<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

முய்முய் புத்தக பிடிச்சி விளையாட்டு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இவன் எழுதுவதிலிருந்து தெரிகிறது. இவனெல்லாம் என்ன வாசித்து இருக்கப் போறான் என்று எல்லாரும் நேர்மையாக என்னைத் தவிர்த்து விட பாவம் என்றென்றும் அன்புடன் பாலா என்னை தப்பாக கணித்து இந்த விளையாட்டுக்கு அறை(ர)க்கூவலில் என்னை அழைத்து விட்டார். ரொம்ப தேங்ஸ்பா. விளையாட்டு என்றாலே கதா தூரம் ஓடும் என்னையும் "அட! இந்த மேட்டர் ஒரு பதிவுக்கு ஆச்சி" என்று இழுக்க, நீங்கள் அவஸ்தையில் நெளிய என் ஊத்தை எண்ணத்தால் என் வாசிப்பின் பயோகிராஃபியை எழுதப் போகிறேன்.

இந்த பதிவுக்கு சம்பந்தமாக ஏற்கனவே 'என் அப்பாவின் ட்ரெங்க் பெட்டியில்' சொல்லியிருக்கிறேன்.

என் வாசிப்பின் வசந்தகாலம்

என் வாசிப்பின் வசந்தகாலம் சிறுவயது பருவம் தான். அப்போது நான் படக்கதைகளுக்கு அடிமையாயிருந்தேன். நண்பன் ராம்குமாரின் வீட்டில் ஓசிப்பேப்பர் படிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிந்துபாத்தின் கன்னித்தீவில் ஆரம்பித்த படக்கதை புயல் தினமலர் 'சிறுவர் மலரில்' மையம் கொண்டு முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ்களை போட்டுத் தாக்கிவிட்டு பதின்ம வயது ஆரம்பத்தில் கரையைக் கடந்து மறைந்தே விட்டது. படக்கதைகளின் வழியாக எனக்கு ஆதர்ஷ புருஷர்களாகத் திகழ்ந்தவர்கள் சிந்துபாத், இரும்புக் கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் மேன், சுட்டிக் குரங்கு கப்பீஸ், பலமுக மன்னன் ஜோ, மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு (தினமணி கதிரில் வந்தது. சாம்பு என்பது ரொம்ப ரொம்ப இண்டெலிஜண்ட் ஆன ஒரு நாயின் பெயர்). நேரம் காலம் தெரியாமல் காமிக்ஸ் படக்கதையை படிக்க நண்பன் வீட்டுக்குச் சென்று வெகு நேரம் கழித்து திரும்பி வர என் அம்மா கன்னத்தை பிடித்து இழுத்து இழுத்து வழக்கமாக முதுகில் இரண்டு தோசை விடுவார்.

என் வாசிப்பின் இலையுதிர் காலம்

படக்கதைகள் என்னை விட்டு நழுவ நழுவ எழுத்துக் கதைகளை எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தது தினதந்தியில் வந்த கதைகளைத் தான். பாதி அர்த்தம் புரிந்து புரியாமலும் எதைப் பற்றி சொல்கிறார்கள் என்பதை அறிந்தும் அறியாமலும் தட்டுத் தடுமாறி படித்த கதைகள் ஏராளம். அதில் தினத்தந்தியில் 'பி.டி.சாமி'யின் பேய்க்கதைகள் தொடராக வந்துக் கொண்டிருந்த காலத்தில் திகிலோடு திக் திக் மனசோடு படிச்ச காலமும் உண்டு. சடாரென்று கதையில் யாரோ கதாநாயகியின் மார்பை அறுத்துக் கொண்டு சென்று விட தொலைந்த மார்பைத் தேடி கதாநாயகன் புறப்பட நானும் என் நண்பர்களும் கதாநாயகனோடு எங்கள் தேடலைத் தொடர்வோம்.

