்லை' என்று அனுமானத்தில் அவர் முதல் நாள் கமலாவுக்கு கடிதம் எழுதி அனுப்ப, மறுநாள் இந்து தீவிரவாதி தான் காந்தியை கொன்றான் அதுவும் புனேவில் இருந்தவன் என்று தெரியவும் புனேவில் கலவரம் வெடிக்கிறது. இதனால் படபிடிப்பு தடைப்படுகிறது.

ராஜமுக்தி கதையில் சில மாற்றங்கள் செய்வதற்கு கடைசிகட்ட வேலையில் ஈடுபடும் போது டி.பி என்ற கொடிய நோய் புதுமைபித்தனை பீடிக்கிறது. அடுத்து அவர் எழுதும் கடிதங்கள் ஒரு கை ஓசையாகவே ஒலிக்கிறது. கமலா புதுமைப்பித்தனுடன் ஏதோ பிணக்குடன் இருப்பாதான தொனியில் அவர் எழுதிய கடிதங்களில் ஒலிக்கிறது. டி.பி நோய் மிக கடுமையாக, தினமும் 104 டிகிரி காய்ச்சலுடன் 'என்னால் எழுத முடியவில்லை. கை வலிக்கிறது. தினகரியை பற்றியாவது ஒரு வரி எழுது' என்று கமலாவை கெஞ்சி கதறியிருப்பார். நோயால் படும் அவதியை "கை வலிக்கிறது கை வலிக்கிறது" என்ற அவரின் ஓலம் கடைசியில் எழுதிய எல்லா கடிதங்களிலும் காணமுடியும். ஒரு டாக்டர் சொன்னதை வைத்து எதுவும் எடுத்துக் கொள்ள முடியாது, இரண்டு பெரிய டாக்டர்களை பார்க்கப் போகிறேன் என்று அவரின் கடைசிக்கட்ட வாழ்க்கை போரட்டதுடன் "எனக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களா?" என்று யாரையாவது கேட்டுச் சொல் என்று உறுதியிழந்து அவர் எழுதும் அந்த கடிதங்களை படித்து என்னால் கண்ணில் கண்ணீர் துளிர்க்காமல் இருக்க முடியவில்லை. டி.பி என்ற தொற்றுவியாதி குழந்தைக்கும் பரவிவிடக்கூடாது என மனைவியை காண தவிர்க்கும் அவர், நோய் முற்றி இருமிக் கொண்டே பெங்களூர் கன்னையாவுடன் புனேவிலிருந்து திரும்புகிறார்.

அதுவரை "எனது கண்ணாளுக்கு" என்று கமலாவுக்கே எழுதிய கடிதங்கள் இடம் பெற்றிருக்கும் அந்த புத்தகத்தில் அவர் நண்பர் சிதம்பரத்துக்கு எழுதிய கீழ்கண்ட புதுமைப்பித்தனின் ஒரே கடிதம் இதயத்தை நொறுக்கிப் போடுகிறது.

" 26-5-48
அன்புள்ள சிதம்பரத்துக்கு,

நான் பெங்களூரிலிருந்து திரும்பி வந்துவிட்டேன்.

அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப்பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டு கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம் தான் முடிவு. இங்கு வந்து வேறு சிகிச்சை முறை அனுஷ்டிக்க உத்தேசம். கைவசம் பணம் இல்லை. பாகவதர் அனுப்ப வேண்டியது தாமதமாகியது. ஒரு நூறு ரூபா இருந்தால் சிகிச்சைக்கு வசதி உண்டு. எதற்கும் என்னை 10 மணிக்கு சந்திக்க முடியுமா?

உனது,
சோ.வி... "

சிகிச்சைக்கு 100 ரூபாய் கூட இல்லாமல் தவித்த புதுமைப்பித்தன் 30 ஜீன் 1948-ல் உலகை நீத்தார்.

புதுமைப்பித்தனை பற்றிய சின்ன அறிமுகத்திற்கு இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சரியான நேரத்தில் சரியான பதிவு, தமிழ் அன்னை ஒரு ஓரவஞ்சனைகாரி தமிழன்னையை மதிக்காமல் வேறு அன்னையை தேடும் சில ர*டி பிள்ளைகளுக்கு, பொருளை வாரிக்கொடுத்தாள், ஆனால் அவளின் காலையே சுற்றி வந்து அவள் காலையே நக்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை வறுமையில் ஆழ்த்திவிட்டாள்...
 
vijay,
nalla pathivu !!! He was a great writer, no doubt !!!

Also, Did you see

http://balaji_ammu.blogspot.com/2005/06/blog-post_10.html :)))
 
அன்புள்ள விஜய்,

நல்ல பதிவு!

நான் இதுவரை 'புதுமைப் பித்தன்' படித்ததில்லை.
இப்பத்தான் ஒரு சைட் கிடைச்சிருக்கு. ஒவ்வொண்ணாப் படிக்கப்போறேன்.

கமலாவும் பாவம்தானே?
 
//ஆனால் அவளின்(~தமிழன்னை) காலையே சுற்றி வந்து அவள் காலையே நக்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை வறுமையில் ஆழ்த்திவிட்டாள்... //

குழலி, பாரதியைப் போலவே புதுமைப்பித்தனையும் வாழும் காலத்திலேயே இனம் கண்டுக் கொள்ளாமல் போனது தமிழ்.
 
என்றென்றும் கொம்புடன் பாலா,

சனி, ஞாயிறுகளில் அதிகம் இணையம் பக்கம் வரமுடியாததால் தாங்களின் பதிவை தவற விட்டுவிட்டேன். பார்த்தாகி விட்டது. நன்றி.

துளசியக்கா,

எழுத்தாளரின் மனைவி என்று பெருமைப்படுவதை விட வறுமையின் மனைவி என்ற பெருமை மட்டுமே கிடைக்கும் போது அந்த மனைவி எப்படி சந்தோசமாக இருக்க முடியும்??

கண்மணி கமலா... பாவம்.
 
Thanks for writing this nice article.

I was not aware of this site of Pudumai Pittan. I felt very bad for him.

Regards
 
போட்டுத் தாக்கிட்டீங்க விஜய்!

இதைப் படிக்கும்போது, ஏனோ அவரின் "ஒரு நாள் கழிந்தது" சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. அவர் நிஜ வாழ்க்கையும் 'நாளை' என்ற நாளே இலக்காக இருந்திருக்கிறது போலும்.

இன்னும் இதை வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. இரவலாகக் கிடைத்தால் மேலோட்டமாக ஒரு முன்னோட்டம் விட வேண்டும்.
 
//இன்னும் இதை வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. இரவலாகக் கிடைத்தால் மேலோட்டமாக ஒரு முன்னோட்டம் விட வேண்டும். //

அந்த புத்தகம் இலக்கியம் என்பது பொருந்தாது. அது ஒரு துயர சரித்திரம். இரவலாக வாங்கி படிப்பது தான் உத்தமம் கண்ணண். நன்றி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->