அடுத்து உருப்பட கைக்கொடுத்தது பாளையங்கோட்டையில் சேவியர்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம். அரும்பாடு பட்டு மெம்பர்ஷிப் வாங்கி உளவியல் முதல் அனடாமி வரை வசிக்கக் கற்றுக் கொடுத்தது அந்த நூலகம் தான். ஏன் எப்படி எதற்கு மாதிரியான அறிவியல் புத்தகங்கள் ஆனாலும் சரி கஜினி முகமதுவை அறிய வேண்டுமானாலும் சரி, புரியாமல் சுஜாதாவை என்னை படிக்க வைத்ததும் சரி அந்த நூலகத்துக்கே முக்கிய பங்கு. உருப்படியாக முதல் பக்கத்திலிருந்து கடைசிபக்கம் வரை படித்து முடித்து தமிழ்வாணனின் கதைகள் தான். அக்காலக்கட்டத்தில் எனக்கு தெரிந்த ஒரே பிரசுரம் 'மணிமேகலை பிரசுரம்' தான். கருப்புக் கண்ணாடியும், கருப்பு கௌபாய் தொப்பியும் இருந்தாலே தமிழ்வாணன் அங்கிருப்பார் எனத் தெரியும். அவர் துப்பறியும் பாங்கு, கதாபாத்திரங்களுக்கு அவர் பயன்படுத்தும் தமிழ்பெயர்கள் முதற்கொண்டு என்னை அந்த காலத்தில் கிறுக்கு பிடித்து அலையவைத்தது தமிழ்வாணன் கதைகள் தான்.

தமிழ்வாணன் முடிய மெதுவாக ராஜேஷ் குமார் பக்கம் ஒதுங்கினேன்.ராஜேஷ் குமாரின் வெறிப்பிடித்த வாசகனாகி விட அவர் க்ரைம் கதைகளை தேடி தேடி படித்த காலமும் உண்டு. பதின்ம வயதின் சூடு ஏற ஏற பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகள் கிறங்கடித்தன. பரத்தும், சுசீலா போட்டு வரும் இரட்டை அர்த்த பனியனும், PKP-யின் பெண் வர்ணிப்பும் சூட்டை கிளப்பி விட்ட காலங்களும் உண்டு. இவற்றிலெல்லாம் கவனம் திரும்ப விடக்கூடாதென புரியாமல் படித்தது விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ஓசோ, ஜேகே. அத்துடன் பி.சி.கணேசன், மெர்வின் மாதிரியான டப்பா ஆசிரியர்களின் புத்தகங்களான 'தியானம் செய்வது எப்படி?', 'மெஸ்மெரிசத்தை கற்றுக் கொள்ளுங்கள்' போன்றவற்றை படித்து விட்டு பூட்டிய அறைக்குள் சாதகம் பண்ணி கண் அவிந்து கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு.

என் வாசிப்பின் கோடைக்காலம்

கல்லூரிக்குள் நுழைந்ததும் கவனம் எல்லாம் சினிமாவில் திரும்பியதால் மருந்துக்கு கூட புத்தகங்களை தொடவில்லை (படப்புத்தகங்களையும் சேர்த்து). கற்றுக் கொண்ட பாடங்களும் ரொம்ப கம்மி. அங்கு கற்றது உல்லாசம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் மட்டுமே. வேலைத்தேடி சென்னைக்கு வந்தப்போது புதிய சூழலைக் கற்றுக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. வேலைதேடி தோல்விகளை மட்டுமே தழுவிய சமயத்தில் திடீரென ஆங்கிலத்தின் மேல் காதல் வந்து விட "பணக்காரர் ஆவது எப்படி?", "எதை வேண்டுமானாலும் அடைவது எப்படி?" போன்ற காப்மேயர் புத்தகங்கள் தான் தெய்வம். வார இதழ், நாளிதழ் என்பது அறவே அற்றுப் போனது.

வேலையும் கிடைத்து விட துறை சார்ந்த புத்தகங்களை மட்டுமே வெறி கொண்டு வாங்கி அடுக்கி வைத்தேன். அத்துடன் கண்ணில் பார்த்த தமிழ் புத்தகங்களை எல்லாம் வாங்கி அடுக்கினேன். ஆனால் இது வரை அதில் 10% கூட படித்து முடிக்கவில்லை. ஏறக்குறைய 8 வருடங்களுக்கு மேல் என் வாசிப்பு கோடைகாலமாக வறண்டே இருந்தது. இப்போது நினைத்தாலும் வீணாக்கிய அந்த காலங்களை நினைத்து துக்கம் தாளவில்லை. இழந்ததை எட்டிபிடிக்க முயலுவது மூடத்தனம் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

என் வாசிப்பின் குளிர்காலம்

வேலை அமெரிக்காவுக்கு ட்ரான்ஸ்வராகி விட தனிமையை கொல்ல மெல்ல மெல்ல புத்தகத்தை கைப்பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இணையம் என்னை சுருட்டிக் கொண்டது.'இணையத்தில் தமிழ்' என்று வெறிக்கொண்ட மட்டும் இணையத்தில் என்னை தாறுமாறாக படிக்க வைத்தது. அப்படியே அமெரிக்கவில் கிடைக்கும் நூல்களையும் படிக்கலாமென நினைத்திருந்தேன்.

முதல் நாள் இரவு நியூயார்க் WTC-ஐ ஒட்டியிருந்த Border புத்தகக் கடையில் 'அமெரிக்காவின் சரித்திரம்' என்ற ஆங்கில புத்தகத்தை வாங்கி WTC-க்கு கீழேயே உட்கார்ந்து இருட்டும் வரை படித்து விட்டு அங்கு நடந்த ஜாஸ் மேடை நிகழ்ச்சியை பார்த்து விட்டு வர, மறுநாள் WTC மண்ணோடு மண்ணாகி விட அதிர்ச்சியில் உறைந்தேன். இதனால் நியூயார்க்கில் வேலைக்கு போகமுடியாமல் 15 நாட்களும் வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்கள் மறந்தே போய் விட்ட வாசிப்பை தூசி தட்ட வைத்தது.

மீண்டும் என் வாசிப்பின் வசந்தகாலம்

திருமணத்திற்கு பிறகு புதிய பரிமாணத்தில் வாசிக்க கற்றுக் கொண்டேன். அதாங்க அவங்க படிச்சி படிச்சி எனக்கு கதை சொல்லுவாங்க, கருத்துச் சொல்லுவாங்க. ஆனால் நான் புத்தகத்தை தொட்டு நானே வாசிக்க மாட்டேன். என்னுடைய வாய்ஸ் ரீடராக இருந்து வாசிப்பின் புதிய பரிமாணத்தை காட்ட மீண்டும் வாசிப்பு பழக்கம் துளிர் விட ஆரம்பித்தது. என் மனைவி தி.ஜானகிராமனின் மோகமுள்ளை வாசித்து சொல்லிக் கொண்டிருக்க பாதியிலேயே ஊருக்கு போய் விட புத்தகத்தை நானே வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.

அத்துடன் தமிழ்மணமும் சேர்ந்துக் கொள்ள இவ்வளவு மேட்டர் இருக்குதா என்ற ஆச்சரியத்துடன் நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசிப்பு பழத்தை தின்று கொட்டை போட்டும் இன்னமும் தின்று கொண்டிருக்கும் ஜெயந்தி சங்கர், ஈழநாதன் முதலானோர் உள்ள சிங்கப்பூர் இணைய நண்பர்கள் குழு அறிமுகம் கிடைத்ததும் நிறைய படிக்கும் உத்வேகத்தை கொடுத்தது. சிங்கப்பூர் நூலகம் வஞ்சகமில்லாமல் தமிழ் புத்தகங்களையும், உலகப்படங்களையும் அள்ளி விட படிப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. தமிழ்மண புலிகளை பார்த்து இந்த பூனையும் சூடு போட்டுக் கொண்டது.

சரி இப்போ வழக்காமான முய்முய் விளையாட்டின் பாரம்பரிய முறைக்கு வருகிறேன்.

என்னிடம் இருக்கும் புத்தகங்கள் - இந்தியாவில் ஏறக்குறைய 300 புத்தகங்கள் (மனைவி சீதனமாக அள்ளி வந்த அவருடைய புத்தகங்களையும் சேர்த்து) , சிங்கப்பூரில் 30 புத்தகங்கள்

அண்மையில் படித்த தமிழ் புத்தகங்கள்:

1. எஸ்.ராவின் துணையெழுத்து
2. எஸ்.ராவின் உலக சினிமா
3 பாஸ்கர் சக்தியின் 'பழுப்பு நிறப்புகைப்படம்'
4. ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு (இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்)
5. புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
6. கல்கியின் சிறுகதைகள்
7. மேக்ஸீம் கார்க்கியின் தாய்
8. பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்
9. ஜனகனமன - மாலன்
10. சொல்லாத சொல் - மாலன்

படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்

1. கடவு - திலீப் குமார்
2. எஸ்.ராவின் தாவரங்களின் உரையாடல்

அண்மையில் படித்த ஆங்கில புத்தகங்கள் (மொத்தமாக சொல்லவேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரஷ்ய இலக்கியங்கள்)

1. Short stories - Leo Tolstoy
2. Anton chekov short stories
3. The Double - Fydor dostoyevsky (படித்துக் கொண்டிருக்கிறேன்)
4. Little prince - Antonie de saint exupery
5. R.K.Narayanan - Malgudi Days
6. Aeosop's Fables

பட்டியலில் படிக்க காத்திருக்கும் புத்தகங்கள்:

1. Anna karenina & war and peace- Leo Tolstoy
2. Crime and Punishment, The idiot, The possessed - Fydor dostoyevsky
3. Selected short stories - Maxim Gorky
4. One hundred year of solitude - Marquez
5. எஸ்.ராவின் உபபாண்டவம்
6. புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
7. தேடி - நா. கோவிந்தசாமி

சிங்கப்பூரில் புத்தகங்களை தாராளமாக அள்ளி வழங்கி இன்னொரு நூலகமாக நடமாடிக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அன்புக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த விளையாட்டு தொடர்ச்சியாக எனக்கு தெரிஞ்ச அல்வாசிட்டிக்காரங்களையே கூப்பிடுகிறேன்.

1. அல்வாசிட்டி.சங்கர்
2. அல்வாசிட்டி.சம்மி
3. நவன் பகவதி
4. ரோசா வசந்த்
5. கே.ஜே.ரமேஷ்

சரிங்க, நிறைய எழுது எனக்கே அறுக்குது. அப்புறம் பார்க்கலாம்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இப்போது தான் கவனித்தேன்.

பத்மா அர்விந்த அவர்களும் என்னை புத்தக பிடிச்சி விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவர்களுக்கு மிக்க நன்றி.
 
நல்ல பதிவு விஜய்
பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டால் தொடரும்" படித்தது உண்டா?
எஸ்.ராவின் "துணை எழுத்து" உங்களை பாதித்ததா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
vijay,
nanRi :)
arumaiyAga (nErmaiyAgavum !!!) ezuthiyirukkiRIrkaL.
suvArasiyamAka irunthathu.
sila puththakangkaLai enakku aRimukam seythuLLIrkaL.
nanRi !!!
 
hello Vijay,

good post.You took me back to my golden days. I use to read whatever books i landed on.Of course wasted a few years in just reading mills and boons and harlequin romance.I hardly find time to read now...have you tried?? Lloyd.c. Douglas (Citadel is my favorite)and Nevil Shute(Ruined city,A town Like Alice)

Thanks
Radha Sriram
 
//பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//

ஆஹா! நீ நம்மாளுய்யா!!
 
vijay
I was working at wall street then! I used to travel in NJTransit and take path.
 
விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish.com/?p=133

--
நவன் பகவதி
 
மணிக்கூண்டு சிவா,

//பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டால் தொடரும்" படித்தது உண்டா?
எஸ்.ராவின் "துணை எழுத்து" உங்களை பாதித்ததா?//

பி.கே.பி படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அது என்னோட பதின்ம வயதில் தான் என்று சொல்ல வேண்டும். இப்போது இல்லை.

எஸ்.ராவின் எழுத்தை முதன் முதலில் படித்தது துணையெழுத்தில் தான். பாதிக்காமல் இருக்குமா. அதற்கே தனிப்பதிவு போட வேண்டும்.

இன்னும் ஆழமாக பாதித்த புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கலாம். பதிவு நீளம் தான் படிப்பவரின் பொறுமையை சோதிக்கும் என்பதால் அத்தோடு நிறுத்திவிட்டேன்.

நன்றி.
 
பின்னூட்டியதற்கு நன்றி பாலா.

நன்றி ராதா ஸ்ரீராம்,

// hardly find time to read now...have you tried?? Lloyd.c. Douglas (Citadel is my favorite)and Nevil Shute(Ruined city,A town Like Alice)//

ஆங்கில எழுத்துக்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொன்ன ஆசிரியரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். புத்தக அறிமுகத்திற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது அதையும் படித்து விடலாம்.


//I hardly find time to read now...//

நேரம் கிடைக்கும் போது சரியான நூல் அறிமுகம் கிடைக்காமல் எதுவுமே படிக்க கிடைக்காது. படிக்க கிடைக்கும் போது நேரம் கிடைக்காது.
 
////பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//

ஆஹா! நீ நம்மாளுய்யா!! //

கவிதை என்றாலே 10 அடி தூரம் ஓடும் எனக்கு முத்துகுமார் எழுதிய கவிதைகள் ரொம்ப simplified -ஆக இருந்ததால் ரசித்துப் படித்தேன். அதிலும் 'ங்கோத்தா' என்ற விளித்து ஒரு கவிதை கூட சொல்லியிருப்பார். அது வெகு இயல்பாக ஒரு நண்பனிடன் பேசுவது போல இருந்ததால் பிடித்து போய்விட்டது.
 
காலங்களில் அவள் வசந்தம் என்று வசந்தத்தை (புத்தக)வாசிப்புக்கும் பொருத்தியது அருமையான, நயமான வெளிப்பாடு.

நானும் 'Handle with care' பிரயோகத்தையெல்லாம் சுசீலாவிடமிருந்து தெரிந்துகொண்டதுதான்.

நீங்க நிறைய ரஷ்ய இலக்கியங்கள் படிக்கிறீங்க போல. கண் தெரியாத இசைஞன் கிடைத்தால் படியுங்கள். அதே போல கன்னி நிலம் (virgin land up turned), அவன் விதி இதெல்லாம் அருமையான புத்தகங்கள். கன்னிநிலத்தை எழுதிய ஷோலகோவ் ஒரு நோபல் பரிசும், லெனின் பரிசும் வாங்கியவர் அவரது தான் அமைதியாக ஓடுகிறது நான் படிக்கவேண்டும் என்று நினைத்திருப்பது. கன்னிநிலம் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்ட சோவியத் காலகட்டத்தில் நிகழும். சொத்தின் ஆளுமையை நமக்குள் இருந்து அசைத்து எடுத்து நம்முன் காட்டும். நம் மதங்களை நம்பி மேலுக்கு நாமெல்லாம் எப்படி சொத்தின் மீது பற்று குறைந்தவர்களாக எண்ணிக்கொள்கிறோம் என்று நமக்கு புரியும்.

ஆமாம், நீங்கள் திருநெல்வேலிகாரர், ஆனால் வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களைக் காணோம். கலாப்பிரியாவும் (கவிதை) அருமையானவர். ஆனால் தயவு செய்து வண்ணதாசன் சிறுகதைகள் கிடைத்தால் (வாசிக்கவில்லையானால்) வாசியுங்கள். என்னை விட நீங்கள் மண்ணின் மணத்தால் அதிகம் அனுபவிக்கலாம்.

Little prince எப்படி? எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அதை ஒரு மாதிரி நாடகமாக IISc யில் போட்டோம்.

நான் சிங்காரத்தின் புத்தகத்தைத்தான் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் பதிவு நினைவூட்டியது. நன்றிகள்
 
நன்றி தங்கமணி.

நான் பதிவில் சொன்னபடி இறந்தகாலத்தில் வாசிப்பென்று ஒன்றும் பெரிதாக இல்லை.நூல் ஆசிரியர்கள் அறிமுகமும் மிக மிக குறைவு. இப்போது தான் ஒரு கூட்டம் சேர சேர பல அறிமுகங்கள் தெரிகின்றன. வண்ணதாசன் சிறுகதைகளை சிங்கப்பூர் நூலகத்தில் எடுத்து குறிப்பிட்ட நாளில் படித்து முடிக்காமல் அபராதம் கட்டியது தான் மிச்சம். திரும்ப எடுக்கலாம் என்று பார்த்தால் இன்று வரை என் கையில் கிடைக்கவில்லை.

மானசஜென் இரண்டு கலாபிரியா புத்தகங்களை பரிச்சளித்திருந்தார். என் கையில் இருக்கிறது. படிக்க வேண்டும்.

குட்டி இளவரசன் ரொம்ப பிடித்து போய் விட்டது. அதுவும் நீங்கள் மானசஜென் ரமேஷின் பதிவில் பின்னூட்டத்தில் நீங்கள் கொடுத்த இணைய முகவரியின் வழியாக தான் படித்தேன். அதை மென்புத்தகமாக்கி வைத்துக் கொண்டேன்.

ருஷ்ய இலக்கியங்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் செகாவின் தமிழ்மொழிப்பெயர்ப்பு கதைகளை படித்தவுடன் பிடித்து எல்லோருடைய படைப்புகளையும் இப்போது தான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். 19,20-ம் நூற்றாண்டின் வாக்கில் எழுதப்பட்ட செகாவின் கதைகள் இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்துவதை பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது. சில ரஷ்ய நூல் அறிமுகத்துக்கு நன்றி.
 
நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி -கவிதை தொகுப்பை படியுங்கள்.

நன்றாக இருக்கும்.
 
//நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி -கவிதை தொகுப்பை படியுங்கள்.//

புத்தக அறிமுகத்திற்கு நன்றி ராஜ்குமார்.
 
//விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish.com/?p=133

--
நவன் பகவதி
//

உங்க புண்ணியத்தாலே நாலஞ்சி புத்தகத்தோட அறிமுகம் கிடைத்தது. நன்றி தலீவா. பதிவு அருமை.
 
//தேன் துளி said...
vijay
I was working at wall street then! I used to travel in NJTransit and take path.
//

தேன் துளி,

என்னுடைய parent company வால்ஸ்ட்ரீட்டில் NYSE-க்கு எதிராக இருந்தது. என்னுடைய மேலதிகாரியை காண வரும்போதெல்லாம் 30வது மாடியிலிருந்து NYSE பார்த்து உணர்ச்சி வயப்படுவது உண்டு. வரலாற்று பெருமை வாய்ந்த பணக்கார வீதியான வால் ஸ்ட்ரீட்டுக்கு அடிக்கடி வந்த காலங்களும் உண்டு.

என்னுடைய க்ளையண்ட் சைட் நியூயார்க் ப்ரூக்ளீனில் (Brooklyn) இருந்தது. அங்கு தான் என்னுடைய அலுவலக ஜாகையும். காலையில் 7:30-க்கு முன் NJT-ஐ பிடித்தால் நெவார்க்கில் இறங்கி PATH -ட்ரெய்னை பிடித்து WTC போய் அங்கிருந்து A அல்லது C அல்லது Q சப்வேயில் பயணித்து ப்ரூக்ளினில் இறங்கும் போது காலை 9:15 ஆகிவிடும். விதம் விதமான மனிதர்களை படித்துக் கொண்டே செய்யும் அந்த பயணம் வாழ்க்கையில் என்றுமே மறக்காது.

முதல் விமானம் WTC-ல் முட்டிய நேரத்தில் நான் அங்கு நின்றிருக்க எதோ விபத்து என்று தெரிந்து என்ன விபத்து என்று தெரியாமல் இருக்க, என்ன விபத்து என்பதை அறிய ஒரு உந்துதலில் எஸ்களேட்டரை பிடித்து வெளியே வர, நேரம் ஆகிவிட்டது என்று மயிரிழையில் எடுத்த முடிவால், அலுவலகம் சென்றடைய, இரண்டாம் விமானம் மோத, கொஞ்ச நேரத்தில் என்னுடைய அலுவலக சீட்டிலிருந்து அந்த இரட்டை கோபுரம் இடிந்து விழுவதை என் கண்ணால் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். இதை ஒரு தனிப்பதிவில் பிறகு எழுதுகிறேன்.
 
Thanks moorthy
 
அல்வாவுக்கும், மற்றவர்களுக்கும் நான் பரிந்துரைப்பது,

1. 18ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன். ஹைதராபாத்தின் 1925 - 1950 காலகட்டத்தை பிண்ணனியாகக் கொண்ட நாவல்.
2. சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது - சிவசங்கரி.
3. இது ராஜபாட்டை அல்ல - நடிகர் சிவக்குமார்.
4. அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் - மாத்தளை சோமு. இலங்கையின் ரத்தினச் சுரங்கங்களில் அல்லல்பட்ட தமிழர்களின் கதை.
5. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - தங்கர் பச்சானால் சின்னாபின்னமாக்கப்பட்ட 'சொல்ல மறந்த கதையின்' மூலம்.
6. மாநி - ஹெப்ஸிபா ஜேசுதாசன். பர்மாவில் சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த குமரியைச் சேர்ந்த வனக்கண்காணிப்பாளரின் குடும்பத்தைப் பற்றிய கதை.
7. எட்டுத் திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன் . குமரியில் தொடங்கி மும்பையில் முடியும் racy thriller.
 
நன்றி வெற்றி. வேறுபட்ட வித்தியாசமான புத்தக பட்டியல்

சிவக்குமாரின் 'இது ராஜபாட்டை அல்ல' படித்திருக்கிறேன். ஆனால் முழுவதும் படித்து முடிக்கவில்லை. பரிந்துரைத்த மற்றவைகளை தேடிப்படிக்கிறேன்.
 
//5. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - தங்கர் பச்சானால் சின்னாபின்னமாக்கப்பட்ட 'சொல்ல மறந்த கதையின்' மூலம்.
//

கதைக்கும் படமாக்கப்பட்டதிற்கும் மிகச்சில வித்தியாசங்களே எனக்கு தெரிந்தது, மூன்று மணி நேரத்தில் எடுக்க வேண்டுமென்று பல காட்சிகள் சுருக்கப்பட்டிருந்தன, பலருக்கு நாவலிற்கும் படத்திற்கும் வித்தியாசம் நிறைய தெரிவதற்க்கான காரணம், நாவலில் கதைக்களம் தென் மாவட்டம், பேச்சு மொழி தென் மாவட்டத்தை ஒத்திருக்கும், படத்தில் கதைக்களம் கடலூரைச்சுற்றி... பேச்சு மொழியும் கடலூர் வட்டார மொழி... நான் முதலில் படம் பார்த்துவிட்டு பிறகுதான் கதை படித்தேன்
 
பொதுவாக நாவலை திரைப்படம் ஆக்குவது கொஞ்சம் ரிஸ்கான வேலை. 3 மணி நேரத்திற்குள் கதை சுருக்குவது மிக மிக கடினம். அதுவும் தழுவலாக எடுக்காமல் நாவலையே படமாக்கும் போது புத்தகத்தில் சொல்லும் எல்லாவற்றையும் கொண்டு வருவது முடியாத காரியம.

புத்தகத்தில் வரும் வர்ணைகள் உங்கள் கற்பனைக்கு விடப்படுகிறது. சுதந்திரம் உங்களிடம். அதுவே சினிமா என்று வரும் போது கதையின் ஆசிரியரின் வர்ணிப்பு இருந்தாலும் அது சிதைக்கப் படமால் கேரக்டர் எஸ்டாபிளிஸ்மெண்டில் கொண்டு வருவது முழுக்க முழுக்க இயக்குநரின் கையிலேயே உள்ளது.உங்கள் கற்பனை உருவத்துக்கும் திரை உருவத்துக்கும் வேறுபாடு நிகழும் போது நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

மகேந்திரன் மாதிரி இயக்குநர்கள் இந்த பிரச்சனையே வேண்டாமென்று மூலக்கதையை எடுத்து தன் இஸ்டத்துக்கு மாற்றி படம் எடுத்திருக்கிறார்கள்.இங்கு இயக்குநருக்கும் முழு சுதந்திரம் கிடைக்கிறது.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->